– ரெங்கையா முருகன்
திருக்குறுங்குடியில் திருமங்கையாழ்வார் தரிசனத்தை முடித்துவிட்டு பெரியநம்பி கோவிலுக்கு முன்பாகவே சிறிது நேரம் அமர்ந்து விட்டு அடுத்ததாக நான் புறப்படும் இறுதி வேளையில் அவராகவே என் முன் வந்தார் இந்தப் பெரியவர்.
தன்னைப் பற்றி எந்த அறிமுகமும் செய்து கொள்ளவில்லை. ஆனால் நீ உட்கார்ந்து இருக்கிறியே இதற்கு பின்னால் அப்படியே திருவட்டாறு இருக்கிறது என்றார்.
இது வட்டவடிவமான இடம் என்று அவராகவே பேச ஆரம்பிக்க, அப்பப்பா எவ்வளவு தகவல்கள் ஐந்து நிமிடத்தில் ஐநூறு அபாரத் தகவல்களை அருவி போல் கொட்டினார்.
திருக்குறுங்குடியை ஒட்டிய புவியமைப்பு, சுற்றியுள்ள ஏரிகள், மலைகள், அந்த இடத்திற்கும் நம் வாழ்வியலோடு தொடர்புள்ள இலக்கிய வகைமைகள் போன்ற ஏராளமான தகவல்களை கொட்டிக் கொண்டே இருந்தார்.
நாங்கள் குடும்பத்துடன் வந்திருந்த காரணத்தால் அடுத்து கிளம்ப வேண்டிய அவசரத்தில் இருந்த நெருக்கடி காரணமாக,
இவர் அருவி போல் அறிவியல் தன்மையுடன் ஐந்து நிமிடத்தில் கொட்டிய தகவல்களின் ஆச்சரியத்தில் இருந்து ஆவென என்னால் மீள முடியவில்லை.
கோவில் முன்பு பலர் அமர்ந்திருந்த போதிலும் ஏன் மிகச் சரியாக என்னிடம் வந்து அவரே முன் வந்து அவர் யாரென கூறாமல்,
இங்கிருந்து பெருமானுக்கு மறுபக்கம் நேராக திருவட்டாறு, நான்கு ஏரிகள் சேர்ந்த பகுதி நாங்குநேரி, மகேந்திர கிரியில் இருந்து உற்பத்தியாகும் நம்பி ஆற்றின் போக்கு,
ஐவர் ராசாக்கள் கதை, அந்த ஊர் சுற்றுப்புறம் உள்ள அனைத்து ஊர்களின் வரலாற்றுப் போக்குகள் என எல்லாவற்றையும் கூறிக்கொண்டே இருந்தார்.
அதோடு, சும்மா உட்காரமல் மலைகள் மேலே ஏறும் வேளையில் அப்பா என்றும் கூப்பிடு, கீழே இறங்கும் வேளையில் அம்மா என்றும் கூப்பிடு.
அப்படி இருந்தால்தான் உண்டி சுருங்கும் ஆண்டாளின் (திருவில்லிபுத்தூர்) அருள் உனக்கு வாய்க்கும் என நான் எங்கிருந்து வந்தேனோ அந்த இடத்தையும் குறிப்பாகச் சொல்லி சிரித்தார் பாருங்க… அடடா.
இந்த மனிதரிடம் இருந்து உடனடியாக கிளம்பவும் மனம் இல்லாமல் நேர நெருக்கடி குடும்ப உறுப்பினர்கள் நெருக்கடி காரணமாகவும் பெரியவரை பிரியவும் மனமில்லாமல் என் மனதில் பெரியவரை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு கடந்து வந்து விட்டேன்.
என்ன வேலை செய்கிறீர்கள் என்று புறப்படும் வேளையில் கேட்டேன். ஓய்வு பெற்ற ஆசிரியர் என்றார்.
அந்த ஐந்து நிமிட ஐநூறு தகவல்களில் இருந்து என்னால் மீண்டு வர இயலாத சூழலில் நான் ஏதாவது அவருக்கு செலவுக்கு பணம் கொடுத்து உதவினால் தப்பாக நினைத்து விடுவாரோ என்ற மனக் குழப்பத்தில் அங்கிருந்து கிளம்பி விட்டேன்.
வாய்மொழி வரலாறு அடிப்படையில் இயங்கும் நாட்டார் வழக்காற்றியல் துறைசார் வல்லுனர்கள் இவரைப் போன்றோரை இனம் கண்டு நேர்காணல் செய்து பதிவு செய்தல் மிகவும் அவசியம்.
இவரைக் காண்பதற்காகவே நான் மட்டுமே தனியாக திருக்குறுங்குடி போக வேண்டும் என்று தோன்றி விட்டது.
தனிமனித தகவல் களஞ்சியம் சார்ந்த இந்த மாதிரியான எந்த ஒளிவட்ட பின்புலம் இல்லாமல் மின்னல் கீற்றென நம்முன் வந்து மனதை கிளறிவிட்டு போய் விடுகின்றனர். எல்லாம் திருமங்கையாழ்வார் செயலோ?!