திராவிட இயக்கமும் திரைப்பட உலகமும்!

● திராவிட இயக்கம் – தமிழர்களின் அரசியல், பண்பாட்டு, கலைகளின் மறுமலர்ச்சியை உருவாக்கிய அமைப்பாகும்.

ஆரிய பண்பாட்டு படையெடுப்பை, கலை இலக்கிய தளங்களில் வீரியம் கொண்டு தடுப்பதற்கு, திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற கலைஞர்கள் தங்கள் பங்கை வெகு சிறப்பாக அளித்தார்கள்.

அவர்களின் கலை மூலம் திராவிடக் கொள்கைகள் தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் சென்றடைந்தது.

● திராவிட இயக்க கொள்கைகளை திரைப்படங்கள் மூலம் பரப்பிய அந்த ஆளுமைகள் பற்றி, திராவிட கொள்கைகளின் வரலாற்று ஆய்வாளரும், அறிஞருமான க.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய ஆவண நூல்தான் இந்த அரிய புத்தகம்.

● இந்த நூலில் பட்டியலிடப்பட்ட ஆளுமைகளின் பெயர்களை அறியும் போதே, இந்த நூல் வெறும் ஒரு புத்தகமல்ல, இது ஒரு தகவல் களஞ்சியம் என்பதை உணர முடியும்.

இதிலுள்ள அரிய செய்திகள், திராவிட இயக்கத்தைப்பற்றி ஆராய விரும்பும் எந்த ஆய்வாளருக்கும், மாணவருக்கும் உரித்து தந்த பழம் போல் பேருதவியாக இருக்கும்.

● இது போன்ற அரிய வேலையை, ஆய்வாளர் அய்யா க. திருநாவுக்கரசை விட்டால் செய்வதற்கு வேறு யாரும் கிடையாது. இந்த நூல், இந்த துறையில் அறிவுபூர்வமானதும் அதிகாரபூர்வமானதும் ஆகும்.

● திராவிட இயக்கத்தின் திரை முன்னோடிகளின் பட்டியல்:

1. கலைவாணர் என்எஸ்கே.
2. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
3. பேரறிஞர் அண்ணா.
4. கலைஞர் கருணாநிதி.
5. கவிஞர் கண்ணதாசன்.
6. புரட்சி நடிகர் எம்ஜிஆர்.
7. நடிகவேள் எம்.ஆர்.ராதா.
8. நடிகமணி டி.வி.நாராயணசாமி.
9. நடிப்பிசைபுலவர் கே.ஆர்.ராமசாமி.
10. நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
11.இலட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர்.
12. வளையாபதி முத்துகிருஷ்ணன்.
13. இராம. அரங்கண்ணல்.
14. ஏ.வி.பி. ஆசைத்தம்பி.
15. முரசொலி மாறன்.
16. கே.ஜி.ராதாமணாளன்.
17. புலவர் ஏ.கே.வேலன்.
18. திருவாரூர் தங்கராசு.
19. சலகை ப. கண்ணன்.
20. எஸ்.எஸ். தென்னரசு.
21. ஏ.கே. வில்வம்.
22. சொர்ணம்.
23. இரா. செழியன்.
24. உவமைக் கவிஞர் சுரதா.

● இந்த ஆளுமைகளில் ஒரு சிலர் பற்றிய அரிய குறிப்புகள் இந்த நூலை முழுவதும் படிக்கத் தூண்டும். அவைகளில் சில:

● கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் (நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன்) (1908 – 1957)

கலைவாணர் நடித்து வெளியான முதல் படம் சதிலீலாவதி (1936). பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தால் கவரப்பட்டவர். திரையில் முதன்முதலில் திராவிட இயக்க கொள்கைகளை எடுத்து வைத்த பெருமை கலைவாணருக்கே சேரும்!

● புரட்சி கவிஞர் பாரதிதாசன் (கனக சுப்புரத்தினம்) (1891 – 1964) – திராவிட இயக்க தலைவர்களிலேயே முதன்முதலாக திரைப்படத்திற்காக அழைக்கப்பட்டு சென்றவர் பாரதிதாசன் தான் (1935).

கலைஞரின் பராசக்தியில் வெளியான பாரதிதாசன் எழுதிய – ‘வாழ்க வாழ்கவே, வளமார் எமது திராவிட நாடு’ பாடல்தான் “திராவிட நாடு” என்ற சொல்லை திரையில் மக்கள் முதன் முதலில் கேட்டு மகிழ்ந்தது!

● பேரறிஞர் அண்ணா (காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாத்துரை)
(1909 – 1969)

அண்ணாவின் முதல் நாடகம் சந்திரோதயம் (1943). முதல் படம் நல்ல தம்பி (1949). அண்ணாவின் இரண்டாவது படமான வேலைக்காரி (1949) திராவிட இயக்க கொள்கைகளை சொன்ன முதல் படம்!

● கலைஞர் கருணாநிதி (முத்துவேல் கருணாநிதி) (1924 – 2018) – கலைஞர் உரையாடல் எழுதிய முதல் படம் ராஜகுமாரி (1947). அவரது பராசக்தி திரைப்படம் 1952ம் ஆண்டு வெளிவந்தது.

கதை, திரைக்கதை, உரையாடல்கள், பாடல்கள், தயாரிப்பு என மொத்தம் 77 படங்கள் கலைஞரின் கை வண்ணம்.

● புரட்சி நடிகர் எம்ஜிஆர் (மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்) (1917 – 1987)

எம்ஜிஆரின் முதல் படம் சதிலீலாவதி (1936). கலைஞரின் நட்பால் கதாநாயகனானார். காங்கிரஸ்காரான எம்.ஜி.ஆர், 1953 ஜனவரி 4ம் தேதி தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். திமுகவுக்கு அவரும் அவருக்கு திமுகவும் உதவியாக இருந்தது.

● நடிகவேள் எம்ஆர்ராதா (மெட்ராஸ் ராஜகோபால் ராதாகிருஷ்ணன்)
(1907 – 1979)

எம்ஆர்ராதா திராவிட இயக்க கொள்கைகளை பிரச்சாரம் செய்ததற்காக முதன் முதலாக சிறை சென்ற நடிகர். பெரியாரை பெரிதும் மதித்தார்.

திராவிட இயக்க நாடகங்களுக்காக 52 முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். பெரியாரின் பிறந்தநாளில், 17.09.1979 அன்று அவர் மரணமடைந்தார்.

● நடிகர் திலகம் சிவாஜி கணேசன் (விழுப்புரம் சின்னையா கணேசன் ) (1928 – 2001) –
அண்ணா எழுதிய, சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்ற நாடகத்தில் சிவாஜியாக நடித்தார்.

சென்னையில் 1945ம் ஆண்டு டிசம்பர் 15ம்தேதி நாடகத்திற்கு தலைமை தாங்கிய பெரியார்.

“அந்த கணேசன், சிவாஜி போலவே இருக்கிறான். சிவாஜி கணேசன்” என பாராட்டி அதையே அவரின் பெயராக விளங்க வைத்தார். பராசக்தி படம் மூலம் அறிமுகமானார் (1952).

அந்த படத்தில் கலைஞர் திராவிட கொள்கைகளுக்கு வசனத்தால் வலுவேற்றினார். சிவாஜி நடிப்பால் உயிரூட்டினார்.

● இந்த அரிய தகவல் களஞ்சியம், திரைப்படங்களில் திராவிட இயக்கத்தின் பங்கை சிறப்பாக விளக்குகிறது. ஆய்வாளர் அய்யா க. திருநாவுக்கரசு அவர்கள் என்றென்றும் பாராட்டுக்கு உரியவர்.

– பொ. நாகராஜன். சென்னை

நூல் : திராவிட இயக்கமும் திரைப்படவுலகமும்
ஆசிரியர் : க. திருநாவுக்கரசு
பதிப்பகம் : நக்கீரன் பதிப்பகம்
பக்கங்கள்: 336
விலை: ₹332

Comments (0)
Add Comment