– தாய் தலையங்கம்
ஆக்கிரமிப்பு அல்லது தற்காப்பு – இவற்றை மையப்படுத்தியே பல போர்கள் நடந்திருக்கின்றன.
தற்போது இஸ்ரேல் – பாலஸ்தீனித்திற்கிடையே நடந்துவரும் போரும் ஆக்கிரமிப்பு சார்ந்தது தான்.
1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாலஸ்தீனம் விடுதலை பெற்றதிலிருந்தே, இஸ்ரேல் தனிநாடாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப்பட்டதிலிருந்து அதற்கு எதிரான போர்க்குரலும் அங்கு எழுந்திருக்கிறது.
யாசர் அராபத் அந்தக் குரலையே சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து தங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீனத்தில் எழுந்த அமைப்பு தான் ‘ஹமாஸ்’ இயக்கம்.
காசா – என்கிற பகுதி அவர்கள் வசம் இருக்கிறது.
தொடர்ந்து இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதலை நடத்தியபடி இருக்கிறது. பதிலுக்கு, எந்த ஏவுகணையும் நுழையமுடியாதபடி பாதுகாப்பான பகுதி என்று சொல்லப்பட்ட இஸ்ரேலின் பாதுகாப்பு வளையத்தைத் தகர்த்துத் தாக்குதலை நடத்தியது பாலஸ்தீனிய ஹமாஸ் இயக்கம்.
பதில் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது இஸ்ரேல். அதற்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் ஆதரவளிக்கின்றன.
அமெரிக்கா தனது போர்க்கப் பலையே அனுப்பியிருக்கிறது. இஸ்ரேலின் முப்படைகள் தாக்குதலுக்குத் தயாராகி அனுமதிக்காகக் காத்திருக்கின்றன.
“இந்தப் போர் நீண்ட காலம் நடக்கும்” என்றிருக்கிறார் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
இஸ்ரேலில் இருந்தும், பாலஸ்தீனத்தில் இருந்தும் பலர் வெளியேற ஆரம்பித்திருக்கிறார்கள். ஏற்கனவே ரஷ்யா – உக்ரைனுக்கும் இடையில் போர் துவங்கியதும் சர்வதேச அளவில் பொருளாதாரத் தாக்கம் ஏற்பட்டது.
தற்போது இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் துவங்கியதுமே தங்கம் விலை கூடுதலாக உயர்ந்திருக்கிறது. இனி பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து விலைவாசி மேலும் ஏற்றம் காணலாம்.
எங்கோ ஓரிடத்தில் போர் நடக்கிறது என்று எந்த உலகக் குடிமகனும் பாராமுகமாக இருக்க முடியாது.
உலகமயமான சூழலில் தற்போது இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அணி வகுத்திருக்கும் உலக நாடுகளின் தலையீடு அதிகரிக்கும் பட்சத்தில் போர் இன்னும் உக்கிரமடைந்து கொரோனாவால் சீரழிந்து போன உலகப் பொருளாதாரம் மேலும் மோசம் அடைய வாய்ப்பிருக்கிறது.
வலிமையை மாற்றி மாற்றி நிரூபிக்க ஒவ்வொரு நாடும் ஆரம்பித்தால் மனிதம் பின்னுக்குப் போய் ஆயுதப் புழக்கத்தால் நவீனக் காட்டுமிராண்டித்தனம் மட்டுமே மிஞ்சும்.
ஐ.நா. சபை போன்ற சர்வதேச அமைப்புகள் தலையிட வேண்டிய தருணம் இது.
எப்படியாவது தலையிட்டு சமாதானமான சூழலை உருவாக்குங்கள் என்பதே உலக அளவில் இருக்கிற எந்த ஆக்கிரமிப்பையும் விரும்பாத எளிய மக்களின் கோரிக்கை.