கவிஞர் வாலியின் அனுபவம்:
மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படமாகிய ‘எங்கள் தங்கம்’, எம்.ஜி.ஆர். நடிப்பில் கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் உருவானது.
இதில் ‘நான் செத்துப் பிழைச்சவன்டா – எமனைப் பார்த்து சிரிச்சவன்டா’ என்று ஒரு பாடலை எழுதினேன்.
எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு மீண்டு வந்திருந்த நேரம் அது. ஆகவே, அந்தப் பல்லவி அந்நேரத்திற்கு மிகமிகப் பொருத்தமாக இருந்தது.
முழுப் பாடலையும் எழுதி முடித்த பிறகு, பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டுவதற்காக, நானும் நண்பர் முரசொலி மாறனும் ஜெமினி ஸ்டூடியோ சென்றோம்.
மாறன் வெளியே தங்கிவிட நான் மட்டும் எம்.ஜி.ஆரின் மேக்கப் ரூமிற்குள் சென்றேன்.
அப்போது எம்.ஜி.ஆர். ‘நீரும் நெருப்பும்’ படப்பிடிப்பிற்கான ஒப்பனையில் இருந்தார்.
முழுப் பாடலையும் நான் எம்.ஜி.ஆரிடம் பாடிக் காண்பித்தேன். அந்தப் பாடலில், உயிருக்கு அஞ்சாது நாட்டுக்கு உழைத்தோர் பற்றியெல்லாம் சரணங்களில் எழுதியிருந்தேன்.
எம்.ஜி.ஆர். பாட்டைக்கேட்டுவிட்டு வெகுவாக சந்தோஷப்பட்டார். நான் விடைபெற்றுக் கிளம்பும்போது என்னை மறுபடியும் தன் ரூமுக்குள் அழைத்தார்.
‘வாலி! நாட்டுக்காக, உயிரைத் துச்சமா நினைச்சவங்களப்பத்தி இந்தப் பாட்டுல எழுதியிருக்கீங்க… அதெல்லாம் நல்லாயிருக்கு… இருந்தாலும், தமிழ் மொழிக்காகத் தண்டவாளத்துல தலை வெச்சுப் படுத்தவரு, நம்ம கலைஞர்… அவரைப்பற்றி ஒரு சரணம் எழுதி இந்தப் பாட்டுல சேத்துடுங்க…’ என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டுக்கொண்டார்.
அவர் சொன்னது போலவே பாட்டின் இரண்டாவது சரணத்தை நான் அமைத்தேன்.
(அந்த இரண்டாவது சரணம்: ‘ஓடும் ரெயிலை இடைமறித்து – அதன் பாதையில் தனது தலை வைத்து, உயிரையும் துரும்பாய்த்தான் மதித்து – தமிழ்ப் பெயரை காத்த கூட்டமிது’)
இந்தப் படத்தில் என் பாட்டில் கலைஞரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று எம்.ஜி.ஆர். விரும்பியதுபோல், இதே படத்தில் இன்னொரு பாட்டில் எம்.ஜி.ஆரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று கலைஞர் விரும்பினார்.
படத்தின் கதாநாயகனாகிய எம்.ஜி.ஆர், ‘நான் அளவோடு ரசிப்பவன்…’ – என்று பாடுவதாக ஒரு பாடலை நான் ‘எங்கள் தங்கம்’ படத்தில் எழுதினேன்.
‘நான் அளவோடு ரசிப்பவன்’ என்று முதல் வரியை எழுதிவிட்டு, இரண்டாவது வரியை சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, என் பக்கத்தில் அமர்ந்திருந்த கலைஞர்,
‘வாலி! இரண்டாவது வரியை – ’எதையும் அளவின்றி கொடுப்பவன்’ என்று போட்டா நல்லாயிருக்குமே!’ என்று என்னிடம் சொன்னார். நானும் அவ்வாறே எழுதினேன்.
இப்படிக் கலைஞரும், எம்.ஜி.ஆரும் பரஸ்பர அன்பு பாராட்டிய காலம் அது.
இந்த இடத்தில், இன்னொரு உண்மையையும் நான் சொல்ல வேண்டும்.
அண்ணன் எம்.ஜி.ஆர். எந்தக் காலத்திலும், தன்னுடைய இமேஜை உயர்த்துமாறு பாடல் வரிகளை நான் எழுதவேண்டும் என்று என்னிடம் சொன்னதேயில்லை.
‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’, ‘நான் செத்துப் பிழைச்சவண்டா’, ‘நான் ஆணையிட்டால்’ போன்ற பாடல்களெல்லாம் நானாகத் தன்னிச்சையாகப் புனைந்ததே தவிர, எம்.ஜி.ஆர். எழுதச் சொல்லி எழுதியவை அல்ல; இது கடவுள் சத்தியம்.
இன்னும் உண்மையைக் கொஞ்சம் அகலமாகச் சொல்லப்போனால் -தன்னை `வள்ளல்’, `மன்னன்’ என்றெல்லாம் எழுதப்படுவதை அவர் கூச்சத்தோடு என்னிடம் மறுத்திருக்கிறார்.
அவர்பால் எனக்கு இருந்த அன்பின் காரணமாகவும், விருந்தோம்பல், எளிமை முதலிய அவரது உயர்ந்த பண்புகளை உடனிருந்து பார்த்ததாலும் -நானே அவ்வாறு அவரைப் போற்றிப் புகழ்ந்து பாடல்கள் எழுதினேன்.’
– கவிஞர் வாலி
நன்றி : முகநூல் பதிவு