– மனம் திறந்த நடிகை பார்வதி
சசி இயக்கத்தில் 2009 இல் வெளியான ‘பூ’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பார்வதி.
பரத் பாலா இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான மரியான் படத்தில் தனுஷ் உடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.
அப்போது எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த பார்வதி, மரியான் படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டக்காட்சிகளை வெளியிடும் நிகழ்வுகளுக்காகச் சென்னை வந்திருந்தார்.
நிகழ்ச்சியின்போது தொகுப்பாளினி அவரை பார்வதி மேனன் என்றழைக்க, நான் பார்வதி மட்டும்தான் மேனன் இல்லை என்று சொல்லிவிட்டுப் பேச்சைத் தொடங்குமளவுக்கு விவரமானவர்.
அதன்பின், மழைமரத்தில் தங்கியிருந்த பனிமலரிடம் பேசினோம் (ஹோட்டல் ரெயின்ட்ரீயில் தங்கியிருந்த பார்வதி என்று கொள்ளவும். மரியான் படத்தில் அவர் பெயர் பனிமலர்).
பூ படம் பற்றி…?
பூ எனக்கு மிகுந்த நற்பெயரையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது. ஆனால் அதன்பின் என்னைத் தேடிவந்த வேடங்கள் சிறப்பாக அமையவில்லை.
பூ படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்ததால் அதன்பின்னும் வெறுமனே கிராமத்துக் கதைகளாக வந்தன.
அடுத்து கதைக்குத் தேவையில்லாமல் கவர்ச்சி காட்டுகிற மாதிரியான வேடங்களும் வந்தன.
அம்மாதிரி நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை எனவே எல்லாப் படங்களையும் ஒப்புக் கொள்ள முடியவில்லை.
மரியான் பட அனுபவங்களைச் சொல்லுங்கள்!
இந்தப் படத்தின் கதையை பரத் பாலா சொன்னபோதே பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் படப்பிடிப்பு நாட்கள் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. மிகவும் கஷ்டப்பட்டோம்.
படத்தில் மீனவப் பெண்ணாக நடித்தேன். கதையையும் என் வேடத்தையும் கேட்டபோது உற்சாகமாக இருந்தது. ஆனால் நடைமுறையில் அந்த வாழ்க்கை மிகவும் கஷ்டம்.
அந்தக் கஷ்டத்தை அது தெரியாமல் திரையில் கொண்டுவரவேண்டும். உடலளவிலும் மனதளவிலும் மீனவப்பெண்கள் கடினமானவர்களாக இருப்பார்கள்.
காரணம், எல்லாக்காலமும் வெப்பமும் உப்புக்காற்றும் நிறைந்த இடங்களிலேயே அவர்கள் வசிக்கிறார்கள். அதனால் அவர்களுடைய அன்புக்குள்ளும் ஒரு முரட்டுத்தனம் இருக்கும்.
அவற்றைத் திரையில் கொண்டுவரவேண்டும் என்பதொடு மீனவக் கிராமங்களில் நடத்தப்பட்ட படப்பிடிப்புகளும் சிரமமானதாகவே இருந்தது. அதுமட்டுமின்றி நமீபியாவில் நடந்த படப்பிடிப்பின்போது நிறைய நடைமுறைக் கஷ்டங்கள் இருந்தன.
சிறந்த நடிகர் என்று பெயர் வாங்கியிருக்கும் தனுஷூடன் நடித்த அனுபவங்கள் எப்படியிருந்தன? அவருடன் நடிப்பில் போட்டி இருந்ததா?
நாங்கள் இருவரும் நடிப்புப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. இரண்டு பேரும் மரியான் படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகவே நடித்தோம் (சிரிக்கிறார்). ஒரு சகநடிகராக அவரை தான் மிகவும் பாராட்டத்தான் வேண்டும்.
எல்லாப் படங்களிலும் இதுபோன்ற வேடங்கள் அமையாதே, எல்லா விதமான வேடங்களிலும் நடித்தால்தானே முன்னணி நடிகையாக முடியும்?
நான் அப்படி நினைத்திருந்தால் இந்நேரம் நிறையப் படங்களில் நடித்திருக்கலாம்.
ஆனால் அவை என்னாவாகியிருக்கும் என்பது பற்றி எதுவும் சொல்லமுடியாது.
அப்படி வந்துபோகிற படங்களைவிட காலத்துக்கும் நினைவில் நிற்கிற கதைகளில் நடிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். நான் அப்படிச் செய்வதுதான் திரைத்துறைக்கு நான் செய்கிற நியாயமாக இருக்கமுடியும்.
இப்படிப் பிடிவாதமாக இருந்தால் நிறையப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமையாதே?
நான் அப்படி நினைக்கவில்லை. திரையுலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது. நல்ல நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிற கதாநாயகிக்கும் படங்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டுதானிருக்கின்றன. எனவே அந்தச் சந்தேகம் எப்போதும் இருந்ததில்லை.
நான் நடிக்கவில்லையென்றால் திரைப்படத்துறைக்கும் சரி, ரசிகர்களுக்கும் சரி, யாருக்கும் ஒரு நஷ்டமும் இல்லை. இன்னும் எவ்வளவோ பேர் இதற்குள் இருக்கிறார்கள். இன்னும் வருவார்கள்.
எனவே எனக்கு எது பிடித்திருக்கிறதோ அதை மட்டுமே செய்ய நினைக்கிறேன். இல்லையெனில் வேறு வேலைகள் செய்யப் போய்விடுவேன்.
வேறு எந்த வேலையிலும் இவ்வளவு பணமும் புகழும் கிடைக்காதே?
நான் எப்போதும் நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும், அழியாப் புகழோடு இருக்கவேண்டும் என்று ஆசைப்படவில்லை. நல்ல நடிகையாக இருக்கவேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.
ஏனெனில் திரைப்படங்களுக்கு வருகிற ரசிகர்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் பெரிய மதிப்பு இருக்கிறது.
அவர்களை ஏமாற்றத்துக்கு ஆட்படுத்தாமல் நிறைவாகத் திரும்பிப் போகச் செய்யவேண்டும் என்பதே எனக்கு முக்கியம். அதற்கு எனக்குத் தெரிந்தவரை உண்மையாக இருக்கவே முயல்கிறேன்.
சில கதாநாயகர்களுக்கு ஜோடியாக உங்களை நடிக்க வைக்கலாமா என்கிற கேள்வி வருகிறபோதே அவர் மெச்சூர்டானவர் இவருக்கு ஜோடியாகப் போட்டால் சரியாக இருக்காது என்று பேசுவதைக் கேட்க முடிகிறது. இது உங்களுக்குப் பலவீனம்தானே?
ஜோடிப் பொருத்தமெல்லாம் பார்ப்பது எப்படிச் சரியாக இருக்கும்? எனக்கு இதில் நிச்சயமாக உடன்பாடில்லை.
நடிகர்களை மட்டும் திரையில் பார்க்காமல் அவர்களுடைய வேடங்களைப் பார்க்கும்படி செய்தோமென்றால் அப்போது ஜோடிப் பொருத்தம் என்கிற மாதிரியான கருத்துக்களுக்கு இடமேயிருக்காது.
இப்படிச் செய்யவேண்டிய பொறுப்பு படத்தை உருவாக்குபவர்களுக்குக் கூடுதலாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
கவர்ச்சியாக நடிப்பீர்களா?
அழகை வெறும் காட்சிப் பொருளாக்குவதில்தான் எனக்கு உடன்பாடில்லை. ஒரு நல்ல இயக்குநருக்கு, ஒரு நடிகையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது நிச்சயம் தெரியும். திறமையான பல இயக்குநர்கள் இங்கே இருக்கிறார்கள்.
– அந்திமழை வெளியிட்ட ‘கொஞ்சம் சினிமா, நிறைய வாழ்க்கை’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.
பக்கங்கள் – 320
தொடர்புக்கு – 9443224834