தோட்டியின் மகனுக்கு மோகன் என்று பெயரா?

சாதி அமைப்பு குறித்துக் கேள்வி எழுப்பும் நூல்:

“ஒரு சாதி இந்துவுக்குப் பிறந்த குழந்தை, நீதிபதி ஆவதற்கான கனவைக் கொண்டிருக்கிறது. ஆனால், தோட்டியின் குழந்தையோ இன்னொரு தோட்டியாவதற்கான கொடூர யதார்த்தத்தைக் கொண்டிருக்கிறது”
– பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்

அம்பேத்கர் சொன்ன வரிகளின் கதையை மையமாக கொண்ட நாவல் தான் ‘தோட்டியின் மகன்’.

மலையாள இலக்கிய உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான தகழி சிவசங்கரப் பிள்ளை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மையமாக எழுதிய நாவல் இது.

மலம் அள்ளும் தொழிலாளர்களின் / மக்களின் துயரமான வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு எழுதியுள்ளார்.

இசக்கிமுத்து, சுடலைமுத்து & மோகன் என்று மூன்று தலைமுறைகளின் வாழ்க்கையை நம் கண்முன் கொண்டு வருகிறார்.

படித்து முடித்த பின் வலியும் வேதனையும் நெஞ்சை அடைத்தது. படிக்க படிக்க இந்த கேடுகெட்ட இந்து மதமும், ஜாதி அமைப்பையும் நினைத்து கோபம் தான் வருகிறது.

இசக்கி முத்து – அடையாளம் இல்லாமல் இறந்தார்.
சுடலைமுத்து – தனது கனவு நிறைவேறாமல் இறந்தார்.
மோகன் – தனது கண்ணியத்தையும் நீதியையும் நிலைநாட்ட போராடினார்.

தோட்டியின் மகன் தோட்டியாக தான் ஆக வேண்டும் என்ற எழுதப்படாத விதியை உடைக்க சுடலைமுத்து என்கிற தோட்டியும், வள்ளி என்கிற தோட்டிச்சியும் போராடுகிறார்கள்.

இறுதியில் அவர்களின் இலட்சம் நிறைவேறுகிறதா, இல்லையா? என்பது தான் நாவலின் சுவாரஸ்யம்.

இந்தச் சமூகம் தோட்டி வேலை செய்யும் மனிதர்களை எப்படிப் பார்க்கிறது.

அவர்கள் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள், அவர்களின் ஆசைகள், கனவுகள், வலிகள் அனைத்தையும் மிகச்சிறப்பாக தோலுரித்துக் காட்டுகிறது.

இந்தக் கதை சம காலத்திலும் பொறுந்திப் போவது தான் பெரிய கொடுமை.

நாவல் வாசித்து முடிக்கும் பொழுது கண்களில் கண்ணீர் வராமல் முடிக்க முடியாது.

சகிக்கப் பழகியவனுக்கு சாக்கடை எம்மாத்திரம். ஆனால் இந்தச் சமூகம் எப்படி அவனை பார்க்கிறது என்பதில் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது.

இது 1947 இல் மலையாளத்தில் எழுதிய நாவல், 1951 -52 களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 1957 முதல் 1957 வரை சரஸ்வதி இதழில் தொடர்கதையாக வெளியாயிற்று.

அதன் பிறகு 50 வருடங்கள் கழித்து புத்தக வடிவம் பெற்று 2000 ஆம் ஆண்டு முதல் புத்தகமாக வாசகர்கள் கைகளில் வளம் வந்துக் கொண்டிருக்கிறது.

இது முதலில் மலையாளத்தில் வெளியான போது இலக்கியத்தில் மட்டுமல்ல சமூக பார்வையிலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதுவரை யாரும் பேசாத கதைக்களம், கேட்காத மொழி, அஞ்சிய நாற்றம், வாழ்ந்திராத வாழ்வு என்று பின் தள்ளப்பட்ட ஒரு மக்களின் குரலாக ஒலிக்கத் துவங்கியது. அதுவே இந்த படைப்பின் வெற்றியாகவும் கருதப்படுகிறது.

இந்த நாவல் களமாடும் இடங்கள் கேரள மாநிலம் ஆலப்புழை. அங்கு தோட்டியாக இசக்கிமுத்துவில் இருந்து துவங்குகிறது.

வார்த்தையில் கூட அருவருப்பை உணரும் ஒரு இழிவான பொருளாக இருக்கும் மலம் என்னும் ஒன்று தான் இந்தக் கதை முழுக்க வலம் வந்து கொண்டிருக்கும். ஏனெனில் இசக்கி முத்து ஒரு மலம் அள்ளும் தொழிலாளி.

வறுமையைப் போக்க மூக்கைத் துளைத்து மலம் அள்ளியவன், நோய்வாய்ப்பட்டு கிடக்கின்ற வேளையில், இந்த வேலை அவன் மகன் சுடலைமுத்துவுக்கு திணிக்கப்படுகிறது.

இதிலிருந்து வெளியேறத் துடிக்கும் சுடலைக்கு தந்தையின் இறப்பின் மூலம் அதுவே நிரந்தரமாகிறது.

மற்ற தோட்டிகளைவிட சற்றே சிந்திக்கத் தெரிந்திருந்த சுடலை முத்து இதிலிருந்து விடுபட பல முன்னேற்பாடுகளை, பணம் சேமித்து வைக்கவும், நிலம் வாங்கவும், தன் மனைவி, மக்களை இதில் ஈடுபடுத்த கூடாது என்று வைராக்கியமாக உழைக்கிறான்.

வேறு எந்தத் தோட்டிகளுக்கும் தோன்றாத சிந்தனைகள் பல அவனுக்கு உதயமாகிறது. அதில் ஆங்காங்கே சில தியாகங்களை செய்யவும் பல நேரங்களில் சுயநலவாதியாக இருக்கவும் செய்கிறான்.

அதனாலயே மனைவிக்கும் அவன் மீது வெறுப்பு ஏற்படும்படி பல நிகழ்வுகள் அரங்கேறுகிறது.

முதல் மகன் பிறந்ததும் அவனுக்கு மோகன் என்று பெயரை வைத்து அழைக்க, மற்றவர்களின் கேளிக்கைக்கு ஆளாகிறான் “என்னது தோட்டியின் மகனுக்கு மோகன் என்று பெயரா என்று”.

தோட்டிக்கு இது தான் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டம் இருக்கா என்று கோவத்தின் உச்சிக்கு செல்கிறான்.

தன்னை இழிவாக நினைக்கும் இந்தச் சமூகத்தில் தன் மகனும் அந்த இழி சொல்லை சுமக்க கூடாது என்று வெறிகொண்டு உழைகிறான்.

அதனாலேயே மகனை விட்டு விலகி நிற்க முயற்சிக்கிறான், அவனோடு சேர்ந்து உணவருந்த மறுக்கிறான்.

எப்படியாவது மோகனை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துவிட்டால் அவன் இந்த தொழிலில் இருந்து விடுபட்டுவிடுவான் என்று நினைத்து அதற்கான முயற்சியில் இருக்கும் வேளையில் அங்கேயும் சிலர் அருவருப்பை கொட்டி தீர்க்கவே முனைகிறார்கள். “என்னது தோட்டியின் மகன் ஸ்கூலுக்கு போறதா?“ என்று.

ஆனால், இதுவரை எந்தத் தோட்டிகளுக்கும் உதிக்காத ஒரு சிந்தனை மகனை பள்ளிக்கு அனுப்புவது என்பது, தன் மனைவி வள்ளிக்கும் தன் குறிக்கோளை தெளிவுபடுத்தி கொண்டே இருக்கிறான்.

மகனை தோட்டியின் மகன் போல் இல்லாமல் மிகவும் சுத்தமாக, நல்ல துணிகளை அணிவித்து மிக உயர்வாகவே வளர்க்கிறார்கள். ஆனாலும் சிலர் சுடலையின் மூலமாக மனைவியையும், குழந்தையும் அடையாளம் காணும்போது அதை சகிக்க தவிக்கிறான்.

தோட்டியின் மகன் பள்ளியில் சேர்க்க சிரமம் என்பதால் வேறு ஒருவரின் மருமகனாக பள்ளியில் மோகன் சேர்க்கப்படுகிறான்.

பள்ளியில் ஆசிரியர் ஒருநாள் தோட்டியின் மகன் உனக்கெல்லாம் படிப்பே வராது என்று தலையில் அடித்ததும், முதன் முதலாக அந்த வார்த்தையை கேட்கும் அவன் அம்மாவிடம் சொல்லி அழுகிறான் .

தோட்டி என்றால் என்ன அம்மா என்ற கேள்விக்கு வள்ளி பதில் சொல்ல மழுப்புகிறாள்.

ஏனென்றால் சுடலைமுத்து எந்த சூழ்நிலையிலும் தான் என்ன வேலை செய்கிறேன் என்று சொல்ல கூடாது என்று மனைவியிடம் சொல்லியதால் அவளும் அதை தவிர்க்கிறாள்.

“இனிமே அப்பாவை அந்த வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லுமா” என்று அது என்ன வேலை என்றே தெரியாமல் சொல்லும் மோகன்.

இவ்வாறாக சுடலைமுத்து தன் குறிக்கோளை அடைக்கிறானா? மகன் படித்து பெரிய நிலைக்கு வருகிறானா? என்பது தான் மீதி கதை .

அழகான வார்த்தைகளால் பலரின் உள்ளத்தில் ஊடுருவும் இந்த தோட்டியின் மகன். தந்தையை புதைத்த இடத்தில நாய்கள் தோண்டி, பிணத்தை மண்ணுக்கு வெளியே தள்ளி அதை முகம் கழுத்து கடித்து இழுத்திருப்பதை மற்ற தோட்டிகளோடு சுடலை முத்துவும் பார்த்து கதறும் காட்சிகள், அதைத் தொடர்ந்து எழுதியிருக்கும் வாசகம் நூலிலிருந்து,

“பிச்சாண்டி சுடலைமுத்துவை நெருங்கி அவன் கையைப் பிடித்து இழுத்து வந்தான். பிணத்தை குழியினுள் புதைத்துவிட்டால் அத்துடன் துக்கமும் சிறிது புதையுண்டது போலத்தானே? ஆனால் தோட்டிக்கு அந்த நிம்மதி கூடக் கிடையாது. அதற்கும் ஒரு தடை. பிணம் அழுகிக் குளுகுளுத்திருப்பதை மீண்டும் அவன் பார்க்கவேண்டும்”.

இவ்வாறாக அவர்களின் அவலங்களை வெகு நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது.
வசதி படைத்தவன் வயிற்றில் இருக்கும் மலம் வெளியே வந்த பிறகு அதை சுத்தம் செய்கிறவன் ஏளனமாகப் பறக்கப்படுகிறான்.

பெரும்பாலும் இதுபோன்ற சமூகத்தை சுத்தம் செய்கின்றவர்களை சமூகம் இழிவாக பார்ப்பதை தவிர்த்தால் அதைவிட வேறு ஏதும் கைம்மாறு அவர்களுக்கு செய்து விடப்போவதில்லை .

குலம் காக்க கூலித் தொழில் செய்ததெல்லாம் குலத்தொழில் ஆனது. இன்றும் பல ஆடு மாடுகளின் கூட்டம் அதையே முன்னெடுக்க விழைகிறது. அதுதான் தர்மம் என்று கூக்குரல் இட்டுக்கொண்டு கோமாலிகளாய் சுற்றி திரியவும் செய்கிறார்கள்.

தோட்டி வேலை செய்யும் மக்களின் வாழ்வையும் தன் மகனைத் தோட்டியாக்கிடக் கூடாது என்று நினைத்த ஒரு தோட்டியின் போராட்டத்தையும் சற்று ஆழமாகப் பேசுகிறது இந்நாவல்.

அந்த வகையில் இந்த தோட்டியின் மகன் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

விஞ்ஞானங்கள் ஏகபோகமாக வளர்ந்து விட்ட இக்காலத்திலும் மனிதக் கழிவை மனிதன் அள்ளும் அவலம் இருக்கத்தான் செய்கிறது.

எனில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன் அப்பணி எவ்வளவுக் கொடூரமாக இருந்திருக்கும் என்பது கற்பனைக்கு எட்டாத எல்லை.

அதே போன்று தான் சுடலை முத்துவின் சுயநலம் தன் சாகக்களுக்கே தீங்கிழைத்து இருந்தாலும் அதனையும் மீறிய சில நிகழ்வுகள் அதனை கடந்துச் செல்ல வைக்கிறது.

சுடலை முத்துவின் மகன் தோட்டியாகக் கூடாது என்று அவனால் ஆனமட்டும் முயன்று தான் பார்த்தான். ஆனால் சமூகமோ, இயற்கையோ, கர்மாவோ, இறைவனோ ஏதோ ஒன்று அதனை நிறைவேற விடாமல் செய்து விட்டது.

ஒரே நிம்மதி சுடலை முத்து இறக்கும் வரை அவன் மகன் தோட்டியல்ல.
மேலும் நிச்சயம் சுடலைமுத்து என்கிற தோட்டியின் மகனாகிய மோகனின் மகன் தோட்டியாக மாட்டான் .

அதனால் என்ன, எத்தனையோ தோட்டிகள் தன் அடுத்த தலைமுறையை இதே கொடுமைக்கு அடகு வைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

நூல் : தோட்டியின் மகன்
ஆசிரியர் : தகழி சிவசங்கர பிள்ளை (மலையாளம் )
ஆசிரியர் தமிழில் : சுந்தர ராமசாமி
பக்கங்கள் : 173
விலை : ரூ.200/-
பதிப்பகம் : காலச்சுவடு

Comments (0)
Add Comment