கல் சிரிக்கிறது – நூல் விமர்சனம்:
தெய்வத்தை கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்திலும் ஆராதனையிலும் மந்தகா சக்தியிலும் கல்லை மறந்து தெய்வத்தைப் பார்க்கிறோம்.
நம் சமயத்திற்கேற்ப, நம் சௌகரியத்தின்படி, அந்த சிரிப்பில் அர்த்தத்தை படித்துக் கொண்டு உத்தேசித்த காரியத்துக்குத் தெய்வத்தின் அனுமதி கிடைத்து விட்டதாக எண்ணிக் கொண்டு காரியத்தில் இறங்குகிறோம்.
காரியம் எதிர்பார்த்தபடி அனுகூலமாக முடிந்தால் தெய்வம் சிரிக்குறது என்கிறோம். மாறாகத் திரும்பி விட்டால் கல் சிரிக்குறது என்கிறோம்.
ஆனால், சிரிப்பது தெய்வமுமில்லை, கல்லுமில்லை. எண்ணம் தான் சிரித்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே பயத்துக்குரியது எண்ணம் தான். அதுவும் அவனவன் எண்ணம் தான்.
இது தான் இந்த கதையோட முன்னுரை. இந்த கதையின் மையப்பொருளை இதைவிட எளிதாக விளக்க முடியாது.
பொதுவாக இது மனிதர்கள் அனைவருக்கும் தோன்றக் கூடிய எண்ணம் தான். கடவுள் மீது மட்டுமல்ல, பொதுவான ஒன்றே.
வாழ்க்கையில் ஒரு காரியம் இப்படித் தான் நடக்கப் போகிறது. இப்படித் தான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிற போது அந்த காரியம் நினைத்தவிதமாக நடக்காத போது பிறரை அதற்கு காரணமாக மாற்றுவது மனிதர்கள் இயல்பு.
இதற்கு உதாரணம் இந்தக் கதையில் வரும் மணி. கோயிலின் அர்ச்சகரான அவர் தனக்கு வருமானம் ஏற்படாத போது அம்மனிடம் கோபம் கொள்பவர் வருமானம் வரும் போது அப்படியே மாறிப்போய்விடுகிறார்.
இந்த கதையின் முக்கிய கதாபாத்திரமான தர்மராஜன் அனைவராலும் கடவுள் போல் மற்றவர்களால் மதிக்கப்படுகிறார். ஆனால் கடைசியில் கல் சிரிக்குறது என்ற தலைப்பின் பொருளாக அவரே ஆகிறார்.
கதை ஒருவரிடம் இருந்து ஒவ்வொருவராக நகர்ந்து கொண்டே இருப்பது ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. கதை சில இடங்களில் மிக மெதுவாக நகர்ந்தாலும் கதையின் முடிவு எதிர்பாராத ஒன்றாக இருந்தது.
நூல்: கல் சிரிக்கிறது
ஆசிரியர்: லா.சா.ராமாமிர்தம்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்: 120
விலை: ₹80