தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கனிம வளக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது.
தென்மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் மற்றும் கனிம வளங்கள் திருடிக் கொண்டு சென்றதாக ஆயிரக்கணக்கான வாகனங்களை காவல்துறையினர் கைப்பற்றி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த வாகனங்களை விடுவிக்க உத்தரவிடக்கோரி, 100க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி கே.கே ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு காவல்துறை தலைவர் தரப்பில், முத்திரையிட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் நீதிபதி ராமகிருஷ்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில், கடந்த 2015 முதல் மே 2023 வரை தமிழகம் முழுவதும் கனிமவள கடத்தல் சட்டத்தின் கீழ் 59,105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும்,
கடத்தலில் ஈடுபட்டதாக 63,542 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இதில் 2,218 வாகனங்கள் தான் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது வேதனையாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றைப் பார்க்கும்போது கனிம வளங்கள் கடத்தல் குறித்து ஏற்கனவே உள்ள சட்டங்களை முறையாக அதிகாரிகள் செயல்படுத்தவில்லை என தெளிவாக தெரிகிறது எனக் குறிப்பிட்டுள்ள நீதிபதி,
சட்ட விரோதமாக கனிமங்கள் எடுப்பது, அதிக வாகனங்களில் கொண்டு செல்வது தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகின்றன என்றும் இதனால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும்
கனிம வழக்கு பதிவு செய்த 30 நாட்களில் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க அனைத்து அதிகாரிகளுக்கும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
அதோடு, கனிமவளச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளை விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசுக்கு இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.