அடுத்து குட்டிக்கதைகள் சொல்லப் போவது யார்?

முன்பெல்லாம் மேடையில் பேசும்போது பலர் குட்டிக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆன்மிகவாதிகளான பலர் குட்டிக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள். கவிஞர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். கலைஞர் சொல்லியிருக்கிறார். குமரி அனந்தன் சொல்லியிருக்கிறார்.

அதற்கடுத்து ஜெயலலிதா சொல்ல, ரஜினியும் குட்டிக் கதைகளைச் சொல்லியிருக்கிறார்.

இந்தக் கதைகளுக்கு அர்த்தம் சொல்லி விளக்குவதற்கென்றே விஷூவல் மீடியாக்களில் பலர் அவதாரம் எடுத்துவிட்டார்கள்.

அண்மையில் ‘ஜெயிலர்’ படவிழாவின் போது கழுகு, காக‍ம் என்று ஒரு குட்டிக் கதையைச் சொல்ல, அரங்கமே கைதட்டலால் நிறைந்தது. பலர் அதற்கு அவரவர் பார்வையில் விளக்கம் சொன்னார்கள்.

இப்போது ‘லியோ’ படம் வந்த பிறகு விஜயும் அவர் பங்கிற்கு ஒரு குட்டிக் கதையை – அப்பா, மகன், காடு, கழுகு என்று சொல்ல, அதற்கும் மாறி மாறி விளக்கவுரை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உடனே அவை தொலைக்காட்சி சேனல்களில் விவாத‍த்திற்கேற்ற தீனிகளாக மாறிப் போகின்றன. பார்த்துக் கொண்டிருக்கிறவர்களும், காதில் கேட்டவர்களும் களைப்படைந்து போகிறார்கள்.

எதனால், எந்த அர்த்தத்தில் அவர் அந்தக் குட்டிக் கதையைச் சொன்னார் என்று குழம்பிப் போகிறார்கள்.

இனிமேலாவது பொதுவெளியில் குட்டிக்கதையைச் சொல்கிறவர்கள் – கதைக்கான விளக்கத்தையும் அவர்களே கொடுத்துவிட்டால், அர்த்தச் செறிவான விவாதங்களைத் தவிர்க்க வாய்ப்பிருக்கும்.

பற்றி எரிந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரைப் பற்றி எல்லாம் அவரவர்கள் கவலையோடு பகிர்ந்து கொண்டிருக்கும் போது, இங்கு மட்டும் விவாதிப்பதற்கு எப்படிப்பட்ட ‘சப்ஜெக்ட்’கள் கிடைக்கின்றன?

– துரை

Comments (0)
Add Comment