பிரிவென்பது தீர்வல்ல என்று சொல்லும் ‘இறுகப்பற்று’!

உறவுச் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதைகள் மிகச்சரியான காட்சியாக்கத்துடன் இருந்தால் ரசிகர்களைக் கவரும். அதற்கு, கதையில் வரும் பாத்திரங்கள், பிரச்சனைகள் சாதாரண மனிதர்களின் வாழ்வோடு பொருந்திப் போக வேண்டும் என்ற கட்டாயமில்லை.

‘இப்படியும் சில மனிதர்கள் இருப்பார்கள்; இப்படியும் பிரச்சனைகள் வரும்’ என்று ரசிகர்கள் ஏற்றுக்கொண்டாலே, அப்படங்கள் வெற்றியடையும்.

கடந்த வாரம் வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம், கிட்டத்தட்ட அம்மாதிரியான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ஜோடிகள் பிரிவு!

கருத்து வேறுபாடுகள் காரணமாக, மூன்று தம்பதிகள் பிரிவைச் சந்திக்க நேர்கின்றன.

ஒரு வீட்டுக்குள் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துப் பேசாமலிருப்பதில் தொடங்கி குடும்பநல நீதிமன்றத்தை நாடுவது வரை, அவர்களது பிரச்சனைகள் வெவ்வேறு வடிவங்களுக்குத் தாவுகின்றன.

அந்த காலகட்டத்தில், அந்த ஆறு பேரின் வாழ்வும் எப்படியெல்லாம் உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டது என்பதைச் சொல்கிறது யுவராஜ் இயக்கியுள்ள ‘இறுகப்பற்று’.

இக்கதையில் ரங்கேஷ் – பவித்ரா, அர்ஜுன் – திவ்யா, மனோகர் – மித்ரா என்று மூன்று ஜோடிகள் இடம்பெற்றுள்ளன.

குழந்தை பெற்றபிறகு பவித்ரா குண்டாக இருக்கிறார் என்பது ரங்கேஷின் பிரச்சனையாகச் சொல்லப்படுகிறது.

கடந்த ஆறு மாதங்களாகப் பணிக்குச் செல்லும் திவ்யா தன்னை முற்றிலுமாகத் தவிர்க்கிறார் என்பது அர்ஜுனின் கவலை.

சைக்காலஜிஸ்டாக இருந்துவரும் தனது மனைவி மித்ரா, அவரிடம் ஆலோசனை கேட்கவந்த பவித்ரா மற்றும் அர்ஜுன் போலவே வீட்டிலிருக்கும் தன்னை நடத்துகிறார் என்பது மனோகரின் வருத்தம்.

மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு வடிவத்தில் தென்படும் இம்மூன்று ஜோடிகளின் பிரச்சனைகள், அதனூடே புகுந்து பார்க்கையில் வேறொன்றாகத் தெரிகிறது.

இறுதியில், உண்மையான அன்பு மட்டுமே அனைத்து பிரச்சனைகளையும் கடக்க வைக்கும் என்பதோடு படம் முடிவடைகிறது.

இன்றைய தலைமுறையினருக்கு, இம்முடிவு பழமையானதாகத் தோன்றலாம் என்பதுவே இப்படத்தின் மிகப்பெரிய குறை.

போட்டா போட்டி மற்றும் வடிவேலுவை நாயகனாக வைத்து தெனாலிராமன், எலி ஆகிய படங்களை ஏற்கனவே தந்திருக்கிறார் இயக்குனர் யுவராஜ் தயாளன்.

அந்த நினைப்பு வந்து மனதில் பயத்தை நிறைத்தாலும், பதறாமல் சிதறாமல் ‘இறுகப்பற்று’ பார்க்க வைத்துப் பத்திரமாக தியேட்டரில் இருந்து வீட்டுக்குச் சில நெகிழ்வான நினைவுகளுடன் அனுப்பி வைத்திருக்கிறார் இயக்குனர்.

நெகிழ்ச்சி நிறைந்த காட்சிகள்!

நடுத்தர, அடித்தட்டு மக்களின் வாழ்க்கை இப்படத்தில் சொல்லப்படவில்லை. அதனால், படம் தொடங்கிச் சில நிமிடங்கள் வரை திரையோடு ஒன்றுவதில் பார்வையாளர்களுக்குச் சிக்கல்கள் இருக்கும்.

ஆனால், தம்பதிகளுக்கு இடையேயான பிரச்சனை சூடுபிடிக்கும்போது அது தானாக உருவாகும்.

அதற்கேற்ப உரையாடல்களும் அவை மோதல்களாக மாறும் இடங்களும் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன; செயற்கையாகவோ அல்லது காட்சித்துண்டுகளாகவோ அவை தெரிவதில்லை.

இயக்குனர் யுவராஜ் தயாளன், ஒரு நேர்க்கோடு போல காட்சிகளை அடுத்தடுத்து உருவாக்கியிருப்பது நேர்த்தியான கதை சொல்லலுக்கு வழி வகுத்திருக்கிறது. அதனை அழுத்தம் திருத்தமாக உணரும் வகையிலான காட்சியாக்கம் அமைந்திருப்பது சிறப்பு.

பீல்குட் படம் என்பதால், எப்போது பார்த்தாலும் புத்துணர்வு கிடைக்கும் வண்ணம் ஒளியமைப்பையும் காட்சிக்கோணங்களையும் அமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய்.

‘மிக நீளமான விளம்பரப்படம்’ பார்த்த உணர்வைத் தருகிறது அவரது பங்களிப்பு.

இந்தப் படம் சாதாரண ரசிகர்களைக் கவர்வதிலும், கவராமல் போவதிலும் நிச்சயம் கலை வடிவமைப்பு முக்கியப் பங்கு வகிக்கும்.

பெருநகரத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் மனிதர்களின் வீடுகளையும் அலுவலகங்களையும், அவர்கள் பொழுதுபோக்க விரும்பும் இடங்களையும் திரையில் பிரதிபலிக்க உதவியிருக்கிறார் கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ்.

கதாபாத்திரங்களின் கண்களில் நீர் துளிர்க்கும் காட்சிகளில் கூட, அழகு மிளிர வேண்டுமென்ற முனைப்புடன் உழைத்திருக்கிறது அவரது குழு.

ஜே.வி.மணிகண்ட பாலாஜியின் படத்தொகுப்பு மிகச்சீராகத் திரையில் கதை வெளிப்பட உதவியிருக்கிறது.

குறிப்பாக, விக்ரம் பிரபு – ஷ்ரதா ஸ்ரீநாத் இடையிலான பிரச்சனை உச்சம் பெறும் காட்சியில், வெவ்வேறு ஷாட்கள் இடம்பெற்றதை மூளை உணரமுடியாத அளவுக்குக் கச்சிதமாகத் தொகுத்திருக்கிறார்.

காட்சிகளில் கதாபாத்திரங்களின் முரண்களும் மன வலிகளும் குமுறல்களும் நெகிழ்ச்சிப் பிரவாகங்களும் நிறைந்திருப்பதற்கேற்ப பின்னணி இசையைத் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.

அவரது இசையில் கார்த்திக் நேத்தா எழுதியிருக்கும் பாடல்கள் சட்டென்று மனதை ஊடுருவுகின்றன. கதாபாத்திரங்களின் உணர்வெழுச்சிக் கட்டங்களைச் சொல்லும் வகையில், அப்பாடல்கள் ‘மாண்டேஜ் ஷாட்கள்’ பின்னணியில் ஒலிக்கின்றன.

இதில் ரங்கேஷ் – பவித்ராவாக விதார்த் – அபர்ணதியும், அர்ஜுன் – திவ்யாவாக ஸ்ரீ – சானியா ஐயப்பனும், மனோகர் – மித்ரா ஜோடியாக விக்ரம்பிரபு – ஷ்ரதா ஸ்ரீநாத்தும் நடித்துள்ளனர்.

பக்கம்பக்கமாக வசனங்களைப் பேசி நடித்த சிவாஜியின் பேரன் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்கும் விக்ரம் பிரபுவுக்கு, இதில் மிக மெலிதாக உணர்வுகளை வெளிப்படுத்தும் வேடம்.

தொடக்கத்தில் அவரது முகத்தில் கடுமை தென்படுவதாகத் தோன்றினாலும், மெல்ல நம் மீது அக்கதாபாத்திரத்தின் வன்மையை ஏற்றுகிறார் விக்ரம் பிரபு.

விக்ரம் பிரபு மீது காதலில் உருகும், தவிக்கும், மருகும் பாத்திரத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் மிக நன்றாகவே நடித்துள்ளார்.

ஆனால், அவரிடம் ‘க்யூட்னெஸ்’ மிஸ்ஸிங். அதுவே, அந்த பாத்திரத்தில் சோபிதா துலிபாலா அல்லது அனுப்ரியா கோயங்கா போன்றவர்களை நடிக்க வைத்திருந்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணத்தை நமக்குள் தோற்றுவிக்கிறது.

இந்த இரு ஜோடிகளையும் தாண்டி விதார்த்தும் அபர்ணதியும் நம் மனதை ஆக்கிரமிக்கின்றனர்.

காரணம், ஒரு சாதாரண கணவன் மனைவி போன்ற தோற்றத்தை அவர்கள் திரையில் தோற்றுவித்திருப்பதுதான்.

ஷ்ரதா ஸ்ரீநாத்திடம் தனது மனதில் இருக்கும் வலிகளைச் சொல்லுமிடத்தில் விதார்த் அசத்தியிருக்கிறார் என்றால், கொஞ்சம் குண்டான உடல்வாகுடன் இருக்கும் உணர்வை நம்முள் புகுத்தி, தொடக்கம் முதலே ஆச்சர்யத்தில் விழிகளை விரிவாக்க வைத்திருக்கிறார் அபர்ணதி.

இவர்கள் ஆறு பேரையும் தாண்டி மிகச்சிலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர். அவர்களது இருப்பு ருசியான புளியோதரை, பிரியாணி, சாம்பார் சாதத்துக்கு நடுவே ஊறுகாயை வைத்தது போன்றே அமைந்துள்ளது.

நினைவில் நிற்கும்!

குடும்பநல நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் முன்பாகவும், மருத்துவமனைகளில் உளவியல் நிபுணர்கள் முன்பாகவும் வேதனையோடு நிற்கும் தம்பதிகள் இன்று அதிகரித்து வருகின்றனர்.

நூறு சதவீகிதம் பொருத்தமற்ற ஜோடிகள் பல்லாண்டுகள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த தகவல்கள், இன்றைய தலைமுறையினருக்குக் கட்டுக்கதைகளாகிவிட்டன.

புரிதல் இல்லாவிட்டால் பிரிவது தான் தீர்வு என்றாகிவிட்டது. இந்தச் சூழலில், உறவில் நேர்ந்த விரிசல்களைச் சரி செய்துகொள்ளலாமே என்கிறது ‘இறுகப்பற்று’.

சிலருக்கு இது ஒவ்வாமையைத் தோற்றுவிக்கலாம். ‘இதற்கெல்லாம் இப்படி முடிவெடுக்கலாமா’ என்ற எண்ணத்தைச் சிலருக்கு ஊட்டலாம்.

அதையெல்லாம் மீறி, கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்சனைகளுக்கான தீர்வாக இப்படம் மேற்கோள் காட்டப்பட வாய்ப்புகள் அனேகம். அதற்குத் தகுந்த வகையில், இதில் சில காட்சிகள் உள்ளன.

அவற்றில் அமைந்துள்ள உரையாடல்கள் யதார்த்தத்தின் அருகில் நம்மை அழைத்துச் செல்கின்றன.

‘மேல்தட்டு ரசிகர்களுக்கானது’ என்று சொல்லி, இதனை ஒரு வட்டத்துக்குள் அடக்குவது அநீதி.

எந்தப் பின்னணியில் வாழ்ந்தாலும், உறவு விரிசல்களை எதிர்கொள்ளும் மனித மனங்களின் குமுறல்கள் பெரும்பாலும் ஒரே வடிவத்தைத்தான் கொண்டிருக்கும்.

ஒப்பனையை அகற்றிவிட்டால் மீதமிருக்கும் முகங்கள் போல, இப்படத்திலும் திரைக்கதையின் ஜோடனைகளைத் தாண்டி ஒரு அம்சம் ஒளிர்கிறது.

அது ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்கிறது. அது சரி என்பவர்கள், குறைகளைப் புறந்தள்ளிவிட்டு இப்படத்தை ரசிக்கலாம்!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment