நடப்பாண்டுக்கான உலகக் கோப்பைத் தொடருக்கான லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
இதில், இந்தியா – வங்காளதேச அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. தன்சித் ஹாசன் 51 ரன்களும் லிட்டன் தாஸ் 66 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹூசைன், மெஹிடி ஹாசன் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களைக் குவித்தது.
இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் சிறப்பான தொடக்கத்தை தந்தனர்.
ரோகித் சர்மா 48 ரன்னிலும், சுப்மன் கில் 53 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்ரேயாஸ் 19 ரன்னில் வெளியேறினார். ஆனாலும் இந்திய அணி 41.3 ஓவர்கள் முடிவில் 261 ரன்களைக் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்களை எடுக்க, கே.எல். ராகுல் 34 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதன் மூலம், இந்த உலகக் கோப்பைத் தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி நான்கிலும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.