5 மாநிலத் தேர்தல்: சிதறுமா இந்தியா கூட்டணி?

ஆளுங்கட்சிக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது ரொம்பவும் அபூர்வம்.

இந்திரா காந்தி அவசர நிலையைப் பிரகடனம் செய்த நேரத்தில், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டன.

1977 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதான கட்சிகள் கொள்கை வேறுபாடுகளைக் களைந்து, ஒரே குடையின் கீழ் நின்றனர்.

தங்கள் அணிக்கு ’ஜனதா’ என பெயர் சூட்டி களம் இறங்கினர். இந்தக் குடைக்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக போன்ற கட்சிகள் ஐக்கியமாகவில்லை.
ஆனால், ஜனதாக் கட்சியுடன் தொகுதி உடன்பாடு வைத்துக்கொண்டன.

அந்தத் தேர்தலில் ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்திராவே அந்த தேர்தலில் தோற்றுபோனார்.

ஜனதாக் கட்சி ஆட்சியின் ஆயுள் காலம் 3 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். ஆட்சி கவிழ்ந்தது.
ஜனதாக் கட்சியும் ‘பீஸ் பீஸ்‘ ஆனது.

இந்தியா கூட்டணி

இந்த நிலையில் தான் 10 ஆண்டுகளாக மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பரவி கிடக்கும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சிகள், ’இந்தியா’ எனும் வலிமை மிக்க கூட்டணியை உருவாக்கின.

1977 ஆம் ஆண்டு ஜனதாவில் சேராத சி.பி.எம்., திமுக போன்ற கட்சிகள் ‘இந்தியா’ அணியில் ஒட்டிக்கொண்டது, பாஜகவை மிரள வைத்தது. இந்த அணியில் 28 கட்சிகள் உள்ளன.

பாட்னா, பெங்களூரு, மும்பை என மூன்று ஸ்தலங்களில் சங்கமித்து விருந்துண்டனர். தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு குழுக்களை அமைத்தனர்.

ஆனால் இந்த கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளரையோ, பிரதமர் வேட்பாளரையோ தேர்வு செய்யவில்லை. ஜனதாக் கூட்டணி 3 ஆண்டுகள் உயிரோடு இருந்தது

ஆனால் இந்தியா கூட்டணி, சொற்ப நாட்களில் மூச்சை நிறுத்தும் சூழலே காணப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரையாவது இந்தக் கூட்டணி இருக்குமா? என்பது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையிலேயே உள்ளது.
காரணம்?

ஐந்து மாநிலத் தேர்தல்:

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை.

இன்னும் 6 மாதங்களில் நடைபெறப்போகும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தல் ‘மினி பொதுத்தேர்தல்’ என்று அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியில் யார்? யார்?

தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆட்சியில் உள்ளது. 2014ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவானது முதல் கே. சந்திரசேகர ராவ், முதலமைச்சராக உள்ளார்.

இந்தத் தேர்தலில் அவருக்கு காங்கிரஸ் கட்சி கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜகவும் ஓரளவு வலுவாக உள்ளது.

தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பூபேஷ் பாகல் முதலமைச்சராக இருக்கிறார்.

பாஜக, பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. சோரம் தங்கா முதலமைச்சராக உள்ளார். இங்கு, மிசோ தேசிய முன்னணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரு மாநிலங்களில் முட்டல்:

மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சியும், ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் நடைபெறுகிறது.

இரு மாநிலங்களிலும் பாஜக கூட்டணியில் பிரச்சினை இல்லை.

ஆனால் ‘இந்தியா ‘ கூட்டணியில் முட்டல் – மோதல் உருவாகி, மக்களவைத் தேர்தலிலும், அது எதிரொலிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு மத்திய பிரதேசத்தில் ஓரளவு வாக்கு வங்கி உள்ளது.

ஆனால், அவர்கள் கேட்ட இடங்களைக் கொடுக்க காங்கிரஸ் மறுத்து விட்டது. இதனால் ‘இந்தியா’ அணியில் உள்ள மூன்று கட்சிகளும் ம.பி.யில் தனித்தனியே போட்டியிடுகின்றன.

ராஜஸ்தானிலும் இதே கலவர நிலவரம் தான்.

தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் உருவானதால் இந்த மாநிலத்திலும் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன.

‘இந்தியா‘ கூட்டணி மூன்று பட்டுள்ளதால், ம.பி., ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

மக்களவைத் தேர்தலிலும் ’இந்தியா’ கூட்டணியில் இதுபோன்ற கூத்துக்கள் அரங்கேறும் என பாஜக எதிர்பார்க்கிறது.

நாமும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

பி.எம்.எம்.

Comments (0)
Add Comment