மார்கழி திங்கள் – இசையால் உயிர் பெறும் படைப்பு!

‘பாரதிராஜா மகன் மனோஜ் ஒரு படத்தை இயக்குகிறார்’ என்பது அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை ஆழ்த்திய செய்தி.

தந்தையைப் போலவே மகனது படைப்பாக்கமும் புத்தெழுச்சி தருமா என்ற எதிர்பார்ப்பு அதன் பின்னே இருந்தது.

2000வது ஆண்டில் அது நிகழ்ந்திருந்தால் நடப்பதே வேறு. ‘கடல் பூக்கள்’ படத்திற்குப் பிறகு மனோஜ் பாரதிராஜா படம் இயக்குவார் என்றே தமிழ் திரையுலகம் நம்பியது.

இருபத்திரண்டு ஆண்டுகள் கழித்து அது நிகழ்ந்திருக்கிறது.

சுசீந்திரன் கதை, திரைக்கதை, தயாரிப்பில், புதுமுகங்கள் ஷ்யாம் செல்வன், ரக்‌ஷனா இந்துசூடன், பாரதிராஜா உள்ளிட்டோர் நடிப்பில், இளையராஜா இசையமைப்பில் ‘மார்கழி திங்கள்’ தந்திருக்கிறார் மனோஜ்.

கேள்விப்பட்டதொரு கதை!

சிறுவயதிலேயே தனது தாய், தந்தையை அடுத்தடுத்து இழந்தவர் கவிதா (ரக்‌ஷனா). தாத்தா ராமையாவின் (பாரதிராஜா) அரவணைப்பில் வளர்கிறார்.

பள்ளியில் நன்றாகப் படிக்கும் இயல்புடைய கவிதா, ஒன்பதாம் வகுப்பில் வினோத்தின் (ஷ்யாம் செல்வன்) வரவுக்குப் பிறகு எரிச்சலடைகிறார். காரணம், வினோத் முதல் ரேங்க் வாங்குவது தான்.

ஒருகட்டத்தில் வினோத் தன்னைக் காதலிப்பதாகத் தெரிந்ததும் இன்னும் கோபம் கொள்கிறார்; பதினோராம் வகுப்பில் வினோத்துடன் சேர்ந்து படிக்கக் கூடாது என்றிருக்கிறார்.

பத்தாம் வகுப்புத் தேர்வில் தான் முதல் மதிப்பெண் வாங்க வேண்டுமென்பதற்காக, வினோத் கணிதத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்காமல் இருந்ததை அறிகிறார். அது, அவர் குறித்த கவிதாவின் பார்வையை முற்றிலுமாக மாற்றுகிறது.

அதன்பிறகு இருவரும் காதல் கொள்கின்றனர். யாருக்கும் தெரியாமல் கைகோர்த்துக் கொண்டு வயல்வெளியில் உலா வருகின்றனர்.

ஆனால், கல்லூரிக் காலத்தில் இருவரும் வெவ்வேறு திசைகளில் பிரிய நேர்கிறது. அந்த துக்கத்தைப் பொறுக்க முடியாமல், தாத்தாவிடம் தங்களது காதலைச் சொல்கிறார் கவிதா. அவரோ, வினோத்தின் குடும்பத்தினரைப் பார்த்துப் பேசுவோம் என்கிறார்.

அங்கு என்ன நடந்தது? தாத்தா ராமையா என்ன பேசினார்? கவிதாவும் வினோத்தும் பிற்பாடு ஒன்றுசேர்ந்தார்களா என்று சொல்கிறது ‘மார்கழி திங்கள்’ மீதி.

தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் இது போன்ற காதல் கதைகளை நம்மால் கண்டடைய முடியும். அதற்கேற்ப, மொத்தக் கதையும் மிகச்சுருக்கமான சிறுகதையாகவே தோற்றமளிக்கிறது.

படத்தின் ட்ரெய்லரிலேயே ‘இதுவொரு ஆணவக்கொலை கதை’ என்று தெரிந்துவிடுகிறது. அந்த முடிச்சு திரைக்கதையின் எந்த இடத்தில் அவிழ்க்கப்படுகிறது எனும் கேள்வியே இப்படத்தைக் காண வைக்கிறது.

இதுவொரு ’சிறுபடம்’!

புதுமுகங்கள் ஷ்யாம் செல்வன், ரக்‌ஷனா இருவருமே அளவாக, அருமையாக நடித்துள்ளனர். தொடக்கத்தில் நாயகனுக்கு அக்கா போன்று நாயகி ரக்‌ஷனா தோற்றமளித்தாலும், காதலை வெளிப்படுத்தும் காட்சிகள் அந்த எண்ணத்தை மங்கச் செய்து விடுகின்றன.

நாயகன் நாயகி தவிர்த்த இதர பாத்திரங்களை ஏற்கத் துணிந்தால், இருவருமே பல வாய்ப்புகளைப் பெறலாம்.

முதுமை வாட்டினாலும், இதில் பாரதிராஜா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சாதாரண மனிதர்களின் இன்னொரு பக்கத்தைக் காட்டியுள்ளார்.

அதேநேரத்தில், இன்னும் கொஞ்சம் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கலாம் எனும் வகையிலேயே அவரது பாத்திர வார்ப்பு அமைந்துள்ளது.

சுசீந்திரன் இதில் நாயகியின் தாய்மாமனாக வருகிறார். வெகு இயல்பாக வில்லத்தனமிக்க அப்பாத்திரத்தைக் கையாண்டிருக்கிறார்.

நாயகியின் தோழியாக வரும் நக்‌ஷாவுக்குப் பள்ளி மாணவி பாத்திரம் கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை.

இவர்கள் தவிர்த்து அப்புக்குட்டி, ஜார்ஜ் விஜய், சாவித்திரி உட்படச் சிலர் இதில் நடித்துள்ளனர்.

பள்ளிக்கால காட்சிகள் அழகாகத் தெரிவதில் காஸ்ட்யூம் டிசைனர் வாசுகியும் கலை இயக்குனர் சேகரும் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

அழகானதொரு காதல் கதை பதிவு செய்யப்பட்டிருப்பதை உணர்த்துகிறது வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு.

அந்த அளவுக்கு, ஒவ்வொரு பிரேமும் அழகியலோடு தெரிவதில் மெனக்கெட்டிருக்கிறார் மனிதர்.

தியாகுவின் படத்தொகுப்பானது குழப்பமின்றிக் கதை சொல்வதில் அக்கறை காட்டியிருக்கிறது.

அதையும் மீறி, சில விஷயங்கள் சொல்லப்படாமல் ‘கட்’ செய்யப்பட்டிருக்கின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.

இந்த படத்தைத் தயாரித்திருப்பதோடு கதை, திரைக்கதை, வசனத்தையும் எழுதியுள்ளார் சுசீந்திரன்.

செல்லா செல்லம் திரைக்கதை வசனத்தில் அவருக்கு உதவியிருக்கிறார்.

கிட்டத்தட்ட சிறுகதையைக் கையிலெடுத்துக்கொண்டு திரைக்கதை அமைக்கும் பணியே இதில் தென்படுகிறது.

சுசீந்திரனின் முந்தைய படங்களில் சிறு சிறு காட்சிகள் பெருங்கொத்தாகக் கோர்க்கப்பட்டிருக்கும். அந்த உத்தியைக் கைவிட்டிருப்பது, ‘இது ஒரு சிறுபடம்’ எனும் எண்ணத்தை வளர்த்தெடுக்கிறது.

மயக்கும் இளையராஜா!

மொத்தக் குழுவும் ஒருங்கிணைந்து, அடுத்தடுத்து மனோஜ் பாரதிராஜா பல படங்கள் இயக்க வேண்டுமென்ற உந்துதலுடன் உழைத்திருக்கிறது. அந்த வகையில், இப்படம் அவருக்கு ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது.

அதற்குத் தானும் துணை நிற்க வேண்டுமென்று விரும்பியிருக்கிறார் இளையராஜா.

இந்தப் படத்தை எதற்காகப் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் கேள்விக்குப் பதிலாக மாறி நிற்கிறது அவர் தந்திருக்கும் இசை.

‘புடிச்சிருக்கா புடிச்சிக்கிச்சு..’ பாடல் உற்சாகமூட்டுகிறது என்றால், ‘உன் இதழினால்’, ’உன் நினைவால் உனை எழுத முயன்றேன்’ பாடல்கள் ‘மெலடி ராகம்’ பாடுகின்றன. மிக எளிமையான வார்த்தைகளால் அப்பாடல்களை வார்த்ததும் இளையராஜா தான்.

கூடவே, மூன்று பாடல்களிலும் அனன்யா பட் என்பவரைப் பாட வைத்து, ‘யார் இவர்’ என்று கேட்க வைத்திருக்கிறார்.

எத்தனை படங்களில் காதலை வாரியிறைத்தாலும், இதில் ராஜாவின் பின்னணி இசை ஊட்டும் உணர்வெழுச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

முன்பாதியில் மௌனம் வரும் இடங்கள் குதூகலத்தைத் தந்தால், பின்பாதியில் அதுவே பதற்றத்தை நிறைக்கிறது.

அதனை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் நேரும்போதெல்லாம், தனது இசையால் மாயாஜாலம் நிகழ்த்துகிறார் இளையராஜா.

’ஆண் பாவம்’ உட்பட எண்பதுகளில் வெளிவந்த பல படங்களின் தரத்தைத் தனது இசையால் மேலும் ஒருபடி உயர்த்தியவர் இளையராஜா.

அந்த காலகட்டத்தில் அவர் என்னென்ன சாதனைகளைச் செய்தார் என்பதை இன்றைய தலைமுறை தேடிப் பார்க்கத் தூண்டுகிறது இன்றும் தொடரும் அவரது உழைப்பு. ‘மார்கழி திங்கள்’ படமும் அதனைச் சாதித்திருக்கிறது..!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment