உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதலை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. சர்வதேசச் செய்தியாளர்கள் அங்கு குவிந்திருக்கிறார்கள்.
இருதரப்பும் தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன. மற்ற நாடுகளின் ஆதரவை எதிர்பார்த்திருக்கின்றன.
ஆதரவளிக்கிற அல்லது மௌனம் காக்கிற நாடுகள் பலவும் அங்கு தீவிரப் போர்ச்சூழல் உருவாவதை விரும்பவில்லை – சில நாடுகளைத் தவிர.
போர் தீவிரமடைந்தால் அது இரு நாடுகளில் இருக்கும் சாதாரண குடிமக்களையும் பாதிக்கும். சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
குறிப்பாக எரிபொருட்களின் சந்தைவிலை மதிப்புக் கூடும் பட்சத்தில் அது உலகம் முழுக்க இருக்கிற சராசரிக் குடிமக்களையும் பாதிக்கும்.
கடந்த ஐந்து நாட்களில் மட்டுமே பங்குச் சந்தையின் மதிப்பு 3.5 சதவிகித அளவுக்குச் சரிந்திருக்கிறது.
14.6 லட்ச கோடி அளவுக்குப் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தங்கத்தின் விலையும் உயர்ந்து கொண்டிருக்கிறது.
இஸ்ரேலில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டுக் கொண்டிருப்பது நல்ல அறிகுறி என்றாலும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் வரை அங்கு நடக்கும் தாக்குதலில் பாதிக்கப்படுவதைக் காட்சிபூர்வமாகப் பார்க்கும்போது போரின் தீவிரம் பலரையும் பதற வைக்கிறது.
காசா மக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் பல நாடுகளில் நடந்திருக்கின்றன. அங்கிருக்கும் அமெரிக்கர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதைப் பற்றி அமெரிக்கா ஆலோசித்துக் கொண்டிருக்கிறது.
பணியின் காரணமாக அங்கு சென்ற பலர் எதிர்காலம் குறித்து அச்சமடைந்திருக்கிறார்கள்.
இஸ்ரேல் தற்போது நடத்திவரும் குண்டுத் தாக்குதலில் ஒரே நாளில் எழுநூறுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
போர்ச்சூழலில் ஒவ்வொரு செயலும் வெவ்வேறு எதிர்வினைகளை உருவாக்கும்.
தற்போதும் அப்படித் தான் இருக்கிறது நிலைமை.
போர் தீவிரம் அடைவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்கிற உலகளாவிய மக்களின் எதிர்பார்ப்புகளுக்குப் போர்ச்சூழலை உருவாக்கியிருக்கிற நாடுகளும், ஆதரவாக நிற்கும் நாடுகளும் அக்கறை காட்டட்டும்.