‘மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரியது’ என்றொரு பழமொழி எல்லா ஊர்களிலும் பயன்பாட்டில் உண்டு.
காலம், இடம், எண்ணிக்கையைத் தாண்டி இந்தப் பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு படைப்பும் ஆச்சர்யத்தோடு நோக்கப்படும்.
அந்த வகையிலேயே, பி.எஸ்.வினோத்ராஜ் தந்திருக்கும் ‘கூழாங்கல்’ படத்தையும் நாம் ரசிக்க வேண்டியிருக்கிறது.
தொடரும் கதை!
வேலு என்ற சிறுவனைத் தேடி, அவனது தந்தை கணபதி ஒரு ஆரம்பப் பள்ளியினுள் நுழைகிறார். அவனைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.
இருவரும் ஒரு மினிபஸ்ஸில் ஏறுகின்றனர். அதில், அவர்களைப் போலவே சில மனிதர்கள் இருக்கின்றனர். செல்லும் வழியில், வேறொரு பயணியோடு கணபதிக்கு மோதல் ஏற்படுகிறது.
‘நீ இப்போ வரலைன்னா அப்பா வேறொரு கல்யாணம் பண்ணிக்குவாருன்னு அம்மாகிட்ட சொல்லு’ என்று மகனை அனுப்பி வைக்கிறார் கணபதி.
வேலுவைப் பார்த்ததும், அம்மா வழிப் பாட்டி அணைத்துக் கொள்கிறார். சாப்பாடு கொடுக்கிறார்.
மகன் போய் நெடுநேரமாகிவிட்டதே என்று ஆத்திரமுறும் கணபதி, அங்கு வருகிறார். அவரது குடும்பத்தினரோ, ‘பிள்ளைய தூக்கிட்டு அவ அப்பவே போயிட்டா’ என்று பதிலளிக்கின்றனர்.
அதற்குள், மனைவியின் குடும்பத்தினரைத் தரக்குறைவாகப் பேசி தாக்குதலில் ஈடுபடுகிறார் கணபதி.
மீண்டும் ஊர் திரும்புவதற்காகச் சாலையில் தந்தையும் மகனும் காத்திருக்கின்றனர். அப்போது, தந்தை கொடுத்த பணத்தைக் கிழித்தெறிந்துவிட்டு பொட்டல் காட்டுக்குள் ஓடுகிறான் வேலு.
பாதி வழியில் தானாக நின்று, கணபதியிடம் அடி வாங்குகிறான். அப்போதும், அங்கேயே நின்றுவிடாமல் தந்தையைத் தொடர்ந்து செல்கிறான்.
வீடு திரும்பும் கணபதி, மகளைத் தூக்கிக்கொண்டு மனைவி வந்ததை அறிகிறார். வாசலில் இருக்கும் தனது தாயிடம், ‘அவ எங்கே’ என்கிறார். ‘தண்ணி எடுக்க போயிருக்கா’ என்கிறார் அந்த மூதாட்டி.
வறண்ட பாலைவனமாகக் காட்சியளிக்கும் ஆற்றுப்பரப்பில், ஏழு அடிக்கும் மேலே தோண்டப்பட்ட பள்ளத்தில் அமர்ந்துகொண்டு, ஊறி நிற்கும் நீரைக் கொஞ்சமாக மொண்டு குடத்தில் ஊற்றுகிறார் ஒரு பெண்மணி.
அவருக்குப் பின்னே பெருங்கூட்டமே காலி குடங்களுடன் காத்துக் கிடக்கிறது. அதில், வேலுவின் தாயும் இருக்கிறார் என்பதோடு படம் முடிவடைகிறது.
சரி, இந்த கதைக்கும் கூழாங்கல் என்ற தலைப்புக்கும் என்ன சம்பந்தம்? ஒரே ஒரு ஷாட்டில் அதற்குப் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ். ‘ஓவ்.. ஓவ்..’ என்று கத்தாத குறையாக சினிமா ரசிகர்களைக் குதூகலத்தில் ஆழ்த்தும் இடம் அது.
அந்த இடமே, இந்த நிலத்தில் இது போன்ற கதைகள் காலம்காலமாகத் தொடர்ந்து வருகின்றன என்பதை உணர்த்துகிறது.
கவித்துவமான காட்சியாக்கம்!
துல்லியமான ‘போகஸ்’ உடன் நீளமான ஷாட்களைக் கவனமாகப் படம்பிடித்திருக்கிறது விக்னேஷ் குமுலை மற்றும் ஜெய பார்த்திபனின் ஒளிப்பதிவு.
அதிலும், வெட்டவெளியில் பல மீட்டர் உயரத்தில் டாப் ஆங்கிளில் கதாபாத்திரங்களின், பேருந்தின் நகர்வைக் காட்டியதெல்லாம் மிரள வைக்கின்றன. அதில் விஎஃப்எக்ஸ் பங்கு எவ்வளவு என்று யோசிக்க வைத்திருக்கிறது அவர்களது பங்களிப்பு.
இயக்குனர் காட்டும் உலகத்தை ரசிகர்கள் அப்படியே உள்வாங்க வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறது கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு.
கனகச்சிதமாகச் செதுக்கப்பட்ட சிற்பம் போன்று, கதையில் இருந்து துளி நேரம் கூட காட்சியாக்கம் விலகாத அளவுக்கு ஷாட்களை அடுக்கியிருக்கிறது.
பொதுவாக, ஒரு படத்தில் கூடுதலாக அழுத்தம் தேவைப்படும் காட்சிகளில், தொய்வான இடங்களில் பின்னணி இசை நிரப்பப்படும். பல கமர்ஷியல் படங்களில் அந்த மாயாஜாலத்தை செய்திருக்கிறார் யுவன்சங்கர் ராஜா.
கூழாங்கல் படத்தில் அவரது இசை எங்கு வருகிறது என்றே நம்மால் பிரித்தயறிய முடியவில்லை. அந்த அளவுக்கு மிகச்சன்னமாக, நுணுக்கமாகத் தனது இசையைக் கலந்திருக்கிறார்.
நஜன் ஊட், சிஞ்ஜுவின் கலை வடிவமைப்பில் எது உண்மை, எது பொய் என்று நம்மால் பிரித்தறிய முடியவில்லை. அதிலும் எலியை தீயில் வாட்டுவதாகக் காட்டப்படும் ஷாட்டில் வியப்பு மேலிடுகிறது.
இன்னும் ‘லைவ் சவுண்ட்’ ஒலிப்பதிவு, சூரிய ஒளியின் தகதகப்பைச் சிலாகிக்கும் டிஐ, அழகியல் நோக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள விஎஃப்எக்ஸ் என்று ஒவ்வொன்றும் மிகச்சிறப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள பி.எஸ்.வினோத்ராஜ், செவ்வியல் அடையாளம் கிடைக்க வேண்டுமென்ற நோக்கில் கவித்துவமாக இதனைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
மிக முக்கியமாக, பசுமை நிறைந்து கிடக்கும் வயல் வெளிகளையும் பொங்கும் நீர் பிரவாகத்தையுமே கிராமத்து அழகாக முன்னிலைப்படுத்தும் சினிமா உலகில் ஒரு வறண்ட பிரதேசத்தைக் காட்டி, ‘எங்கள் வாழ்வோடு கலந்த அழகு நிலம் இது’ என்கிறார்.
அது மட்டுமல்லாமல், தான் எடுத்துக்கொண்ட கதையைப் பல கதாபாத்திரங்களின் வழியே சொல்லிச் சென்றிருக்கிறார்.
முதன்மை பாத்திரங்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தன, இனி வாழப் போகின்றன என்பதையும் நமக்கு உணர்த்துகிறார். அதனால், சில நொடிகள் வரும் பாத்திரங்களும் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன.
கொரோனா காலத்திற்கு முன்பே தயாரான இப்படம், இப்போதுதான் ரசிகர்களை வந்தடைந்திருக்கிறது. சோனிலிவ் அதைச் சாதித்திருக்கிறது.
பொறுமை தேவை!
வேலுவாக நடித்த செல்லபாண்டி மற்றும் கணபதியாக நடித்த கருத்தடையான் உட்பட மொத்தப்படத்திலும் சுமார் 100 பேர் இடம்பெற்றிருந்தால் அதிகம்.
ஆனால், ஒரு ஷாட்டில் வரும் மனிதர்கள் வழியாகவும் தான் சொல்ல வந்த கதையை, கருத்தை முன்வைத்திருக்கிறார் இயக்குனர். அதுதான் இந்த படத்தின் ஆகப்பெரிய சிறப்பு.
கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஒரு கல் மண்டபத்தில் சிலர் படுத்து உறங்கிக் கொண்டிருக்க, சிலர் தேமேவென வெறித்துப் பார்த்தவாறிருக்க, ஆறேழு பேர் சீட்டாடுவதாக ஒரு காட்சி படத்தில் உண்டு.
அவர்களில் ஒருவரிடம் கடன் வாங்கும் கணபதி பாத்திரம், ஒரு பெட்டிக்கடையில் மது வாங்கி அருந்துவதாகவும் காட்டப்படும்.
மினிபஸ்ஸில் இரண்டு ஆண்கள் உக்கிரமாகச் சண்டையிடுவதால், ஒரு பச்சிளங் குழந்தை கண் விழித்து அழும். உடனே, அந்த தாய் பாதி வழியில் இறங்கி ஒரு முள்மரத்தின் அடியில் அமர்ந்து பால் கொடுப்பார்.
அதே பஸ்ஸில் கோயிலுக்குச் சென்றுவிட்டு சந்தனம் தேய்த்த மொட்டைத் தலையுடன் வரும் குடும்பம், சீர்வரிசைக்குப் பாத்திரங்கள் வாங்கிக்கொண்டு செல்லும் பெண்கள், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ள முதியோர், ஆசைகளுடன் உலகை நோக்கும் சிறுமி என்று மிகச்சில பாத்திரங்கள் காட்டப்பட்டிருக்கும்.
அவ்வளவு ஏன், வழியில் தண்ணீர் குடம் தூக்கிவரும் பெண்ணுக்கு ஹெட்செட் மாட்டியவாறிருக்கும் ஒரு வாலிபர் பஸ்ஸில் ஏற உதவுவார்.
இன்னும் எலியை வேட்டையாடித் தின்னும் குடும்பம், புதிதாகத் திருமணமான ஆசிரியர் மற்றும் அவரது கணவர், சந்தைக்குத் தனியாகச் செல்லும் பெண்கள் தொடங்கி காய்ந்த முள்ளை வெட்டி அடுக்கும் ஒரு சாதாரண பாத்திரம் வரை அனைத்துமே, பிரதானமாகக் காட்டப்படும் குடும்பத்தின் வெவ்வேறு பரிமாணங்களாகத் தோற்றமளிப்பதே இந்த ‘கூழாங்கல்’லின் சிறப்பு.
மிக முக்கியமாக, வரும் பாதையில் ஒரு பெருங்கல்லில் சாந்தி, லட்சுமி, வேலு என்றிருக்கும் பெயர்களை அடுத்து கணபதி என்ற தனது தந்தையின் பெயரை எழுதி முடிக்கும் அந்த சிறுவன் பாத்திரம்.
தாயுடன் சண்டையிட்டு அடித்து துரத்திய தந்தையின் மீதான கோபம் அத்தோடு முற்றுப்பெற்று விடுவதைச் சொல்லும் கவித்துவமான இடம் அது.
இத்தனை சிறப்புகள் அடங்கிய இப்படத்தைக் காணக் கொஞ்சம் பொறுமை வேண்டும்.
வெற்றிலை பாக்கு இடிக்கும் பாட்டியைச் சில நிமிடங்கள் காட்டுவதே கலைப்படங்கள் என்று இன்றும் சொல்வோர் சிலர் உண்டு; அச்சொற்களைப் போலவே, கூழாங்கல்லும் நம்மை ரொம்பவே சோதிக்கிறது.
ஆனால், பொறுமை காத்து பார்த்து முடித்தால் நமக்குள் நிறையும் பரவசம் இருக்கிறதே, அது ‘அடடா.. அடடா!’ ரகம்.
அதன்பின் மெல்லக் கண்களை மூடி அசைபோட்டால், அந்த வறண்ட நிலத்தில் காலம்காலமாகத் தொடரும் பல மனிதர்களின் வாழ்க்கை நமக்குள் ஊற்றெடுக்கும். அதற்காகவே, இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜை வாழ்த்தி வரவேற்கலாம்!
– உதய் பாடகலிங்கம்