பத்திரிகையாளர் மணாவின் அனுபவம்
“கலைஞரைப் போல சிந்தனை, செயல்வேகம் கொண்டவர்களை உலக வரலாற்றில் எங்குமே பார்க்க முடியவில்லை. அவருடன் நெருங்கிப் பழகும்வரை எல்லைக்கோடு இருக்கும். அவருக்குப் பிடித்தமானவராக மாறிவிட்டால், எல்லைக்கோடுகளை அழித்துவிடுவார்.
பத்திரிகையாளர் என்கிற நிலையில் இருந்து அணுகத் தொடங்கி, அவரது நெருங்கிய வட்டத்தில், நினைத்த நேரத்தில் பார்க்கக்கூடிய, பேசக்கூடிய வட்டத்தில் என்னை வைத்திருந்தார்.
அதற்குக் காரணம் நம்பிக்கை. அந்த நம்பிக்கை சாதாரணமாக உருவாகாது. அதற்கும் அவர்தான் வழிகொடுப்பார்.
பிரபல வார இதழில் ‘நதி மூலம்’ என்கிற தொடரை எழுதியபோது, கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுத திருக்குவளைக்கும், திருவாரூருக்கும் சென்று வந்தேன்.
அதை நூலாகத் தொகுத்தபோது கலைஞர் முதலமைச்சராக இருந்தார். அந்த நூலை அவரிடம் கொடுக்கச் சென்றபோது, நூலைப் பிரித்து அவரது வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தைப் படித்தவர், கையில் எத்தனை காப்பி இருக்கு எனக் கேட்டு, இருந்த ஐந்து பிரதிகளையும் வாங்கிக் கொண்டார். அது அவர் அன்பின் உடனடி வெளிப்பாடு.
தேவையைத் தாண்டியும் பகிர்வுகள்
அரசியல், பொதுவாழ்க்கை, சொந்த வாழ்க்கை என எந்தக் கேள்வியையும் கேட்கலாம். எதற்கும் தயக்கம் இருக்காது.
ஒருமுறை முன் தயாரிப்புகளோடு சென்றேன். கேள்விகளைப் பார்க்கலாமா எனக் கேட்டு வாங்கிப் பார்த்தார்.
எல்லா கேள்விகளுமே அவரை விமர்சனப்பூர்வமாக அணுகக் கூடிய கேள்விகள்.
எல்லாவற்றுக்கும் பதில் அளித்துவிட்டு, இறுதியாகச் சிரித்துக்கொண்டே சொன்னார்.
“எப்படியாவது என்னை மாட்ட வைக்க வேண்டும் என்கிற கேள்விகளை நீங்க கேட்டீங்க, அதேபோல எப்படியாவது மாட்டக் கூடாது என்பதற்கேற்ப பதில்களை நான் சொல்லி இருக்கிறேன் போதுமா?” என்றார்.
அவ்வளவு வெளிப்படைத் தன்மை, ஒளிவு மறைவற்ற துணிவு. எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டியது.
ஒரு நேர்காணல் செய்வதற்குச் சென்றால் பத்திரிகைத் தேவையைத் தாண்டி பல விஷயங்களைப் பகிர்வார். அவற்றை வாங்கிக்கொண்டு பரபரப்புச் செய்தியாக்காமல், சரியானதைச் செய்தால் போதும். அவருக்குப் பிடிக்கும்.
அதுபோல எந்தச் சூழலிலும் எப்படியான கேள்விகளைக் கேட்டாலும், நிதானமாகப் பொறுமையாகப் பதில் அளிப்பார்.
இறுதிவரை ஒத்துழைத்த உடல்
மற்றொருமுறை பேட்டியின்போது, தனிப்பட்ட வகையில் அவரது உடல்நலம் குறித்த கேள்வி கேட்டேன். அந்தக் கேள்விக்கு அவர் அளித்த பதில்தான் அவரின் அசாத்திய ஆற்றலுக்குச் சான்று என்பேன்.
“கட்சியிலும், அதற்கு அப்பாற்பட்டும் உங்களுக்கு எவ்வளவோ நண்பர்கள், அதேபோலச் சிறுவயதில் இருந்தே உங்கள் அலைச்சலுக்கும், வேகத்துக்கும் ஈடுகொடுத்து வருகிற உங்கள் உடம்பை உரிமையுடன் நண்பனுக்குக் காட்டும் பரிவைப் போல கவனித்திருக்கிறீர்களா?” எனக் கேட்டேன்.
“உடம்புதான் என் வேகத்துக்கு ஒத்துழைக்க வேண்டுமே தவிர, நான் எப்படி உடம்புக்குப் பரிவு காட்ட முடியும். ஆனால், உடம்பைப் பராமரிப்பதில் கவனம் இல்லாமலும் இல்லை” என்றார்.
உண்மையில், கலைஞரின் இறுதிக் காலம் வரை அவரது உடம்பு அவருக்கு ஒத்துழைத்தது.
தோளோடு தோள் வந்தார்
ஒருமுறை ஆலிவர் ரோடு இல்லத்தில் சந்தித்து விட்டு, அவர் கீழே வரும்போது நானும் சேர்ந்து வந்தேன். அப்போது, பக்கத்திலேயே வந்ததால், “உன் தோள் மீது கை வெச்சுக்கட்டு மாய்யா” என்றார்.
“இதுக்கு எல்லாமா அனுமதி கேட்பீங்க” என்றேன்.
“இருக்கட்டும்யா… உன் தோளில் கை வைத்துக் கொள்ள, உன்கிட்டதானய்யா கேட்க முடியும்” என்றார்.
எவ்வளவு உயரத்தில் இருப்பவர், எழுத்திலும் பேச்சிலும் ஆளுமையிலும் உச்சம் தொட்டவராக இருந்தாலும், வயதிலும் அனுபவத்திலும் சிறியவர்களாக இருப்பவர்களிடம் காட்டும் அணுகுமுறை கற்றுக் கொள்ள வேண்டிய பண்பு.
வெளியில் இருந்து ஒருவரைச் சந்திக்கிறார் எனில், முதலில் அவர்களைப் பேசவிடுவார்.
வெளி உலக நிலவரங்கள் அவருக்குக் கோப்புகளாக வந்தாலும், வெளி நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை, ஏதாவது ஒரு கேள்வி கேட்டு வாங்குவார்.
சுவாரஸ்யமாகப் பேசுபவர்கள் எனில், அவர்கள் பேசுவதை ரசிப்பார். நான் சந்திக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் பேட்டியைத் தொடங்குவதற்கு அரை மணி நேரம், ஒரு மணி நேரம் ஆகும்.
அதுவரை நம்மைப் பேசவிட்டு விஷயங்களை வாங்குவார். தனக்கு அளிக்கப்படும் தகவல்களை நம்பவில்லை என்பது அதற்குக் காரணம் அல்ல, அந்தத் தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதற்காகக் கேட்பார்.
அவருடன் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களுக்கு இப்படியான நேரங்கள் வாய்க்கும்.
முதலமைச்சரைக் காக்க வைத்தேன்:
அவருக்குத் தாமதம் பிடிக்காது. அவர் சொல்லும் சரியான நேரத்துக்கு இருக்க வேண்டும். அவர் முதல்வராக இருந்தபோது, ஒருமுறை 8 மணிக்கு வந்துடுங்க என அழைத்திருந்தார்.
நான் புகைப்படக்காரருடன் சென்று சேர மூன்று நிமிடம் தாமதமாகிவிட்டது. “எல்லோரும் முதலமைச்சருக்காகக் காத்திருக்காங்க, ஆனால், ஒரு முதலமைச்சர் பத்திரிகையாளருக்காகக் காத்திருக்கார். எப்படிய்யா” என்றார் கொஞ்சம் கோபமாக.
“மன்னிச்சுடுங்க” எனச் சமாதானம் செய்து, பேட்டிகள் எடுத்தோம். அந்தப் பேட்டியின் முடிவில், அவருக்கு ‘ஜெயின்’ தொப்பியை அணிவித்து புகைப்படம் எடுத்தோம். அதை வெகுவாக ரசித்தார்.
கேமிரா கோணங்களும் அவருக்கு அத்துப்படி என்பதால், வெவ்வேறு கோணங்களில் படம் எடுக்க ஒத்துழைப்பு அளித்தார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் அவரது பர்ஃபெக்ஷன் குறித்த கேள்வி எழுப்பினேன். “நீங்க இருப்பதுபோல மற்றவர்களிடம் அதே பர்பெஃக்ஷ எதிர்பார்ப்பது நியாயமா? அப்படி இருப்பார்கள் என நினைக்கிறீர்களா?” என்றேன்.
“ஆமாம்ய்யா… இருக்க மாட்டார்கள் எனத் தெரியும். நான் என் சிறு வயதிலிருந்தே பழகிக் கொண்ட விஷயம் என்னால் மாற்றிக் கொள்ள முடியாது.
மற்றவர்களிடம் இல்லையென்று முடிவு செய்து, எதிர்பார்க்காமல் இருக்க முடியாது. இருந்தால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால், நான் இருக்கும்வரை அப்படித்தான் இருப்பேன்” என்றார்.
அவர் இருக்கும்வரை அவரிடம் அந்த பர்ஃபெக்ஷன் இருந்தது. நேரம் தவறாமை, எடுத்த வேலையில் காட்டும் வேகம், சந்திப்புகள் என எல்லாவற்றையும் அவர் மிகச் சரியாகக் கையாண்டிருந்தார்.
முதலமைச்சராக இருந்த காலத்தில், ஒரு சந்திப்பின்போது கேள்வியைத் தாண்டியும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது டேப்பில் பதிவு செய்திருந்தேன் என்பதால், “அந்தப் பகுதி மட்டும் வேண்டாம், நீங்கள் பேட்டியைத் தயார் செய்து அச்சுக்கு அனுப்புவதற்கு முன், என்னிடம் காட்டி விடுங்கள்” என்றார்.
அடுத்த நாள் அவர் சட்டமன்றத்தில் இருந்த நேரத்தில் எடுத்துச் சென்றேன். வாங்கிப் பார்த்தவர் சரியாக இருக்கிறது எனப் பாராட்டினார்.
அந்தப் பேட்டியும் சந்திப்பும்தான் கலைஞரின் குட் புக்கில் என்னைக் கொண்டு சென்றது. அதற்கு முன்னர் அவரை இரண்டு பேட்டிகள் எடுத்திருந்தாலும், சின்னக்குத்தூசி அறிமுகம் செய்துவைத்த பின்னர், எடுத்த முதல் பேட்டி அது.
அன்று என் கட்டுரையைப் படித்து விட்டு, ‘குத்தூசி அறிமுகம் செய்த இளம் நண்பர்’ எனப் பாராட்டினார்.
அந்த நட்புப் பாராட்டலுக்குப் பின்னர், நான் பகிர்ந்து கொள்ள முடியாத பல நினைவுகளையும் ஒரு தந்தையைப் போல அளித்துச் சென்றுள்ளார் கலைஞர்.!”
– நன்றி: முரசொலி