ஓலா, ஊபர் டிரைவர்கள் ஸ்டிரைக்: என்ன செய்யப் போகிறது அரசு?

தவிரிக்க முடியாத நிலையில் தான் தற்போது எந்தப் போராட்டங்களும் துவங்குகின்றன.

தற்போது மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கும் என்கிற அறிவிப்பைக் கொடுத்துவிட்டுத் தங்கள் போராட்டத்தைத் துவக்கியிருக்கிற ஓலா, ஊபர் கால் டாக்ஸி டிரைவர்களின் போராட்டமும் அப்படிப்பட்டது தான்.

தமிழகம் முழுக்கச் சுமார் ஒரு லட்சம் டிரைவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

சரி.. இவர்கள் போராட என்ன காரணம்?

பல கோரிக்கைகளை முன்னிறுத்தியிருக்கிறார்கள்.

ஓலா, ஊபர் நிறுவனங்கள் தங்களுக்கு வரும் கமிஷன் தொகையைப் பெறுவதில் காட்டுகிற அக்கறையை, பயணிக்கக் காரணமாக இருக்கிற டிரைவர்களுக்கோ, பயணிகளுக்கோ அளிப்பதில்லை.

ஒவ்வொரு நாளுக்கும், நேரத்திற்கும் தனித்தனியே இஷ்டத்திற்குப் பயணத் தொகையை நிர்ணயிக்கிறார்கள். திங்கட்கிழமை என்றால், முகூர்த்தம் என்றால் இரு மடங்கு ரேட்டை உயர்த்திவிடுகிறார்கள்.

விழாக்காலங்களில் கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்திவிடும் ஆம்னி பேருந்துகளைப் போலவே இங்கும் இஷ்டத்திற்கு உயர்த்தி விடுகிறார்கள்.

இதை மாநில அரசோ, மத்திய அரசோ கண்காணிப்பதில்லை.

இடைத்தரகரைப் போல் இடையில் இருக்கும் நிறுவனங்கள் தான் சம்பாதிக்கின்றன. ஆட்சியில் இருப்பவர்களுடன் நல்லுறவையும் பேணுகின்றன.

அப்படி இருக்கும்போது, ஆட்சியாளர்களும் பயிணிகளைப் பற்றி தேவையிலஙலாமல் அக்கறைப்படுவார்களா, என்ன?

இதனால் பயணிகள் மட்டுமல்ல, பயணிகளை நேரடியாகச் சந்திக்கும் டிரைவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். டிரைவர்களைக் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள் பயணிகள்.

இவற்றை அரசு தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தியே இப்போது போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு அருகில் ஒரு கால் டாக்ஸி டிரைவர் கொல்லப்பட்டதையும், டிரைவர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை நீடிப்பதையும் தங்கள் தரப்பில் சொல்கிறார்கள் டிரைவர்கள்.

இரவு நேரத்திலும் பயணிகளின் அழைப்பை ஏற்றுச் செல்லும் போது, போக்குவரத்துக் காவல்துறை தரப்பில் கொடுக்கப்படும் தேவையற்ற அழுத்தங்களைப் பற்றியும் புகாராகச் சொல்கிறார்கள்.

சில நிறுவனங்கள் இரவு, பகலாகப் பணியாற்றும் டிரைவர்களின் நலனைப் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும். இடைவெளியில்லாமல் வேலை வாங்க‍க் கூடாது. பயணிகள் விரும்பித் தரும் டிப்ஸைக் கூடக் கண்பாணிக்கிறார்கள் என்பதும் பரவலான புகார்.

“கேரளா போன்ற மாநிலத்தில் மாநில அரசே தனியாக ஒரு ’ஆப்’பைப் பயன்படுத்தி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாற்றாக இயங்குவதைப் போல தமிழ்நாட்டிலும் அப்படிப்பட்ட ‘ஆப்’பை ஏன் உருவாக்க‍க் கூடாது?” என்கிறார்கள் டிரைவர்கள்.

ஆட்டோவிலும் இதே பிரச்சினை தான்.

ஆட்டோவில் மீட்டர் கருவி பொருத்தப்பட்டிருந்தாலும் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக மீட்டருக்கான கட்டணம் காலத்திற்கேற்ப, விலைவாசிக்கேற்ப திருத்தி அமைக்கப்படவில்லை.

திருத்தச் சொல்லி ஓய்ந்து போனார்கள் ஆட்டோ டிரைவர்கள்.

விளைவு? அதிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் புகுந்து ஆட்டோக்களை வளைத்துப் போட்டு அங்கும் கமிஷனை அள்ளுகின்றன.

அவர்களை மீறி ஆட்டோ ஓட்டும் டிரைவர்களுக்கு  ‘டிப்ஸை’க் கூடப் பயணிகள் கொடுத்துவிட முடியாது.

ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணத்தை அரசு தலையிட்டு ஒழுங்குபடுத்தினால் மட்டுமே தனியார் நிறுவன ஏகபோக‍க் கெடுபிடிகளில் இருந்து டிரைவர்களும், பயணிகளும் விடுபட முடியும். உழைப்பின் பலன் உழைக்கும் ஓட்டுநர்களுக்குச் சென்றடையவும் முடியும்.

மக்களின் குரல் மகேசனின் காதில் முதலில் விழட்டும்.

– யூகி

Comments (0)
Add Comment