10 லட்சம் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பில்லை!

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினா் கடந்த 7-ஆம் தேதி பலமுனைத் தாக்குதல் நடத்தினா்.

இதில், இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். மேலும், வெளிநாட்டவா் உள்பட 212 பேரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாக காஸாவுக்கு பிடித்துச் சென்றுவிட்டனா்.

இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் அதிரடித் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், ஹமாஸின் ஆயுதக் கட்டமைப்பை அழிக்கும் வகையில் தரைவழித் தாக்குதல் நடத்தவிருப்பதால், காஸாவின் வடக்குப் பகுதியைச் சோ்ந்த 10 லட்சம் பாலஸ்தீனா்களும் தெற்கு நோக்கிச் செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது.

காஸா எல்லையில் படைகளைக் குவித்துள்ள இஸ்ரேல், எந்த நேரமும் தரைவழித் தாக்குதலைத் தொடங்க தயாா் நிலையில் உள்ளது.

இந்நிலையில், காஸாவில் சனிக்கிழமை இரவு இஸ்ரேல் ராணுவம் பலமுறை வான்வழித் தாக்குதலை நடத்தியது. காஸா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இதுவரை இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் 1400 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. அறிவித்துள்ளது.

இந்நிலையில் காஸாவில் தொடர்ந்துவரும் போரால் 10 லட்சம் குழந்தைகள் உயிர் பாதுகாப்பற்ற சூழலில் இருந்துவருவதாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவ உதவிகள் கிடைக்காமலும், உரிய மருந்துகள் மற்றும் உணவுகள் கிடைக்காமலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரணிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தொடர் தாக்குதால் 50 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்கள் போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் தவித்து வருவதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Comments (0)
Add Comment