திருப்தியளிக்கிறதா விஜய் & லோகேஷ் கூட்டணி?

‘லியோ பற்றி ஏதேனும் அப்டேட் இருக்கிறதா’ என்ற கேள்வியே, அப்படம் குறித்த முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்தக் கணம் வரை சினிமா ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து உயிர்ப்போடு இருந்து வருகிறது.

படம் திரைக்கு வந்தபிறகு, அதன் வசூல் எப்படி உள்ளது என்று பெருங்கூட்டமே நிச்சயம் ஆராய்ச்சியில் இறங்கும். நமக்கு அது தேவையில்லை.

‘மாஸ்டருக்கு பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜும் விஜய்யும் மீண்டும் இணைகின்றனர் என்பதால், ‘நல்லதொரு கமர்ஷியல் படம் பார்த்த திருப்தி கிடைக்கும்’ என்பதே மிகச்சாதாரண ரசிகர்களின் எண்ணமாக இருந்தது. அந்த வகையில் லியோ திருப்தி தந்ததா?

ஒரே ஆள் தானா?

இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள தியோக் எனுமிடத்தில் ஒரு பேக்கரியை நடத்தி வருகிறார் பார்த்திபன் (விஜய்). அவரது மனைவி சத்யா (த்ரிஷா), அங்குள்ள அரசு அலுவலகமொன்றில் பணியாற்றுகிறார்.

பதின்ம வயதைத் தொட்ட மகன் சித்தார்த் (மேத்யூ தாமஸ்), ஐந்து வயதான ஜிட்டு (இயல்) என்று அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அமைதியாக அவர்களது வாழ்வு போய்க்கொண்டிருக்கும் நிலையில், அம்மாவட்ட கலெக்டரை கொலை செய்வதற்காகத் தமிழ்நாட்டில் இருந்து ஒரு கும்பல் அந்த ஊரில் கால் பதிக்கிறது.

அவர்களது வரவு, சம்பந்தமே இல்லாமல் பார்த்திபன் குடும்பத்தினரைப் பாதிக்கிறது.

ஒருநாள் இரவு, பார்த்திபன் நடத்திவரும் கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயல்கிறார் அக்கும்பலைச் சேர்ந்த ஒருவர் (சாண்டி).

அந்தநேரத்தில், பார்த்திபனோடு மகள் சிட்டுவும் ஸ்ருதி என்ற பணிப்பெண்ணும் அங்கிருக்கின்றனர்.

அந்த நபரால், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது.

தன்னைச் சார்ந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக அக்கும்பலைச் சுட்டுத் தள்ளுகிறார் பார்த்திபன். அந்த வழக்கு விசாரணை குறித்த தகவல்கள், இந்தியா முழுக்கவிருக்கும் வெவ்வேறு தினசரிகளில் வெளியாகிறது.

அதன் தொடர்ச்சியாக, தெலங்கானாவில் செயல்பட்டு வரும் ‘தாஸ் & கோ’ எனும் புகையிலை நிறுவனத்தைச் சேர்ந்த ஆண்டனி தாஸ் (சஞ்சய் தத்), ஹெரால்டு தாஸின் (அர்ஜுன்) ஆட்கள் பார்த்திபனைத் தேடி தியோக் வருகின்றனர்.

‘நீதானே லியோ’ என்று கேட்கின்றனர். அதற்கு, பார்த்திபன் ‘இல்லை’ என்கிறார். அவர்கள் அழுத்திக் கேட்க, ‘நீங்கள் வேறு யாரையோ மனதில் நினைத்துக்கொண்டு என்னைத் தேடி வந்திருக்கின்றனர்’ என்கிறார்.

ஆனால், அவர்களோ ‘நீதான் லியோ என்று ஒப்புக்கொள்’ என்கின்றனர். பார்த்திபனோ ‘நீங்கள் பேசுவதே எனக்குப் புரியவில்லை’ என்று சொல்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, பார்த்திபனையும் அவரது குடும்பத்தினரையும் ஆட்டுவிக்கும் வகையில் ஆண்டனி கும்பலின் செயல்பாடுகள் அமைகின்றன.

அது எல்லை மீறும்போது, சத்யாவுக்குத் தனது கணவர் பார்த்திபன் மீது சந்தேகம் எழுகிறது. அது தீர்வினை எட்டுவதற்குள், பார்த்திபன் குடும்பத்தினருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வேலைகளில் ஆண்டனியின் ஆட்கள் இறங்குகின்றனர்.

குடும்பத்திற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் பார்த்திபன், அதன்பின்னர் என்ன செய்தார்? லியோவும் பார்த்திபனும் ஒரே ஆளா, இரு வேறு நபர்களா? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘லியோ’வின் மீதி.

மீண்டும் விஜய் – த்ரிஷா!

திருப்பாச்சி, கில்லி, குருவி படங்களில் விஜய் – த்ரிஷா ஜோடியை பார்த்து ஆச்சர்யப்பட்டவர்களுக்கு, மீண்டும் அதே விதமான அனுபவத்தைத் தர முயன்றிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதில், அவருக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது.

த்ரிஷா இந்த வயதிலும் அழகாகத் தோன்றுவது, அவரது ரசிகக் கூட்டத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

விஜய்யைப் பொறுத்தவரை, இதில் அவரது பாத்திர அமைப்பு கொஞ்சம் வித்தியாசமானது.

அதற்கேற்றவாறு அவர் நடித்திருப்பது, அவரது இருப்பைக் கொண்டாட வைக்கிறது.

அந்த வகையில் மாஸ்டர், கத்தி, காவலன் படங்களுக்கு அடுத்தபடியாக இதில் அபாரமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்தப் படத்தில் மிகப்பெரிய பட்டாளமே நடித்துள்ளது. அவர்களில் விஜய்யின் குழந்தைகளாக வரும் மேத்யூ தாமஸ், இயலுக்கு இரண்டொரு காட்சிகளில் இடம்தரப்பட்டுள்ளது.

கௌதம் மேனன் – பிரியா ஆனந்த் ஜோடியும் ஆங்காங்கே சில காட்சிகளில் வந்து போகிறது.

மன்சூர் அலிகான், மிஷ்கின், பாபு ஆண்டனி, மதுசூதன் ராவ், லீலா சாம்சன், டான்ஸ் மாஸ்டர் சாந்தி மற்றும் தினேஷ், ஜனனி குணசீலன், சச்சின் மணி, ராமகிருஷ்ணன், வையாபுரி, நாசரின் சகோதரர் ஜவஹர் என்று நிறைய பேர் இதில் நடித்துள்ளனர்.

சிலருக்குச் சில காட்சிகளும், சிலருக்கு சில ஷாட்களும் தலைகாட்ட வாய்ப்பளித்திருக்கிறார் இயக்குனர்.

அவர்களில் மடோனா செபாஸ்டியன், சாண்டி மாஸ்டர் இருப்பு நம்மைக் கவர்கிறது.

இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப்பை ஒரேயொரு ஷாட்டில் இடம்பெறச் செய்து வீணடித்திருக்கிறது ‘லியோ’. ஜார்ஜ் மரியான் வரும் காட்சிகள் கொஞ்சம் கூட ஈர்க்கவில்லை.

இந்த படத்தில் வில்லன்களாக வரும் சஞ்சய் தத்தும் அர்ஜுனும் நடித்துள்ளனர். ‘கேஜிஎஃப்’ அளவுக்கு இல்லாவிட்டாலும், கொஞ்சமாக மிரட்டியிருக்கிறார் சஞ்சய் தத். அர்ஜுன் வழக்கம்போல வில்ல அவதாரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சண்டைக்காட்சிகளில் அவர்களை ஒரே அடியில் விஜய் வீழ்த்துவது போல காட்சிப்படுத்தாதது இப்படத்தின் ப்ளஸ்.

தொடக்கத்தில் கழுதைப்புலியை விஜய் அடக்குவதாக ஒரு காட்சி உண்டு. அதேபோல, விஜய் நடத்திவரும் கடைக்குள் சாண்டி புகுவதாகவும் ஒரு சண்டைக்காட்சி உள்ளது.

அக்காட்சிகளில் அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைக்காட்சி வடிவமைப்புக்கு உருவம் கொடுத்திருப்பதில் வியக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா.

இப்படத்தில் வித்தியாசமான காட்சியனுபவம் கிடைக்க வகை செய்திருக்கிறது அவரது அபார உழைப்பு.

போலவே, ஒளிப்பதிவுக்குத் தக்கவாறு பிரேம்களை ‘ரிச்’சாக காட்ட உதவியிருக்கிறது சதீஷ்குமாரின் கலை வடிவமைப்பு.

விஜய்யின் வீடு, பேக்கரி சம்பந்தப்பட்ட காட்சிகள் அழகுற இருப்பதற்கு அவரது குழுவினரின் பங்களிப்பு முக்கியமாக அமைந்துள்ளது.

படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் முன்பாதியில் காட்டிய ஈடுபாட்டைப் பின்பாதியில் காட்டவில்லை. அதற்கான வாய்ப்பையும் லோகேஷின் திரைக்கதை தரவில்லை.

கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ படத்தில் ரஜினியின் பாத்திரத்தைச் சுற்றி ஒரு மர்மம் கட்டமைக்கப்பட்டிருக்கும். அது விடுபடும் பிளாஷ்பேக் பகுதியும் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

ஆனால், இரண்டையும் பொருத்திப் பார்த்த ரசிகர்கள் திருப்தியுறவில்லை. இதிலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது. அதனாலேயே, படம் முடிவுறும்போது ‘சுமாரான படம்’ என்ற எண்ணமே மனதில் மிகுகிறது.

அந்த எண்ணத்தை மழுங்கடிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது அனிருத்தின் பின்னணி இசை. ஆனால், பாடல்கள் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தவில்லை.

ஏன் இவ்வளவு பில்டப்?

சிறு குழந்தைகளுக்கு ஒரு கதையைச் சொல்லிவிட்டு, ‘இந்தக் கதையில் இருந்து கிடைக்கும் நீதி என்ன’ என்று கேட்டுப் பதில் சொல்வது நம் வழக்கம்.

அதேபோன்று, லியோவின் முடிவில் ‘இந்த படத்தில் இருந்து நீங்கள் பெறும் நீதி என்ன’ என்று கேள்வி எழுப்புகிறார் லோகேஷ்.

சரி, பதிலையும் அவரே சொல்வார் என்று எதிர்பார்த்தால், ‘இந்த கேள்வியிலே ஒரு நீதி இருக்குல்ல, அதுதான் நீதி’ என்று ‘கில்லி’ விஜய் பாணியில் காமெடி பண்ணியிருக்கிறார்.

லியோவை ‘எல்சியு’வாக மாற்ற அவர் முயற்சிக்கும் இடம், திரையில் அப்படித்தான் அமைந்திருக்கிறது. அதனைப் பார்த்தபோது, ‘இதுக்கு எதுக்கு இத்தனை பர்னிச்சரை உடைச்சீங்க’ என்ற எண்ணமே நமக்குள் தோன்றுகிறது.

ஒரு சராசரி கமர்ஷியல் படம் போன்று அல்லாமல், மேற்கத்தியப் படங்களில் இருக்கும் ஹீரோயிசத்தை திரையில் காட்டும் வித்தை லோகேஷிடம் உண்டு. ‘கைதி’, ‘விக்ரம்’ அதற்கான உதாரணங்கள்.

இதில், அது நம்மைத் திருப்பதிப்படுத்துவதாக அமையவில்லை. அப்படங்களில் கதை கொஞ்சம் ‘நீளமானதாக’ இருக்கும். இதிலோ, ‘ஒரு பக்கக் கதை’ என்ற அளவிலேயே இருக்கிறது.

‘ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ எனும் ஆங்கிலப் படத்தைத் தழுவி ஜெகபதி பாபுவை வைத்து ஏற்கனவே தெலுங்கில் ‘காயம் 2’ என்றொரு படம் உருவாக்கப்பட்டது; அது பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

அதன்பிறகு, வில்லன் வேடங்களில் ஜெகபதிபாபு நடிக்கப் போய்விட்டார். அப்படியிருக்க, அந்தக் கதையை மீண்டும் தழுவி ஒரு விஜய் படத்தை உருவாக்குவதற்கான அவசியம் என்னவென்று புரியவில்லை.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை வில்லன்களாக காட்டும்போது, ஹீரோயிசம் கொஞ்சம் அடிவாங்கும்.

கே.வி.ஆனந்தின் ‘மாற்றான்’ உட்பட அதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

அது தெரிந்தும், இதில் அந்த தவறை இழைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இவையனைத்தையும் தாண்டி, ‘இந்த படத்திற்கு எதற்கு இவ்வளவு பில்டப்’ என்ற கேள்வியே படம் பார்த்து முடித்ததும் நம் மனதில் பூதாகரமாகிறது.

’இது வழக்கத்திற்கு மாறான விஜய்யின் ஆக்‌ஷன் படம்’ என்பது மட்டுமே லியோவுக்குப் போதுமானது.

சரி, படத்தைப் பார்க்க வைக்கும் விஷயங்கள் இருக்கின்றனவா? படத்தின் தொடக்கத்தில் கழுதைப்புலி ஊருக்குள் வருவதாக ஒரு காட்சி உண்டு.

போலவே, விஜய்யின் கடைக்கு வரும் சாண்டி, சாக்லேட் காபி கேட்பதாக ஒரு காட்சி உள்ளது.

அவையெல்லாம் ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடிக்கும்.

அதிலும், தொண்ணூறின் பிற்பாதியில் ரசிகர்களை ஆட்டுவித்த ‘கரு கரு கருப்பாயி..’, ‘தாமரைப் பூவுக்கும்..’ பாடல்களை சண்டைக்காட்சியின் பின்னணியில் லோகேஷ் ஒலிக்கவிட்டிருப்பது வித்தியாசமானதொரு காட்சியனுபவத்தைத் தருகிறது.

படம் முழுக்க அந்த திருப்தி கிடைக்குமாறு செய்திருந்தால் ‘லியோ’வை கொண்டாடியிருக்கலாம்.. என்ன செய்ய, அது நிகழவில்லையே?

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment