நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பாவை விளக்கு படம் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
நான்கு பெண்கள், எழுத்தாளர் ஆகியோருக்கு இடையில் இருக்கும் அன்பு பிரியத்தை ஒரு வித நேசத்தை கண்ணியமாகவும் நேர்மையாகவும் வெளிக்காட்டிய விதத்தில் பாவை விளக்கு அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவுக்கு புதுமையான கதை களத்துக்கான வாய்ப்பை உருவாக்கியது என்றே கூறலாம்.
தமிழ் சினிமாவில் நாவலை தழுவி உருவான படங்களில் முக்கியமான படமாக சிவாஜி கணேசன் நடித்த பாவை விளக்கு படம் உள்ளது.
இதில் பிரதான கதாபாத்திரங்களில் செளகார் ஜானகி, பண்டரி பாய், எம்என் ராஜம், குமாரி கமலா ஆகியோர் நடித்திருப்பார்கள்.
பிரபல எழுத்தாளர் அகிலன் எழுதிய பாவை விளக்கு என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் இந்த படம் உருவானது.
ஒரு எழுத்தாளின் வாழ்க்கை அடிப்படையாகக் கொண்டும், அவரது வாழ்க்கையில் முக்கிய பங்களிப்பை கொண்டிருக்கும் பெண்களை பற்றிய கதையம்சத்திலும் படம் அமைந்திருக்கும்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிவாஜி கணேசனின் வீட்டில் வைத்தே படமாக்கப்பட்டது.
இந்தப் படம் தான் முதன் முதலில் சிவாஜி கணேசன் வீட்டில் படமாக்கப்பட்ட படமாகும். படத்தின் முதல் காட்சியே பாவை விளக்கு கதையை எழுத்தாளரான சிவாஜி கணேசன் நண்பர்களிடம் விவரிப்பது போன்று இடம்பிடித்திருக்கும்.
பாவை விளக்கு கதையை நாவலாக வாசிப்பதில் இருந்த உணர்ச்சி பெருக்கும், கதையின் ஓட்டமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சிவாஜி கணேசன் நடிப்பை பற்றி சொல்லவே தேவையில்லை.
படத்தின் கதையோட்டத்துக்கு ஏற்ப கதாபாத்திர தன்மையை வெளிப்படுத்தியிருந்தார்.
மருதகாசி பாடல் வரிகள் எழுத கேவி மகாதேவனின் இசையில் படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பிடித்தன.
இதில் ஆயிரம் கண் போதாது, நீ சிரித்தால் நான், காவியமா நெஞ்சின் ஓவியமா போன்ற பாடல்கள் ஹிட்டாகின. இவையெல்லாம் இன்று வரை ஒலிக்கும் கிளாசிக் பாடல்களாக அமைந்தன.
1960ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக பாவை விளக்கு, பெற்ற மனம் என இரண்டு படங்கள் சிவாஜி கணேசன் நடிப்பில் ஒரே நாளில் வெளியாகின.
கூடவே எம்ஜிஆர் நடித்த மன்னாதி மன்னன் படமும் வெளியானது. பாவை விளக்கு திரைப்படம் 50 நாள்கள் வரை ஓடியது.
உணர்ச்சி மிக்க கதைகளமாக இருக்கும் பாவை விளக்கு படம் சுமாராகத்தான் போனது.
சிவாஜி கணேசன் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்க காரணமாக கதையுடன் ஒன்றிபோயிருக்கும் அவரது நடிப்பாற்றல் என்றே சொல்லலாம்.
சிவாஜியின் நடிப்புக்கு உதாரணமாக திகழும் பாவை விளக்கு வெளியாகி இன்றுடன் 63 ஆண்டுகள் ஆகிறது.
- நன்றி : முகநூல் பதிவு