சங்கடப்படாமல் சாப்பிட ‘சாண்ட்விச்’ இருக்கு!

இந்த தலைப்பைப் படித்ததும், சாண்ட்விச் கடைக்கான விளம்பரமா இது என்று நினைத்துவிடக் கூடாது. இன்றைய தேதிக்கு, ’இதுதான் சாண்ட்விச்’ என்று எவருக்கும் அறிமுகப்படுத்தத் தேவையில்லை.

பானிபூரி, மசாலா பூரி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தால், குழந்தைகளே கூட ‘முதல்ல சாண்ட்விச் ஆர்டர் பண்ணுங்க’ என்று சொல்லிவிடுகின்றனர்.

அப்படிப்பட்ட சாண்ட்விச்சின் வரலாறு என்ன என்று தேடிப் பார்த்தால் தலை சுற்றுகிறது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இந்த பூமியில் சாண்ட்விச் வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறதாம்.

அதன் ஒட்டுமொத்தக் கலவையாகவே, இன்று உலகம் முழுவதும் வெவ்வேறு விதமான ’சாண்ட்விச்’கள் தயாரிக்கப்படுகின்றனவாம்!

நமக்குத் தெரிந்த ’சாண்ட்விச்’!

பொதுவாக, சாண்ட்விச் என்றால் நம் மனதில் என்ன தோன்றும்?

இரண்டு ப்ரெட் துண்டுகள் மீது வெண்ணெய் தடவி, புதினா மற்றும் மல்லி சேர்த்த துவையலை பரப்பி, நடுவே கொஞ்சம் கேரட், வெள்ளரி, தக்காளி, வெங்காயத்தை வைத்து, ‘நறுக் மொறுக்’ என்று சாப்பிட வசதியாக உருளைக்கிழக்கு சிப்ஸ் போன்றவற்றையும் இணைத்து தரும் ஒரு உணவுப் பொருள் என்பதே பெரும்பாலானோரின் அபிப்ராயம்.

இந்த காய்கறிக் கலவைக்குப் பதிலாக முட்டை, சிக்கன், மட்டன், பீஃப் போன்றவற்றை நிரப்பலாம்.

புதினா, மல்லி உள்ளிட்டவற்றைச் சேர்த்து அரைக்கும் துவையலுக்குப் பதிலாக மாற்று தேடலாம். வெண்ணெய் தடவுவதற்குப் பதிலாகவும் வேறு வழிகள் கண்டுபிடிக்கலாம்.

மேற்சொன்ன கலவையை அப்படியே சாப்பிடுவதா அல்லது சூடேற்றிச் சாப்பிடுவதா என்பதையும் தீர்மானிக்கலாம்.

ஆதலால், அவரவர் நிலம் சார்ந்து, கலாசாரம் சார்ந்து, புதுவித யோசனைகள் சார்ந்து, பல ஆண்டுகளாகச் சாண்ட்விச்சும் வெவ்வேறு வடிவத்தைப் பெற்றிருப்பதை நம்மால் உணர முடியும்.

காலையில் அவசரமாக வேலைக்குச் செல்வது, மாலையில் சோர்வுடனும் சோம்பேறித் தனத்துடனும் வீடு திரும்புவது என்றாகிவிட்ட சூழலில், எளிதாகச் சாப்பிடுவதற்கான ‘வஸ்து’வாகவும் சாண்ட்விச்சே விளங்குகிறது.

மேற்கத்திய பாணி வாழ்க்கை மீது ஈர்ப்பு கொண்ட பலர் இதனை மதிய உணவாகவும் கூட எடுத்துக்கொள்கின்றனர்.

இதனைச் சாப்பிட்டால் கை கழுவத் தேவையில்லை எனும் எண்ணம் கூட அதன் பின்னிருக்கிறது. அதனாலேயே, ‘சங்கடப்படாம சாப்பிடுங்க, இது சாண்ட்விச் தான்’ என்ற பேச்சுகளும் ரொம்பவே சகஜம்.

அப்படிப்பட்ட பல சிறப்புகளைக் கொண்ட இந்த சாண்ட்விச் முதன்முறையாகத் தயாரிக்கப்பட்டது எப்போது? இக்கேள்விக்குப் பதில் சொல்வது கடினம்.

மின்சாரம் முதலான பல கண்டுபிடிப்புகளைப் போல, இதுவும் தற்செயலாக யாரோ ஒருவரின் மூளையில் உதித்து, பின்னர் அந்த யோசனை பலரால் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றப்பட்டு, இறுதியாக ஒரு வடிவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

வரலாற்றில் ‘சாண்ட்விச்’!

சாண்ட்விச் குறித்து வரலாற்றில் பல தகவல்கள் சொல்லப்படுகின்றன.

கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் பாபிலோன் பகுதியில் வாழ்ந்த ஹிலெல் எனும் யூத மதத் தலைவர், இரண்டு பிரெட் துண்டுகளுக்கு நடுவே இளம் ஆட்டிறைச்சியோடு சில மூலிகைகள், பாதாம் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த கொட்டைகள், ஆப்பிள் துண்டுகளை வைத்துச் சாப்பிட்டால் புத்துணர்வு கிடைக்குமென்று கூறியிருக்கிறார்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்கூட்டியே கணித்ததும் இவர் தான் என்கின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பிரெட் துண்டுகள் மீது வெண்ணெய் தடவிச் சூடேற்றிச் சாப்பிடும் வழக்கம் இருந்ததாக ரோமானியர்கள் எழுதி வைத்த குறிப்புகள் கூறுகின்றன.

மேற்சொன்ன இரண்டிலும் இருந்து ஐரோப்பா முழுவதுமே ‘சாண்ட்விச்’ பயன்பாடு பரவலாகிப் பல நூறு ஆண்டுகளாகப் பல்வேறு அவதாரங்களை எடுத்ததை உணர முடிகிறது.

18ம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்பே, இங்கிலாந்தில் சாண்ட்விச் சாப்பிடும் வழக்கம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

அங்கிருந்தே அது அமெரிக்காவுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முன்பே இத்தாலியில் பானினி சாண்ட்விச்கள் உண்ணும் வழக்கம் இருந்துள்ளது.

ஆங்கிலேய ஆட்சியாளர் ஜான் மாண்டேகு மூலமாகவே சாண்ட்விச் சாப்பிடும் வழக்கம் பரவலானதாகச் சொல்லப்படுகிறது.

சீட்டாட்டத்தில் ஈடுபாடு கொண்ட அவர், நடுநடுவே கைகளைக் கழுவாமல் எளிதாகச் சாப்பிட ஒரு உணவு இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பியிருக்கிறார்.

அதனால், இரண்டு பிரெட்களுக்கு நடுவே இறைச்சியை வைத்துச் சாப்பிடத் தந்திருக்கின்றனர் சமையலர்கள்.

இங்கிலாந்தில் உள்ள ‘சாண்ட்விஸ்’ எனும் நகரில் மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதனைக் கேள்விப்பட்டபிறகு, மற்ற ஊர்க்காரர்கள் சும்மாயிருப்பார்களா?

‘சாண்ட்விஸில் கிடைப்பதைப் போல’ என்று சொல்லி ஆர்டர் செய்யத் தொடங்கிவிட்டனர்.

பின்னர் அதுவே அந்த உணவுப்பொருளின் பெயராக மாறிவிட்டது.

சாண்ட்விச் சாப்பிடும் வழக்கம் பற்றி பிரிட்டன் நாடாளுமன்றவாதி எட்வர்ட் கிப்பன் இதனைத் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறாராம்.

இந்த தகவல்களைத் தாண்டி, பிரெட் கண்டுபிடிக்கப்பட்டபோதே சாண்ட்விச் சாப்பிடும் வழக்கமும் உருவாகியிருக்க வேண்டும் என்று அடித்துச் சொல்கிறது சமையலர்கள் உலகம்.

மேற்சொன்னவற்றில் இருந்து ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. நியூஸ்பேப்பரைக் கிழித்து கைபடாமல் வடை, பஜ்ஜி குவியலில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்போமே, அது போன்ற எண்ணமுடைய யாரோ ஒரு கனவான் தான் சாண்ட்விச்சையும் கண்டுபிடித்திருக்க வேண்டும்.

எதற்கு இந்த பேச்சு?

’சரி, திடீரென்று சாண்ட்விச் மீது உங்களுக்கென்ன அக்கறை’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நவம்பர் 3ஆம் தேதியன்று ‘உலக சாண்ட்விச் தினம்’ கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் விதவிதமாக சாண்ட்விச்கள் சாப்பிட்டு, அதனைக் கொண்டாட வேண்டும் என்கிறது மேற்குலகம்.

’கடை சாப்பாடு எனக்கு ஒத்துக்காது’ என்பவர்கள், நேரடியாகச் சந்தைக்குச் சென்று பிரெட், வெண்ணெய், புதினா முதல் உங்களுக்குப் பிடித்த காய்கறிகள் அல்லது இறைச்சியை வாங்கிக்கொண்டு வீட்டிலேயே ‘சாண்ட்விச்’ செய்து பார்க்கலாம்.

சாண்ட்விச் மேக்கர் இல்லை என்பவர்கள் தோசைக்கல்லில் சுட்டு சாப்பிடலாம். ‘ஆடு மாடெல்லாம் சூடு பண்ணியா சாப்பிடுது’ என்பவர்கள் அப்படியே ‘ராவாக’ உள்ளே தள்ளலாம்.

மொத்தத்தில், ‘சாண்ட்விச்சுக்கு நன்றி’ என்று சொல்லும்விதமாக உங்களது கொண்டாட்டம் அமைய வேண்டும்.

என்ன ப்ரெண்ட்ச், ‘உலக சாண்ட்விச் தின’த்தை அமோகமாக கொண்டாடிடலாமா?!

-மா.பா

Comments (0)
Add Comment