தமிழ் மக்களின் வாழ்வியலோடு ஒன்றாக கலந்தது சினிமா பாடல்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமா பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பாடல்களை மாத்திரம் அல்ல பாடகர்களையும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அப்படி தன்னுடைய மயக்கும் குரலால் கேட்போரை கரைய வைக்கக்கூடிய பாடகிகளில் ஒருவர் பின்னணி பாடகி மதுஸ்ரீ.
பெங்காலியை சேர்ந்த மது ஸ்ரீ பின்னணிப் பாடுவதற்காக மதுஸ்ரீ மும்பை வந்தார். ஆரம்பத்தில், அவர் தனது இசையை குறுந்தகடுகளில் பதிவு செய்து பாலிவுட்டின் குறிப்பிடத்தக்க நபர்களுக்கு அனுப்பினார். அப்படி ஒரு குறுந்தகடு ஜாவேத் அக்தரை அடைந்தது. ஜாவேத் அக்தரின் பரிந்துரையின் பேரில், ராஜேஷ் ரோஷனின் மோக்ஷாவின் மூலம் தனது பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி என பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். 2003ல் இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் வெளியான “ஆஹா எத்தனை அழகு” படத்தில் நிலவே நிலவே… என்ற பாடலில் உதித் நாராயணனோடு இணைந்து பாடியது தான் தமிழ் சினிமாவில் மது ஸ்ரீ அறிமுகமான முதல் பாடல்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ஆயுத எழுத்து’ படத்தில் இடம் பெற்ற ‘சண்டக்கோழி கோழி…’ பாடல் தான் மது ஸ்ரீ குரலில் சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற முதல் பாடல். அதை தொடர்ந்து மயிலிறகே, டிங் டாங் கோயில் மணி, வாஜி வாஜி வாஜி, மருதாணி, கண்ணன் வரும் வேளை, ரகசிய கனவுகள், உன் பெயரே தெரியாது என ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அவரின் கொஞ்சும் தமிழ் உச்சரிப்புக்கே ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.
அந்த வரிசையில் சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம் பெற்ற பிளாக் பஸ்டர் ஹிட் பாடலான ‘மல்லிப்பூ வைச்சு வைச்சு வாடுதே…’ பாடலை பாடினார். இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இப்பாடலுக்கு ஏராளமான விருதுகளையும் வாங்கியுள்ளார்.
இதேபோல் ஆல் டைம் ஃபிலிம் வெர்சடைல் பின்னணி பாடகிக்கான லயன்ஸ் கோல்ட் விருதின் 20வது எடிஷனை அவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
– நன்றி ஏபிபி இதழ்