பரிந்தா, 1942 ஏ லவ் ஸ்டோரி, மிஷன் காஷ்மீர் உள்ளிட்ட இந்திப் படங்களின் இயக்குனராகவும், பீல்குட் படங்களுக்கான உதாரணங்களாகத் திகழும் முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு போன்ற படங்களின் தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் விது வினோத் சோப்ரா.
இவர் திரைத்துறையில் நுழைந்து 42 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டு கால அனுபவத்தின் துணையோடு, சினிமா மீதான தீராக்காதலோடு அவர் தந்திருக்கும் படைப்பே ‘12த் பெய்ல்’.
பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியுற்று, அதன்பிறகு இந்தி மற்றும் வரலாறில் பி.ஏ. முடித்து, டெல்லிக்குச் சென்று பல வேலைகளைச் செய்து,
அதற்கு நடுவே யுபிஎஸ்சி தேர்வெழுதி ஐபிஎஸ் அதிகாரியான மனோஜ்குமார் சர்மாவின் வாழ்க்கை சம்பவங்களைக் கொண்டுள்ளது இத்திரைப்படம்.
அந்தவொரு காரணத்தாலேயே, இன்றைய மாணவர்களுக்கான தன்னம்பிக்கை பாடமாகவும் விளங்குகிறது.
மனோஜ்குமார் தற்போது மும்பை காவல் துறையில் பணியாற்றி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
தேர்ச்சிக்கு என்ன தேவை?
மத்தியப்பிரதேசத்திலுள்ள சம்பல் பள்ளத்தாக்கு பகுதியைக் கொள்ளைக்காரர்களின் நிலமாகத்தான் இதர பகுதியினர் அறிந்து வைத்துள்ளனர்.
அப்படிப்பட்ட பின்னணியில் இருந்து வரும் மனோஜ்குமார் (விக்ரம் மாசே), தன்னுடன் பயிலும் மாணவர்களைப் போலவே பத்தாம் வகுப்புத் தேர்வில் ‘பிட்’ அடித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார்.
ஆனால், பன்னிரண்டாம் வகுப்பில் நேர்மையாகத் தேர்வெழுதி தோல்வியடைகிறார். ’காப்பியடித்து தேர்வெழுதாதே’ என்று காவல் துறை அதிகாரி ஒருவர் ‘அட்வைஸ்’ செய்தது தான் அதற்குக் காரணம்.
அந்த அதிகாரி சொன்னதை மனதில் பதித்துக் கொண்டு, அவரைப் போலவே காவல்துறையில் பணியாற்ற வேண்டுமென்ற லட்சியத்தை வளர்த்துக் கொள்கிறார் மனோஜ்.
காவல் துறை அதிகாரி தேர்வுக்குப் பயிற்சி பெறுவதற்காக, கிராமத்தில் இருந்து புறப்பட்டு குவாலியர் செல்கிறார்.
செல்லும் வழியில், பேருந்தில் தனது பேக்கை ஒரு பெண்ணிடம் பறி கொடுக்கிறார். அதே நேரத்தில், மாநில அரசு காவல் துறை தேர்வுகளை தற்போதைக்கு நடத்துவதில்லை என்று அறிவிப்பு வெளியிடுகிறது.
லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட தந்தை, அது தொடர்பான வழக்கை நடத்துவதற்காக வெளியூரில் வாழ்கிறார்.
பாட்டி, சகோதரி, சகோதரர், தாய் ஆகியோர் கிராமத்து வீட்டில் வறுமையில் வாடுகின்றனர்.
ஆதலால், வீடு திரும்புவது தீர்வாகாது என்று எண்ணும் மனோஜ், ஏதாவதொரு வேலை செய்து பிழைக்கலாம் என முடிவெடுக்கிறார்.
அப்போது, யுபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி பெறும் நோக்கோடு டெல்லிக்குச் செல்லும் ப்ரீதம் பாண்டேவைச் சந்திக்கிறார். அவருடன் சேர்ந்து டெல்லி செல்கிறார். அது அவரது வாழ்வையே தலைகீழாக மாற்றுகிறது.
டெல்லியிலுள்ள முகர்ஜி நகரில் யுபிஎஸ்சி தேர்வுக்காகப் பலரும் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மனோஜுக்கு தலை சுற்றுகிறது. அப்போது, கவுரி எனும் மனிதரைச் சந்திக்கிறார்.
பெரிதாக வசதி வாய்ப்புகள் இல்லாதவர்களும் தொடர் பயிற்சியினால் தேர்வில் வெற்றி பெறலாம் என்று அவர்தான் ஊக்கப்படுத்துகிறார்.
குடும்பத்திற்குப் பணம் அனுப்பியவாறே தேர்வுக்குத் தயாராகும் வகையில், சின்னச் சின்ன வேலைகளைச் செய்யத் தொடங்குகிறார் மனோஜ்.
கழிவறையைச் சுத்தம் செய்வது, நூலகத்தில் புத்தகங்களை அடுக்குவது, டீக்கடையில் பணியாற்றுவது என்றிருக்கிறார்.
ஒருநாள் சாரதா ஜோஷி (மேதா சங்கர்) எனும் பெண்ணைச் சந்திக்கிறார். உயர் நடுத்தர வர்க்கப் பின்னணியைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு மனோஜ் மீது ஈர்ப்பாகிறது. மெல்ல அது காதலாகிறது.
ஆரம்பகட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என்று இந்திய குடிமைப்பணி அதிகாரி ஆவதற்கான படிநிலைகளை மிகச்சரியாக அறிந்துகொள்வதற்குள் மூன்று முறை தேர்வெழுதி விடுகிறார் மனோஜ்.
நான்காவது முறையே இறுதி என்பதால், தனது ஆங்கிலப் புலமை முதல் அனைத்து குறைகளையும் சரி செய்துகொண்டு தேர்வெழுதுகிறார்; நேர்காணலுக்குச் செல்கிறார்; அங்கே, ‘நீங்கள் ஏன் பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்தீர்கள்’ என்ற கேள்வி கேட்கப்படுகிறது.
அதற்கு மனோஜ் என்ன பதில் சொன்னார்? நேர்காணலை நடத்தியவர்கள் அதனை எவ்வாறு உள்வாங்கினார்கள் என்று சொல்கிறது இத்திரைப்படம்.
காட்சிவாரியாக முழுக்கதையையும் விவரித்தாலும் கூட, இப்படத்தை நாம் நிச்சயமாகப் பார்க்க முடியும். விது வினோத் சோப்ராவின் அபாரமான காட்சியாக்கமே அதற்குக் காரணம்.
அது மட்டுமல்லாமல், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற அயராத முயற்சியே தேவை என்று சொன்ன வகையிலும் இப்படம் நம்மைக் கவரும்.
நேர்த்தியான திரைக்கதை!
இப்படத்தில் மனோஜ்குமாராக விக்ரம் மாசே, காதலி சாரதாவாக மேதா சங்கர், உத்வேகமூட்டும் காவல் துறை அதிகாரியாக பிரியான்ஷு சாட்டர்ஜி, தோழன் ப்ரீதம் ஆக ஆனந்த் விஜய் ஜோஷி, கௌரி ஆக அன்ஷுமான் புஷ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மனோஜின் தாய், தந்தை, பாட்டி, சகோதரர் மற்றும் நண்பராக நடித்தவர்களின் நடிப்பு நம்மைக் கண்ணீரில் ஆழ்த்துகிறது. அவர்கள் தவிர்த்து பயிற்சி ஆசிரியர்கள், உடன் தேர்வெழுதும் மாணவ மாணவியர் என்று பெருங்கூட்டமே திரையில் நடமாடுகிறது.
ஒரு ‘லைவ்’வான சூழலைத் திரையில் நிறைக்க உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரங்கராஜன் ராமபத்ரன்.
வீடியோ கேமிராவை எடுத்துக்கொண்டு நாமே ஓடுவது போன்ற உணர்வை ஊட்டுகிறது அவரது ஒளிப்பதிவு.
இயக்குனர் விது வினோத் சோப்ராவோடு இணைந்து, காட்சிகளின் தன்மைக்கேற்ப ஷாட்களை அடுக்கியதோடு திரைக்கதை நகர்வினால் ‘ஜெர்க்’ ஆகாதவாறு பார்த்துக் கொள்கிறார் படத்தொகுப்பாளர் ஜஸ்குன்வர் கோஹ்லி.
பிரசாந்த் பிட்கரின் தயாரிப்பு வடிவமைப்பு வெவ்வேறு களங்களை அதனதன் இயல்புகளோடு காட்ட உதவியிருக்கிறது.
கலை இயக்குனர் ஹேமந்த் வாஹ், ஆடை வடிவமைப்பாளர் மாளவிகா ஆகியோர் அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ராவின் பின்னணி இசை காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது; அவர் தந்திருக்கும் ‘ரீஸ்டார்ட்’ பாடல் நமது நாடி நரம்புகளை முறுக்கேற்றுகிறது.
அனுராக் பதக்கின் ‘12த் பெய்ல்’ நூலை அடிப்படையாகக் கொண்டு நேர்த்தியான திரைக்கதையைப் படைத்திருக்கிறார் விது வினோத் சோப்ரா.
எழுத்தாக்கத்தில் அவருக்கு அனுராக் பதக், ஜஸ்குன்வர் கோஹ்லி, ஆயுஷ் சக்சேனா உதவியிருக்கின்றனர்.
தான் தயாரித்த 3 இடியட்ஸ், முன்னாபாய் எம்பிபிஎஸ் போல, இப்படத்தில் கல்வி முறையையோ, மாணவர்களின் இயல்புகளையோ இயக்குனர் விது வினோத் சோப்ரா கேள்விகுட்படுத்தவில்லை.
அதேநேரத்தில் தொடர் முயற்சிகளை ஒரு மாணவர் கைவிட்டுவிடக் கூடாது என்பதைக் காட்சிகளின் வழியே சொல்லியிருக்கிறார். இப்படம் பார்க்க எளிமையாக இருந்தபோதும், இதன் பின்னிருக்கும் உழைப்பு மிகப்பெரியது.
நம்பிக்கையூட்டும் படைப்பு!
தேர்வு முடிவுகள் வெளியாகும்போது பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் மனமொடிவது எல்லாக் காலத்திலும் உண்டு. ஆனால், ‘தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டுகள்’ எனும் எண்ணம் இன்றைய தலைமுறையிடம் குறைந்து வருகிறது.
‘அது வேண்டாமே’ என்று பாடமெடுக்கவோ, அறிவுறுத்தவோ இயலாது எனும் சூழலில், அந்தப் பணியைச் செய்ய வந்திருக்கிறது இத்திரைப்படம்.
அந்த ஒரு காரணத்திற்காக, இப்படத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
அதேநேரத்தில், இட ஒதுக்கீட்டை இப்படம் ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா என்பது தெளிவாக விளக்கப்படவில்லை. ஏனென்றால், இந்தக் கதை 1997ஆம் ஆண்டில் நிகழ்வதாகக் காட்டப்படுகிறது.
யுபிஎஸ்சி தேர்வை பொதுப்பிரிவினர் நான்கு முறை மட்டுமே எழுத முடியும் என்ற வரையறை அக்காலகட்டத்தில் இருந்தது.
தற்போது அது ஆறு தடவையாக மாற்றப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு அந்த வரையறை பொருந்தாது.
ஆனால், இப்படத்தில் வரும் ஒரு பாத்திரம் கூட அந்த வேறுபாட்டை நமக்கு உணர்த்தவில்லை.
அதாகப்பட்டது, நான்கு முறை மட்டுமே யுபிஎஸ்சி தேர்வை எழுத முடியும் என்ற வரையறைக்கு உட்பட்ட பிரிவினர் மட்டுமே இதில் கதாபாத்திரங்களாக இடம்பெற்றுள்ளனர்.
இது நிச்சயமாக பொதுத்தளத்தில் விவாதத்தை உருவாக்கும்.
இக்கதையில் நாயகன் தனது பொருளாதாரத் தேவைகளுக்குக் கஷ்டப்படும் நிலையில் இருப்பதாகக் காட்டப்படுகிறது. அதற்காக., அவர் கழிவறையைச் சுத்தம் செய்யும் வேலையையும் செய்வதாகக் கூறப்படுகிறது.
உயர் வகுப்பினருக்குப் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அவசியம் எனும் தொனி, இக்காட்சிகளின் வழியே வெளிப்படுவதாகக் கருத வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன.
ஒரு அனுபவமிக்க திரை ஆளுமையாக, இது போன்ற குறைகளை முன்கூட்டியே யோசித்து விது வினோத் சோப்ரா தவிர்த்திருக்க முடியும்.
ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை என்பதே இப்படத்தைக் கேள்வியே கேட்காமல் கொண்டாடுவதற்குத் தடை போடுகிறது.
மற்றபடி, ரொம்பவே நேர்த்தியான காட்சியனுபவத்தைத் தந்த வகையில், கல்வி கற்பவர்களுக்கு எதுவுமே தடையல்ல என்று சொன்ன விதத்தில் திருப்தி தரும் படைப்பாகவே விளங்குகிறது இந்த ‘12த் பெய்ல்’!
– உதய் பாடகலிங்கம்