இசைஞானி வீட்டில் நவராத்திரி விழா தொடங்கியதன் பின்னணி!

நவராத்திரி என்று வந்து விட்டாலே இசைஞானியின் வீடு விதவிதமான கொலு பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பிக்கப்படும்.

அங்கு கூடிய அனைவருக்கும் பூஜை, புனஸ்காரங்களுக்குப் பின் பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தனது குடும்பம் இந்த நிகழ்வை தொடங்கியது பற்றி இசைஞானியே கூறியது, “நான் நவராத்திரிக் கொண்டாட்டங்களை 1980களின் தொடக்கத்தில் இருந்து செய்து வருகிறேன்.

இது என் மனைவியின் யோசனையாக இருந்தது.

நான் சென்னையில் திரைப்பட உலகில் பணியைத் தேடும் பொருட்டு அலைந்து கொண்டிருந்த வருடம் நவராத்திரி நடந்துகொண்டிருந்தது பலத்த மழையின் நடுவே. இடுப்பளவு வரை ஆழமான நீர் சூழ்ந்திருந்தது.

எங்களுக்கு சாப்பிட எதுவும் இல்லாத சூழலில் எங்கள் சூழ்நிலையை அது மேலும் வேதனைப்படுத்தியது.

எனவே நானும், பாரதிராஜாவும், பாஸ்கரும் ராம் தியேட்டரிலிருந்து வடபழனி முருகன் கோயில் வரை கடைகளில் பரிமாறப்பட்ட பொரி மற்றும் சுண்டல் போன்ற உணவுப் பொருட்களை சேகரித்து, அதையும் தண்ணீரையும் கொண்டு மூன்று நாட்கள் எங்கள் வயிற்றை நிரப்பினோம்.

இந்த சம்பவத்தை எனது மனைவி ஜீவாவிடம் விவரித்தபோது கலங்கிய அவர், 10 நாட்கள் தங்கள் வீட்டில் அனைவரையும் அழைத்து உணவு பரிமாறுமாறு கூறிய யோசனையே இந்த நிகழ்வு….”

நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலையும் ஒரு கர்நாடக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு அந்த நாள் சிறப்பிக்கப்பட்டது.

மறைந்த ‘மாண்டலின்’ சீனிவாஸ் தான் இசைஞானியின் வீட்டில் நவராத்திரி அன்று முதன்முதலில் இசை நிகழ்ச்சி நடத்தினார் என்பது குறிப்பிடதக்கது.

அன்று தொடங்கிய இந்த வைபவம் இன்று வரை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

2023 நவராத்திரி நிகழ்வில் கடந்த 2 நாட்களுக்கு முன் இசைஞானி வீட்டில் ரஞ்சனி காயத்ரி குழுவினரால் கச்சேரி நடத்தப்பட்டு சிறப்பிக்கப்பட்டதுடன் பவதாரணியும் ஒரு நாள் கச்சேரி நடத்தினார் என்பது குறிப்பிடதக்கது.

நன்றி: கண்ணன் நடராஜன் பேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment