ஊர் சுற்றிக் குறிப்புகள்:
சில விஷயங்களைக் கேட்கும்போதே படபடப்பாக இருக்கும். கொரோனாவால் உலக அளவில் பலரும் கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, பலரையும் தடுப்பூசி போடச் சொன்னார்கள்.
பெரும்பாலானவர்கள் அந்த எச்சரிக்கைகளுக்கு மதிப்புக் கொடுத்துத் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். அதன் விளைவுகள் பற்றிச் சிலர் எச்சரித்த போதும், அவர்கள் தான் கிருமிகளைப் போலப் பார்க்கப் பட்டார்கள்.
நம் நாட்டின் பாரம்பரிய மருந்துகளை மாற்றாகப் பரிந்துரைத்தவர்களை அந்நியனைப் போலப் பார்த்தார்கள்.
உலக அளவில் ஏகப்பட்ட உயிர்கள் கொரானாவுக்குப் பலியாகின. இவ்வளவு எண்ணிக்கையில் உலக நாடுகளில் உயிரிழந்த போதும், கொரோனா எங்கிருந்து உருவாகி இவ்வளவு நாட்டு மக்களைப் பாடாய்ப்படுத்தியது.
இதன் அசலான பின்னணி தான் என்ன என்பது இதுவரை தெளிவாக விளக்கப்படவில்லை.
சீனா மீது புகார் சொல்லப்பட்டாலும், “இது தான் காரணம்” என்பதைத் தெள்ளத் தெளிவாக உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் வரையறுத்துச் சொல்லவில்லை.
நிலவு வரைக்கும் எதிர்கால ஆய்வு செய்ய முடிகிற நமக்கு நிகழ்காலத்தில் இவ்வளவு கோடி உயிர்கள் பாதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய முடியவில்லை அல்லது சொல்ல முடியவில்லை.
கொரோனாவை வைத்துப் பல்லாயிரக்கணக்கான கோடி அளவுக்கு மருத்துவ வியாபாரம் நடந்தது தான் மிச்சம்.
ஓராண்டுக்கு முன்பு மாரடைப்பு வந்து மனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ‘ஓப்பன் ஹார்ட் சர்ஜரி’ பண்ணிக் கொண்டபோதும், அடுத்தடுத்த மருத்துவப் பரிசோதனைகளுக்குச் சென்றபோதும், மருத்துவர்கள் தெரிவித்த விஷயம் “இப்போது மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக இளம் வயதினர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.”
இதைத் தான் தற்போது உறுதிப்படுத்தியிருக்கிறது மத்திய சுகாதாரத் துறை.
இளம் வயதினருக்கு மாரடைப்பு வருவது கொரோனா காலத்திற்குப் பிறகு அதிகரித்திருக்கிறது.
இதனால் உயிரிழக்கவும் நேர்ந்திருக்கிறது – என்று சொல்லியிருக்கிறவர்கள் இன்னொன்றையும் சொல்லி எச்சரித்திருக்கிறார்கள்.
“கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக வேலைப்பளுவுடன் வேலைகளில் ஈடுபட வேண்டாம். அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம்”
இந்த எச்சரிக்கைகள் அவர்களிடம் என்ன மாதிரியான உணர்வை ஏற்படுத்தும்?
முன்பு பசுமைப்புரட்சியை அமல்படுத்தியபோது, விவசாய நிலங்களில் ரசாயனத்தைக் கலக்கவைத்து, அமோக விளைச்சல் என்கிற பெயரில் நிலத்தின் இயல்பையே உருக்குலைத்துப் பின்னர் காலங்கடந்து அதற்கு வருத்தம் தெரிவித்த மாதிரி தான் இதிலும் நடந்து கொண்டிருக்கிறது.
– லியோ