– வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
இந்த (2023) ஆண்டு, மறைந்த ஏவிபி ஆசைத்தம்பியின் நூற்றாண்டாக நினைவு கூரப்படுகிறது.
தி.மு.க-வின் முன்னணித் தலைவரில் ஒருவராகிய ஏவிபி ஆசைத்தம்பி துவக்கத்தில் விருதுநகர் நகர்மன்ற உறுப்பினராக இருந்தவர். பெருந்தலைவர் காமராஜர் ஊர் எனபதால் காமராஜருக்கு இவர் நன்கு அறிமுகமாகி இருந்தார்.
பின்னர், சென்னை ஆயிரம் விளக்கு (1957-62) எழும்பூர் (1967-1971) ஆகிய தொகுதிகளில் இரண்டு முறை திமுக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977-79 களில் திமுகவின் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
ஏவிபி ஆசைத்தம்பியின் குடும்பம் நீதிக்கட்சி, திராவிட இயக்கம் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் என பாரம்பரியமாகவே கழகத்திற்காக பாடுபட்டது என்பதால் அதன் நீண்ட நெடிய வழித்தோன்றலாய் மதிப்பிற்குரிய ஏவிபி ஆசைத் தம்பி இருந்தார்.
ஏவிபி பற்றித் தெரியாத விஷயங்கள்:
ஒரு காலத்தில் அவர் மாடர்ன் தியேட்டரில் திரைப்படங்களுக்கு சிறந்த திரைக்கதை வசனகர்த்தாவாக இருந்தார்.
நாவல், சிறுகதை, அரசியல், இலக்கியம் என பல்வேறு தலைப்புகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
அக்காலங்களில் அவை பரவலாக வாசிக்கப்பட்டன. அவையெல்லாம் இன்று மறு பதிப்பு கூட காணவில்லை என்பது பெரும் சோகம்.
திராவிட இயக்கத்தின் இதழ்கள் பலவற்றில் எழுதி வந்த ஆசைத்தம்பி, 1948ஆம் ஆண்டில் ‘தனி அரசு’ என்னும் திங்கள் இதழைத் தொடங்கினார். அதில் பல கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார்.
சில ஆண்டுகளில் அவ்விதழை மாதமிருமுறை இதழாக மாற்றினார். 1948 பின்னர் 1958ஆம் ஆண்டு முதல் 1963 ஆண்டு வரை நாளிதழாக வெளியிட்டார். அதோடு திராவிட சினிமா என்னும் இதழையும் நடத்தினார்.
அறிஞர் அண்ணாவுடன் மிக அணுக்கமாக இருந்தவர். அவரது நன்மதிப்பைப் பெற்றவர். மிகச் சிறந்த நண்பராகவும் அவருக்கு விளங்கினார். சிறந்த பேச்சாளர். இலக்கிய நயம் தெறிக்கும் பகுத்தறிவு கொள்கைகளைப் பரப்பியவர்.
மனதில் பட்டதை மிகத் தைரியமாக சொல்வார். மிகவும் வெளிப்படையானவர். அதனாலே அவர் எனக்கு மிகவும் பிடித்தவர்.
ரயில் பயணங்களின் போது அவரை நான் சந்திப்பதுண்டு. அப்போது நான் தினமணியில் எழுதிய கட்டுரைகளை வாசித்து விட்டு மனம் திறந்து பாராட்டுவார்.
அத்தகைய கட்டுரைகளில் இருக்கக் கூடிய முக்கியமான குறிப்புகளை, தர்க்கங்களை எடுத்துச் சொல்லி தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்துவார்.
கலைஞருடனும் நட்பு கொண்டவர். கலைஞர் முன்னிலையிலே புகைப்பிடிப்பார். கலைஞர் வீட்டிற்கு அவர் வரும்போது சிகரெட் துண்டுகளை ஆங்காங்கே போட்டு விடுவார் என்பதற்காகவே அவரது வீட்டில் ஒரு (ஆஸ்ட்ரே) சாம்பல் கிண்ணம் கொடுக்கப்பட்டதும் உண்டு.
30 ஆண்டுகளுக்கு முன்பு நுங்கம்பாக்கத்தில் இருந்த அவரது சொந்த இடத்தில் தான் இப்பொழுது வேலு மெஸ் இயங்கிக் கொண்டிருக்கிறது.
1979ல் அந்தமான் தீவிற்கான பயணத்தின் போது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் பழுது ஏற்பட்டு அடைப்புகளால் இருதயம் பாதிக்கப்பட்டு அங்கேயே மரணம் அடைந்தார்.
அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் இடையே முரண்பாடுகள் இருந்த போதும் கூட எம்.ஜி.ஆர். அவரது உடலை விமானத்தின் மூலம் சென்னைக்கு கொண்டு வர முழு மனதுடன் ஏற்பாடு செய்தார்.
அரசியல் நாகரிகங்களும் செயல்பூர்வமான நாணயங்களும் மதிப்பிற்குரிய நடைமுறைகளும் அன்று இப்படித்தான் இருந்தன.
இந்த ஆண்டு அவருக்கான நூற்றாண்டு விழாவாக மலர்கிறது. சிந்தையும் செயலும் ஒன்றென வாழ்ந்து காட்டியவர்கள் என்றும் கொண்டாடப்படுவார்கள் என்பதற்கு ஏவிபி ஆசைத்தம்பி மிகச்சிறந்த உதாரணம்.