வடமாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் தற்போது தமிழ்நாட்டு வனப்பகுதிகளை குறி வைத்துள்ளனர். புலிகள் வேட்டையாடப்படுவதில் பவாரியா கும்பலுக்கு உள்ள தொடர்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
‘பவாரியா கொள்ளையர்கள்’ என்ற பெயரைக் கேட்டாலே 1996ஆம் ஆண்டு காலக் கட்டங்களில் அச்சப்படாதவர்களே இல்லை.
அவ்வளவு கொடூரமாக கொலை, கொள்ளையில் ஈடுபடும் இந்த பவாரியா கும்பல், 1995 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டங்களில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வீடுகளை கண்காணித்து, அங்கு கொள்ளை அடித்து வந்தனர்.
மேலும் இதற்காகவே அவர்கள் ஆயுதங்களை தயாரித்து, வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவுக்கு லாரி மூலம் சரக்குகளைக் கொண்டு வரும் போக்குவரத்துத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இவ்வாறு வருபவர்கள், சரக்குகளை உரிய இடங்களில் இறக்கிய பிறகு, அருகில் உள்ள வீடுகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
1995ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை சுமார் 200 வழக்குகள் இவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறையினர் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு அவர்களை கைது செய்துள்ளனர்.
அப்போதைய காலக்கட்டத்தில் பேசுபொருளாக இருந்த இந்த பவாரியா கொள்ளையர்கள் பற்றி, தற்போது மீண்டும் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
வடமாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் தென்னிந்தியாவை குறிவைத்து தங்கள் கைவரிசையை காட்டி வந்த நிலையில், தற்போது இவர்களின் பார்வை தமிழ்நாட்டு வனப்பகுதிகளை நோக்கி திரும்பி உள்ளது.
குறிப்பாக, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு சீன சந்தையில் நல்ல விலை உள்ளதால், இவற்றை வேட்டையாடுவதில் இந்த பவாரியா கும்பால் களமிறங்கி உள்ளது நிரூபணமாகி இருக்கிறது.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளதாக தமிழ்நாடு வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வனவிலங்கு வேட்டையில் முக்கிய குற்றவாளி ஒருவரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளதாகவும், சத்தியமங்கலம் வழக்கில் அவரை கைது செய்வதற்கு ஏதுவாக சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டவரை சத்தியமங்கலம் புலிகள் வேட்டையாடப்பட்ட வழக்கில் கைது செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
தோட்டத்து வேலை, காய்கறி விற்பனை மற்றும் கம்பளி விற்பனை என்ற அடையாளங்களில் தமிழ்நாட்டிற்கு வரும் இந்த பவாரியா கும்பல், நன்கு தமிழ் கற்றுக்கொண்டு வனப்பகுதிகளில் மக்களோடு மக்களாக தங்கியிருந்து, புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய வனப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி, வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில், தமிழ்நாடு அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
– தேஜேஷ்