– எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
பவா செல்லதுரைப் பற்றி முகநூலில் ஏகப்பட்ட விவாதங்கள். ஒரு தனி மனிதரைப் பற்றி இந்த அளவுக்கு பேச்சு இருப்பது வியப்பு.
முன்பு ஊர்களில் திண்ணையில் அமர்ந்து பொரணி பேசுவார்கள். ஃபேஸ்புக் இப்போது உலகளாவிய பொரணி பேசும் திண்ணையாக இருக்கிறது.
எத்தனை சக்தி வாய்ந்த பிரமாண்டத்தையும் கையாள்பவன் மனிதன்தானே. அவனது லெவலுக்கு எதையும் இறக்கிவிட அவனால் முடியும்.
பவா செல்லதுரை மீது பலருக்கும் இனம் புரியாத எரிச்சல் இருப்பதை உணர முடிகிறது. பல விதமான வசைகள். அதில் ஒன்று என்னை மிகவும் பாதித்தது.
நிறைய பேருக்கு சோறு போடுகிறார். அதற்கெல்லாம் பவாவுக்கு எப்படி பணம் வருகிறது என்றெல்லாம் கூட சிலர் கேட்டிருந்தனர்.
நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது பவாவை முதன் முதலில் சந்தித்தேன்.
அப்போது பவா பிரபலமாகவில்லை. மிகச்சிறிய வீடு. ஒற்றை மின் விளக்கு. இரவு பதினோரு மணிக்கு நண்பர் உத்ராவுடன் அங்கு சென்றேன். (உத்ரா அதன் பின் ஜெயஶ்ரீயை மணந்து கொண்டார்.)
அந்த நேரத்தில் பவா தன் அம்மாவை எழுப்பி எங்களுக்கு உணவளித்தார். அது அவரது இயல்பு. பிறரை வரவேற்று உபசரித்து மகிழ, பெரும் செல்வத்தை விட மனசுதான் முக்கியம். அது பவாவிடம் எப்போதும் இருந்தது. இருப்பது.
நிறைய பணம் இருந்தும் சிலர் வேறு மாதிரி இருப்பார்கள்.
ஒரு மிகப்பெரிய எழுத்தாளர், செல்வந்தரும்கூட. அவருடன் அவரது வாசக பக்தர் பஸ்ஸில் பயணிக்கிறார். மிகவும் வறிய மனிதர். பஸ்ஸில் எழுத்தாளர் தனக்கு மட்டும் டிக்கட் எடுத்து விட்டு, உங்களுக்கு நீங்க டிக்கட் எடுத்துருங்க என்று சொல்லி விட்டார். அந்த மனிதர் ஆற்றாமையுடன் சொல்லி வருந்தினார்.
ஒரு சமயம் ஓரிரு நண்பர்களுடன் ஏதோ நிகழ்ச்சி முடித்து இரவு சாப்பிடப் போனேன்.
ஹோட்டலில் சாப்பிட்டு முடித்ததும் பணம் எடுத்து நான் பில் கொடுக்கையில் அதில் ஒருவர் என்னைப் பார்த்து சொன்னார், “ரொம்ப வசதியா இருக்கீங்க போல” என்று.
சொன்னவர் மிக நல்ல வேலையும், ஊதியமும் பெறுபவர்.
எனக்கு அந்த நண்பர் சொன்னது மிகவும் எரிச்சல் ஊட்டியது. அதன் பின்னால் உள்ள மனநிலை பற்றி யோசிக்க வைத்தது.
பவாவின் இலக்கியம் பற்றி, சில செயல்பாடுகள் பற்றி பலருக்கும் கருத்து இருக்கும். ஆனால் ஒரு அளவுக்கு மேல் அவரைப் போட்டு அடிப்பதைப் பார்க்கையில் வருத்தம் மேலிடுகிறது. இது ஒரு உளவியல் வன்முறை. நீங்கள் சித்தரிக்க நினைப்பதைவிடவும் நல்ல அம்சங்கள் அவரிடம் உண்டு.