நான் பெறாத அந்தப் புள்ள நீதாம்பா…!

மூதாட்டியின் பதிலால் நெகிழ்ந்த எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் இடம் பெற்ற ‘பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?…’ பாடல் காட்சி வைகை அணையில் படமாக்கப்பட்டது.

அப்போது எம்.ஜி.ஆரை பார்க்க ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். தன்னைக் காண வந்த மக்கள் தாகத்தில் தவிக்கக் கூடாது என்று தனது செலவில் 2 லாரிகளில் பெரிய கேன்களில் தண்ணீரும் மோரும் கொண்டு வரச்சொல்லி திரண்டிருந்த மக்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர்.

பயங்கர கூட்டம், எந்தப் பக்கம் திரும்பினாலும் மக்கள் தலைகள். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

எம்.ஜி.ஆரை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளை மீறி ஒரு மூதாட்டி எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கே வந்துவிட்டார்.

அவரிடம் பரிவோடு பேசிய எம்.ஜி.ஆர்., அவரது குடும்பம் குறித்து விசாரித்தார்.

‘‘உங்களுக்கு பிள்ளைகள் இருக்காங்களாம்மா?’’

‘‘இருக்காங்கப்பா’’ என்று பதிலளித்த மூதாட்டியிடம், ‘‘என்ன பண்றாங்க?’’ என்று அடுத்த கேள்வியை கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘‘ஒரு புள்ள பட்டாளத்துல இருக்கு. இன்னொரு புள்ள சினிமாவுல இருக்கு’’

மூதாட்டியின் இந்த பதிலால் எம்.ஜி.ஆருக்கு வியப்பு. சினிமாவில் இருக்கிறார் என்றால் நிச்சயம் தனக்குத் தெரிந்திருக்கும் என்று எண்ணியபடியே கேட்டார்…

‘‘சினிமாவில் இருக்கும் பிள்ளையின் பெயர் என்ன?’’

‘‘நான் பெறாத அந்தப் புள்ள நீதாம்பா’’

பதிலளித்த அந்தத் தாயின் கண்கள் மட்டுமல்ல; அவரை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆரின் கண்களும் பனித்தன.

(புகைப்படத்தில் வைகை அணையில் தன்னைக் காணத் திரண்ட மக்கள் கடலை பார்க்கிறார் மக்கள் திலகம். அருகே இடுப்பில் கைவைத்தபடி இயக்குநர் ப.நீலகண்டன்)

படம் உதவி: ஞானம்.

Comments (0)
Add Comment