விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல புதிய படங்களை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக தயாரிக்க முடிவு செய்துள்ளார் கமல்ஹாசன்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் 21-வது படம், சிலம்பரசனின் 48-வது திரைப்படம், லவ் டுடே படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதனின் 2-வது படம் என மூன்று படங்களும், கமல்ஹாசன் அடுத்தடுத்து நடிக்க உள்ள 233 மற்றும் 234 படங்களையும் கமலே தயாரித்து நடிக்க உள்ளார்.
இப்படி ஒட்டுமொத்தமாக 5 படங்களை தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் அடுத்தடுத்து தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன்.
இதில் விக்னேஷ் சிவன் இயக்க, பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மட்டும் படக்குழு இன்னும் வெளியிடவில்லை.
படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிப்பது உறுதியான நிலையில், படப்பிடிப்பை டிசம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கமல் பிறந்தநாளை முன்னிட்டு, நவம்பர் 7-ம் தேதி வெளியிடவும் வாய்ப்புள்ளது.
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது.
கமல்ஹாசன் தயாரிக்கும் படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் கட்டாயம் இந்தப் படத்தில் நடிக்க ஜான்வி ஒப்புக்கொள்வார் எனவும் கூறப்படுகிறது.
– தேஜேஷ்