திரைப்பாடல்களில் இலக்கியம், இலக்கியங்களில் புதுமை, தமிழ் செய்வதில் செழுமை அதற்கான அர்ப்பணிப்பில் முழுமை என மொழியை முன்னெடுத்துச் சென்று, திசையெட்டும் கொண்டாட, மொழியைக் கொண்டு சேர்த்து உலகத் தமிழர்களில் உள்ளங்களில் இடம்பிடித்து இன்றும் தமிழின் தனி அடையாளமாகத் திகழ்பவர் கவிப்பேரரசு வைரமுத்து.
அத்தகைய கவிஞரின் அடுத்த படைப்பான மகா கவிதை நூல் என்பது ஐம்பூதங்களையும் ஆய்வுசெய்து தவமாய் இருந்து படைத்த அரிய தொகுப்பு ஆகும்.
அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் அற்புத காப்பியம் ‘மகா கவிதை’ ஆகும். இந்த நூலின் வெளியீடு நிகழ்ச்சி என்பது இலக்கியத் திருவிழாவாக கொண்டாடப் படவேண்டும் என்பது வெற்றித்தமிழர்ப் பேரவை, மற்றும் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோரின் விருப்பம்.
இந்த நிலையில் கவிஞர் அவர்கள் வேறொரு நிகழ்ச்சிக்காக சிறப்பு விருந்தினராய் பங்கேற்க தஞ்சை வருவதாக இருந்தச் சூழல்.
அது சமயம் தஞ்சை இலக்கிய அன்பர்களுடன் உரையாட வைப்பதாகத் திட்டம். அதன்படியே தஞ்சாவூர் சங்கம் ஹோட்டலில் இன்று (22.10.2023) ஞாயிறு காலை 11 மணியளவில் கவிப்பேரரசு அவர்களுடன் உரையாடும் இலக்கிய நிகழ்வு நடைபெற்றது.
இந்த இனிப்புச் சந்திப்பின் சங்கமத்தில் பேசிய கவிஞர், “உங்கள் முகம் பார்க்க ஓடோடி வந்திருக்கிறேன். வேறு நிகழ்ச்சிக்கு வந்தபோது உங்களையும் சந்திக்கிறேன் என்பதாக சொல்லப்பட்டது.
உண்மையில் உங்களைச் சந்திக்க வேண்டிய விருப்பத்தில்தான் வேறொரு நிகழ்ச்சிக்கு வருகை தந்தேன் என்பதே உண்மை.
நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கு பாய்கிறது என்பார்கள்.
இது அப்படியல்ல நெல்லுக்கு பாய்கிற நீர்
என் இனிப்புக் கரும்புத் தோட்டத்திற்கும் வாழைத் தோட்டத்திற்கும் பாய்கிறது என்பதுதான் எனது உற்சாகம்.
நீங்கள் இல்லாமல் நான் இல்லை.
கைத்தட்டினால்தான் கவிதை,
வாசித்தால்தான் சொல்
நேசித்தால்தான் வாழ்க்கை
ஓடி வந்து சந்தித்தவர்கள், பெருமைப்படுத்தியவர்கள், கையொப்பமிட்டு வாங்கிச் சென்றவர்கள். அவ்வப்போது நினைவில் வந்து போவார்கள், அவர்களுக்கான நினைவுகளிலிருந்தும் சில சொற்கள் பிறக்கின்றன.
அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன்.
நினைவுகள் இல்லாமல் போனால், நானும் நீங்களும் இல்லை!
தஞ்சைக்கு பயணம் என்றால் உற்சாகம் எனக்குக் கூடும், காரணம் விருப்பத்தோடு வருகிறேன், இலக்கிய முகங்களையும் நல்ல இதயங்களையும் காணப்போகும் மகிழ்ச்சி கூடும்.
எனது மகாகவிதை நூல் என்பது எனது 36 மாத தவம்.
ஆவலோடு அனைவரும் எதிர்பார்க்கும் அந்த நூல் வெளியீடு எங்கு? எப்போது? என்று இதுவரை தெரிவிக்கவில்லை.
இதோ, இப்போது அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் நல்ல தருணத்தில் அறிவிக்கிறேன்.
ஜனவரி-1 2024. அன்று சென்னையில் ‘மகா கவிதை’ நூல் வெளியிட இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு உங்களிடம் தெரிவிக்கிறேன்.” என்றார்.
இதை தஞ்சை இலக்கிய இதயங்களோடு பகிர்ந்து கொண்டதும் நூல் வெளியீட்டைக் கோலாகலமாக கொண்டாட ஒத்துழைப்பதாக அனைவரும் உறுதியளித்தனர்.
சிறப்பு வாய்ந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடனான இந்த இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் வெற்றித் தமிழர்ப் பேரவை நிர்வாகிகள் திருவாளர்கள் ஆசிப் அலி, தரும.சரவணன், பாம்பே ஸ்வீட்ஸ் மணி சர்மா அவர்கள், தமிழ்ப் பல்கலை முன்னாள் துணை வேந்தர் திரு.பாஸ்கரன் அவர்கள் பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கவிஞர்கள், தமிழ் அறிஞர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.