ஒரு படத்தின் டைட்டில் முதல் தியேட்டரில் வெளியானபின் கிடைக்கும் வரவேற்பு வரை, அனைத்திலும் கவனம் செலுத்திய திரை நட்சத்திரம் எம்ஜிஆர். அந்த காலகட்டத்தில், நடிப்பு மட்டுமல்லாமல் இதர துறைகளிலும் அவரைப் போன்று ஈடுபாடு காட்டியவர்கள் எவருமில்லை என்றே சொல்லலாம்.
சமகாலத்தில் மட்டுமல்லாமல், எதிர்காலத் தலைமுறையினரும் ரசிக்கும் விதமாகப் படைப்பைச் செதுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதி காட்டினார்.
அதனாலேயே, இன்றும் அவரது படங்கள் பொழுதுபோக்கு அம்சத்தில் நமக்கு எந்தக் குறையையும் வைப்பதில்லை.
அதேநேரத்தில், சமூகத்துக்குத் தேவையான தகவல்களையும் நீதிகளையும் சொல்வதில் அவர் தயக்கம் காட்டியதே இல்லை. அந்த விஷயத்தில் மாபெரும் உதாரணமாக இருக்கிறது ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படம்.
கே.சங்கர் இயக்கிய இப்படமானது, இந்தியில் சாந்தாராம் தயாரித்து இயக்கிய ‘தோ ஆங்ஹேன் பாரா ஹாத்’ படத்தைத் தழுவி தமிழில் உருவாக்கப்பட்டது.
சாந்தாராம் மீதான மரியாதை!
இந்தி இயக்குனர் சாந்தாராமைத் தனது முன்னோடியாகக் கருதியவர் எம்ஜிஆர். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இருவரது சினிமா வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியானது.
மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரில் பிறந்த சாந்தாராமின் குடும்பம், அவரது பதின்பருவத்தின்போது கர்நாடகாவின் ஹுப்பள்ளிக்கு இடம்பெயர்ந்தது.
அங்குள்ள ரயில்வே பணிமனையில் பிட்டராக வேலை பார்த்த சாந்தாராம், மாலை நேரத்தில் சினிமா திரையரங்கொன்றில் காவலாளியாகவும் இருந்திருக்கிறார்.
அப்போது பார்த்த தாதா சாகேப் பால்கேவின் மௌனப் படங்கள் தான், அவரைத் திரையுலகத்திற்கு இழுத்து வந்தன.
இருபதாவது வயதில், மௌனப் படங்களில் நடிக்கத் தொடங்கினார் சாந்தாராம். அதற்கடுத்த ஆறு ஆண்டுகளில் இயக்குனராக உயர்ந்தார்.
அங்கு பல படங்களைத் தயாரித்து இயக்கிய பின்னர், 1942-ல் தனியாகப் பிரிந்து வந்து ‘ராஜ்கமல் பிலிம் மந்திர்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார்.
அதன்பிறகு அவர் தந்த படங்கள் அனைத்தும் இந்திய சினிமா வரலாற்றில் இடம்பெறத்தக்கவையாக அமைந்தன.
தோ ஆங்ஹேன் பாராஹ் ஹாத், ஜனக் ஜனக் பாயல் பாஜே, ஸ்தீரி போன்றவை அதற்கான உதாரணங்கள்.
மனிதநேயத்தை வலியுறுத்திய அவரது படங்கள் சமூக மாற்றத்தைக் கருப்பொருளாகக் கொண்டிருந்தன.
அதனாலேயே, அவரைத் தன் முன்மாதிரியாக எம்ஜிஆர் கொண்டிருந்தார் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
எம்ஜிஆர் அவரது காலில் விழுந்து வணங்கும் அளவுக்கு அந்தப் போற்றுதல் அமைந்திருந்தது.
திறந்தவெளிச் சிறை!
மகாத்மா காந்தியைத் தனது குருவாகக் கருதிய மௌரீஸ் ப்ரைட்மேன், வார்சாவில் இருந்து இந்தியா வந்தார். இங்குள்ள கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த அவுந்த் பகுதி ராஜகுடும்பத்தோடு, அவர் நெருக்கமாக இருந்தார்.
அப்பகுதிக்கு உட்பட்ட ஸ்வந்தரபூரில் சிறையில் அடைபட்டிருந்தவர்களைத் தனது கண்காணிப்பின் கீழ் வாழும் வகையில் திட்டமொன்றைச் செயல்படுத்தினார் ப்ரைட்மேன்.
அந்த ‘திறந்தவெளிச் சிறை’ கருத்தாக்கம், சுதந்திரப் போராட்ட காலத்தில் முக்கியமானதொரு பேசுபொருளாக இருந்தது.
அதனை மையப்படுத்தி, ’மை சிக்ஸ் கன்விக்ட்ஸ்’ எனும் ஹாலிவுட் படத்தின் சாயலைத் தழுவி எடுக்கப்பட்ட படமே ‘தோ ஆங்ஹேன் பாராஹ் ஹாத்’.
‘இரண்டு கண்கள் பன்னிரண்டு கைகள்’ என்பது இந்த டைட்டிலுக்கான அர்த்தம்.
கொடுமையான குற்றங்கள் செய்து தண்டனை பெற்ற ஆறு பேரைத் தன்னுடன் அழைத்து வருகிறார் ஒரு சிறை அதிகாரி. சமூகத்தில் மனிதநேயத்தோடு வாழ்பவர்களாக அவர்களைத் திருத்துகிறார்.
அந்த ஆறு பேரின் வாழ்வில் அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள், சமூகத்தை அட்டையாக உறிஞ்சும் சில வணிக கொடுங்கோலர்களுக்கு இடையூறாக அமைகின்றன. அந்த நபர்களால் அவரது உயிர் பறிக்கப்படுகிறது.
அதன்பிறகும், அந்த அதிகாரியின் நினைவுகளே மனம் திருந்திய அந்த ஆறு பேரையும் வழிநடத்துகின்றன.
அவரது கண்கள் தங்களை எந்நேரமும் கவனித்துக் கொண்டிருப்பதாகவே அவர்கள் உணர்கின்றனர். இதுவே அப்படத்தின் கதை.
இதில் இருக்கும் ‘திறந்தவெளிச் சிறை’ கருத்தாக்கத்தைத் தான், தனது ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் மையப்படுத்தி இருந்தார் எம்ஜிஆர்.
உதயம் புரொடக்ஷன்ஸ் கதை இலாகாவும் இயக்குனர் கே.சங்கரும் அதனைத் திறம்படத் திரையில் வெளிப்படுத்தி இருந்ததாகப் பத்திரிகைகள் பாராட்டின.
சமூகநீதியை வலியுறுத்தும் கருத்துகள் எம்ஜிஆரின் பல படங்களில் உண்டென்றபோதும், இதில் அவர் ஏற்ற பாத்திரம் வழக்கத்திற்கு மாறானதாக அமைந்திருந்தது.
ஆக்ஷன் காட்சிகளை விட, அமைதியாகக் கண்களின் வழியே தனது கருத்துகளை அவர் வலியுறுத்துவதாக அமைந்த காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன.
இப்படம் தெலுங்கில் என்.டி.ஆரை வைத்து ‘ரீமேக்’ செய்யப்பட்டது.
வில்லன்களுக்கு முக்கியத்துவம்!
எம்ஜிஆர் படங்களில் வில்லன் பாத்திரங்கள் எப்போதுமே முன்னிலைப்படுத்தப்படும் வழக்கம் உண்டு.
அதிலும் ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் எம்.என்.நம்பியார், வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், ஆர்.எஸ்.மனோகர், பி.எஸ்.வீரப்பா, குண்டுமணி ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.
அந்த வகையில், சாந்தாராமின் திரைக்கதையில் தான் பின்பற்றி வந்த நாயக பிம்பத்தை அழகாகப் பொதித்து வைத்தார் எம்ஜிஆர். அதுவரை தனது படங்களில் இடம்பெற்ற சில அம்சங்களைத் துறந்தார்.
அனைத்துக்கும் மேலாக, மானசீக குருவோடு இணைந்து பணியாற்ற முடியாத அவரது வேதனைக்கு வடிகாலாக அமைந்தது அப்படம்.
அதில் இடம்பெற்ற பாவேந்தரின் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ பாடலும், புலமைப்பித்தனின் ‘ஒன்றே குலமென்று பாடுவோம்’ பாடலும் இன்றும் நம் நெஞ்சில் ரீங்காரமிடுகின்றன.
1975ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியான ‘பல்லாண்டு வாழ்க’ பல திரையரங்குகளில் நூறு நாட்களைத் தாண்டியது.
இன்றோடு இப்படம் வெளியாகி 48 ஆண்டுகள் ஆகின்றன. ’பல்லாண்டு வாழ்க’ பேசும் கருத்தானது., இன்றைய சூழலுக்கும் பொருந்திப்போவது நிச்சயம் ஆச்சர்யம்தான்!
– உதய் பாடகலிங்கம்