பிள்ளைங்க கிட்டே அம்மா பேதம் காட்டுவாங்களா?

பங்காரு அடிகளாருடனான அனுபவம்.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைந்திருக்கிறார்.

அவருடைய உடல் அடக்கத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பெண்கள் மேல்மருவத்தூரில் திரண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

“அம்மா’’ என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார் 82 ஆவது வயதில் உடல்நலம் குன்றி மறைந்திருக்கிறார்.

மேல்மருவத்தூர் அம்மன் படத்துடன் அவருடைய படமும் இடம் பெற்றிருக்கும்.

இந்த அளவுக்குப் பெண்கள் மேல்மருவத்தூர் என்கிற ஊரில் திரள்வதற்கு என்ன காரணம்?

இரண்டு நேரடியான அனுபவங்களை இந்தச் சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன்.

நேரடியாக அவர் அபூர்வமாகவே பத்திரிகையாளர்களைச் சந்தித்திருக்கிறார்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரை மேல்மருவத்தூர் கோவிலில் ஆங்கில இதழுக்காகச் சந்தித்தேன்.

அப்போது மேல்மருவத்தூர் இப்போதிருக்கும் அளவுக்குப் பிரபலமாகாவிட்டாலும், பெண்கள் கூட்டம் அப்போதும் குறையவில்லை.

கோவிலில் ஓரிடத்தில் மாடிப்பகுதியில் அவர் இருந்த அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள்.

மர நாற்காலி ஒன்றில் வெப்பம் தகித்த அறையில் அமர்ந்திருந்தார். எளிய வேட்டி மட்டும் அணிந்திருந்தார்.

அவரைச் சந்தித்தது காலை பத்து மணியளவில். அன்று மாலை வரை – அவருடன் இருக்க முடிந்தது.

ஆசிரியராக அவர் இருந்த போது சைக்கிளில் பயணப்பட்ட அனுபவங்களைச் சொல்லிக் கொண்டு வந்தார்.

“பெண்களைத் தாயாக நினைக்கணும். இங்கே வர்றவங்க என்னை அம்மான்னு தான் கூப்பிடுறாங்க.. நம்ம அம்மாவை யாராவது ஒதுக்கி வைப்போமா? அவர்களை “இங்கே வராதே.. அங்கே வராதே’’ன்னு சொல்லுவோமா? அதைத் தான் நான் இங்கே கோவில்லே செய்றேன்.

பெண்கள் யாராக இருந்தாலும், அவங்க கோவிலுக்குள் வந்து கருவறைக்கு வந்து வழிபடலாம்.

கீழே போய்ப் பாருங்க, அவங்க தான் இங்கே பூஜை பண்றாங்க. பிரசாதம் கொடுக்கிறாங்க. வர்றவங்க கிட்டே சாதி, மதம் எதுவும் பார்க்கிறதில்லை..

பெண்களைத் தீட்டு நாட்களில் கோவிலுக்கு வரக்கூடாதுன்னு பொதுவாகச் சொல்வாங்க. அதையும் இங்கே மாத்தியிருக்கோம்.

தீட்டுக் காலமா இருந்தாலும், பெண்கள் இங்கே வரலாம்.

உள்ளே இருக்கிற அம்மனும் பெண் தானே.. அம்மா தானே.. அம்மனுக்கு முன்னால் எந்தத் தீட்டும் இல்லை.. மத்த கோவில்களில் எப்படி இருக்குங்கிறதை பார்க்கலை.

மத்த இடங்களில் திறக்காத கதவு இங்கே வர்ற பெண்களுக்குத் திறந்திருக்கும். ஆண்களும் சேர்ந்து தானே வர்றாங்க.. அவர்களும் இதை ஒத்துக்கிறாங்க.. இல்லையா?” என்று சொல்லிக் கொண்டு போனவர் விடைபெறும் போது சொன்னார்.

“தங்களுக்குச் சொந்தமான தாய் வீட்டுக்குப் போறப்போ எப்படிப் பெண்கள் போவாங்களோ, அப்படித் தான் இங்கேயும் பெண்கள் – முக்கியமா தாய்மார்கள் வர்றாங்க… தன்னோட பிள்ளைக கிட்டே அம்மா எங்கேயாவது பேதம் காட்டுவாங்களா?’’

அவருடைய சொற்களில் தொனித்த இந்த எளிய பாரபட்சம் காட்டாத உளவியல் தான் பல லட்சக்கணக்கான பெண்களை இங்கு வரவழைத்திருக்கிறது.

இரண்டாவது முறை – நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பிரச்சாரத்திற்காக‍ காரில் சென்றபோது, அவருடன் சென்றிருந்தேன்.

வழியில் மேல் மருவத்தூர் வந்ததும் காரை கோவிலுக்கு முன்பு நிறுத்தச் சொன்னார் சிவாஜி.

தன்னுடைய சட்டையைக் கழற்றிவிட்டு உள்ளே போனதும் வரவேற்றார் பங்காரு அடிகளார்.

அவர் வந்ததுமே கருவறையில் இருந்த பெண்கள் பூஜை பண்ணி,  ஏற்றிய கற்பூரத்தை ஏந்தி வந்தபோது, கண்ணில் ஒற்றிக் கொண்டார்.

உடனிருந்த பங்காரு அடிகளார் சில வார்த்தைகள் மட்டுமே பேசினார்.

பத்து நிமிடங்களுக்குள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.

செவ்வாடையுடன் ஏகப்பட்ட பெண்கள் கூட்டம் அங்கு திரண்டிருப்பது குறித்துப் பெருமதிப்புடன் காரில் பேசியபடி சிவாஜி வந்தது நினைவில் இருக்கிறது.

– மணா

Comments (0)
Add Comment