பூஜா ஹெக்டே – ஈர்க்கும் புகைப்பட முகம்!

சில புகைப்படங்கள் மனதில் நிரந்தரப் பிம்பங்களாகப் படியும். இயற்கை, மனிதர், பொருள் என்று ஏதேனும் ஒரு உருவம் அதில் இடம்பெற்றிருக்கலாம் அல்லது வடிவங்களில் இருந்து விலகிய அரூபத்தைக் கூட அது உள்ளடக்கமாகக் கொண்டிருக்கலாம்.

நம் கண்களுக்கு நேரடியாகப் புலப்படாத ஏதோவொரு ஈர்ப்புவிசை, அந்த சட்டகத்தினுள் அடங்கியிருப்பதாக எண்ணம் தோன்றுவதே அப்புகைப்படத்தின் வெற்றி.

சில நேரங்களில் சில மனிதர்களின் அழகு முகங்கள் கூட, அப்படிப்பட்ட அழியாத கோலங்களாக நம்மில் படியும்.

அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தும் எத்தனையோ புகைப்பட அழகுகளில் பூஜா ஹெக்டேயும் ஒருவர். அவரது புகைப்படங்கள் இன்று அதிகம் பேரால் இணையத்தில் ரசிக்கப்படுகின்றன.

ஈர்த்த விளம்பரங்கள்!

பூஜாவின் பெற்றோர் மஞ்சுநாத் – லதா தம்பதியர், கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். துளு இவர்களது தாய்மொழி.

ஆனாலும், மும்பையில் செட்டில் ஆன காரணத்தால், பூஜாவுக்கு மராத்தி, இந்தி மொழிகளும் நன்றாகத் தெரியும்.

பள்ளி, கல்லூரிகளில் துடிப்புமிக்க மாணவியாகத் திகழ்ந்த பூஜா, நடனம் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் மிக்கவர். அதுவே, பதின்ம வயதில் அழகிப் போட்டிகளின் பக்கம் அவரது கவனத்தைத் திருப்பியது.

2009ஆம் ஆண்டு நடந்த இந்திய அழகிப் போட்டியில் பங்கேற்ற பூஜா, தொடக்க கட்டத்திலேயே அதிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், ஓராண்டு காத்திருப்புக்குப் பின் மீண்டும் அதில் கலந்துகொண்டார். இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

இந்த ஒரு விஷயமே, எந்தவொரு விஷயத்திலும் பூஜா காட்டும் ஈடுபாடு எத்தகையது என்பதைச் சொல்லிவிடும்.

இடைப்பட்ட காலத்தில், அந்த வெற்றிக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைத் துல்லியமாகக் கற்றிருப்பார் என்பதையும் நம்மால் உணர முடியும்.

அழகிப் போட்டிகளுக்குப் பிறகு சிற்சில விளம்பரங்களில் தலைகாட்டினார் பூஜா. அவையெல்லாம் அவரது அழகையே முன்னிறுத்தின என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

அந்த விளம்பரங்கள் எல்லாம் ரசிகர்களைச் சட்டென்று ஈர்த்தன. அப்படியொரு ஈர்ப்பினால், பூஜாவுக்கு ‘முகமூடி’ படத்தில் நாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது.

அசத்தும் அழகு!

மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ வழியாகத்தான், பூஜா ஹெக்டே திரையுலகில் அறிமுகமானார். அதில் இடம்பெற்ற ‘வாயை மூடி சும்மா இருடா’ பாடல், முழுக்க அவரது அழகினை ஆராதிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது.

அவரும் அதற்கேற்ற வகையில் திரையில் தோன்றியிருப்பார். ஆனாலும், அந்த படம் பெரியளவில் ஹிட் ஆகாத காரணத்தால் அடுத்தடுத்த வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை.

ஆளை அசரடிக்கும் அழகு பூஜாவிடம் இருந்தது. ஆனால், திரையில் அது வெளிப்படும்போது ஏதோவொன்று காணாமல் போயிருந்தது. ஒரு காகிதத்தில் தொடர்ச்சியாகச் சில வரிகளை எழுதிவிட்டு, சில இடங்களில் மட்டும் அடிக்கோடிடுவது போன்ற அம்சம் அது.

அதனை ஈடுகட்ட நல்ல ஸ்டைலிஸ்ட் அவசியம்; அவர்களது ஒப்பனை மற்றும் ஈர்க்கும் ஆடை வடிவமைப்பைப் பதிவு செய்ய, சிறப்பான புகைப்படக் கலைஞர்கள் தேவை.

அது தொடர்பான தேடுதல் வேட்டை பூர்த்தியானால், எந்தவொரு ஆணும் பெண்ணும் புகைப்படங்களில் அழகு மிளிர ‘போஸ்’ கொடுக்க முடியும்.

அப்படி அழகை அடிக்கோடிட்டுக் காட்டும் விஷயங்களைக் கைக்கொண்டபிறகு, பூஜாவுக்குப் புதிய பட வாய்ப்புகள் வந்தன.

2014ஆம் ஆண்டு நாக சைதன்யாவுடன் ‘ஒக்க லைலா கோசம்’. வருண் தேஜ் உடன் ‘முகுந்தா’ என்று இரு தெலுங்குப் படங்களில் நடித்தார் பூஜா.

இரண்டிலுமே அவரது அழகை முன்னிறுத்தும் காட்சிகள் இருந்தன. அப்புறமென்ன, தெலுங்கு ரசிகர்கள் பூஜாவைக் கொண்டாடத் தொடங்கினர்.

அந்தப் படங்கள் வெளியானபோது, அவர் தனக்கு மிகவும் பிடித்த நட்சத்திரமான ஹ்ரித்திக் ரோஷன் உடன் ‘மொகஞ்சதாரோ’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதுவரை தமிழ், தெலுங்கில் மூன்று படங்களில் நடித்திருந்தாலும், முதன்முறையாகக் கிடைத்த இந்திப்பட வாய்ப்பு அது.

மும்பையில் வளர்ந்த ஒரு பெண்ணுக்கு இந்திப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ வேண்டுமென்ற ஆசை இருந்ததில் வியப்பில்லை. அந்த காரணத்தால், பூஜா வேறு படங்களில் நடிக்கச் சம்மதிக்கவில்லை.

அது மட்டுமல்லாமல், ‘மொகஞ்சதாரோ’வின் இயக்குனர் அசுதோஷ் கோவரிக்கர் லகான், ஸ்வதேஷ், ஜோதா அக்பர் போன்ற படங்களின் வழியே சர்வதேச அளவிலான ரசிகர்களைப் பெற்றவர்.

அப்படியொரு வரவேற்பு தனது நடிப்புக்கும் அழகுக்கும் கிடைக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்த்ததில் தவறில்லை.

ஆனாலும், மொகஞ்சதாரோ எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத காரணத்தால் மீண்டும் தென்னிந்தியா பக்கம் திரும்பினார் பூஜா.

மீண்டும் தென்னிந்தியா வாசம்!

பெரியளவில் வெற்றி பெறாத நான்கு திரைப்படங்கள். அதில் இடம்பெற்றிருந்தது, பூஜாவுக்குப் பெரிய அனுகூலத்தைத் தரவில்லை. ஆனாலும், தன்னைத் தேடி வந்த அனைத்து வாய்ப்புகளையும் ஏற்க அவர் விரும்பவில்லை.

நாயகன், தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் என்று ஒவ்வொன்றையும் கவனமாகப் பரிசீலித்தபிறகே, அவர் படப்பிடிப்புத்தளம் சென்றார்.

மிக முக்கியமாக, அந்தந்த மொழிகளில் முன்னணியில் இருந்த இளம் நாயகர்களுடன் மட்டுமே ஜோடி சேர்வதென்பதில் உறுதியாக இருந்தார்.

அல்லு அர்ஜுனுடன் ‘டிஜே’ மற்றும் ‘அலா வைகுண்டபுரம்லோ’, பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் உடன் ‘சாக்‌ஷியம்’, ஜூனியர் என்டிஆர் உடன் ’அரவிந்த சமேத வீர ராகவா’, மகேஷ்பாபு உடன் ‘மகர்ஷி’, வருண் தேஜ் உடன் ’கடலம்கொண்டா கணேஷ்’, அகில் உடன் ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்’ படங்களில் நடித்தார்.

அனைத்திலும் அவரது பாத்திரங்களுக்குத் தனி முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது இன்னொரு சிறப்பம்சம்.

2022இல் வெளியான ‘பீஸ்ட்’டில் விஜய் ஜோடியாக நடித்து, மீண்டும் தமிழில் தலைகாட்டினார் பூஜா. இடைப்பட்ட காலத்தில் ‘ஹவுஸ்புல் 4’, ‘சர்கஸ்’ ஆகிய இந்திப் படங்களிலும் நடித்தார்.

ஆனாலும் ‘ராதே ஸ்யாம்’, ‘ஆசார்யா’, ‘கிஸி கா பாய் கிஸி கா ஜான்’ படங்களின் பெருந்தோல்வி, பூஜாவை நாம் திரையில் காண்பதில் தடைகளை உருவாக்கின.

தேர்வில் கவனம்!

ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதை பூஜா ஒரு கொள்கையாகக் கடைப்பிடிக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால், அவரது படத்தேர்வில் மிகவும் உன்னிப்பாகக் கவனம் செலுத்துகிறார் என்பது மட்டும் உறுதி.

வெற்றிப் படங்களில் இடம்பெற்றவர் என்பதால் பூஜாவுக்குப் பெரும்பணத் தர, நிச்சயமாகப் படவுலகம் தயாராக இருக்கும்.

ஆனால், அவர் அதனை மட்டுமே ஒரு படத்தில் தனது இருப்புக்கான அளவீடாகக் கொள்ளவில்லை; அவரது ‘பிலிமோகிராபி’யே அதனைச் சொல்லிவிடுகிறது.

சரி, பூஜாவின் அடுத்த படம் என்ன? இப்போதுவரை அதற்குப் பதில் தெரியவில்லை. த்ரிவிக்ரமின் ‘குண்டூர் காரம்’ படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை இழந்ததாகச் செய்திகள் வெளியாகின.

அதேநேரத்தில் தமிழிலோ, இந்தியிலோ புதிய படங்களில் நடிப்பதாகத் தகவல் ஏதும் இல்லை.

தற்போது பூஜாவுக்கு 33 வயதாகிறது. இணையத்தில் அவரது எதிர்காலக் கணவர் குறித்து பெற்றோர் அளித்த பேட்டிகளும் உலா வருகின்றன. அதுபோன்ற செய்திகள், வாழ்வின் அடுத்தகட்டத்திற்கு அவர் நகரப்போவதைக் குறிக்கின்றன.

அதே நேரத்தில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல விளம்பரங்களில் பூஜாவின் முகம் தொடர்ச்சியாகத் தென்படுகிறது.

சமூகவலைதளங்களைத் திறந்தால், அவர் குறித்த செய்திகளும் புகைப்படங்களும் கண்ணில் படுகின்றன.

அவற்றைக் காணும்போது, தனது ரசிகர்களிடம் இருந்து விலகி நிற்கும் தோற்றம் உருவாகிவிடக் கூடாது என்பதில் பூஜா தீவிரம் காட்டுவது பிடிபடுகிறது.

தனது அழகை ஆராதிக்கும் ரசிகர்களுக்கு, அவர் காட்டும் மரியாதையாகவும் அதனைக் கொள்ளலாம்.

ஈர்க்கும் முகம்!

‘என்றும் ஈர்க்கும் புகைப்பட முகம்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பூஜா ஹெக்டே. அழகி என்று செல்லமாக அழைப்பதற்குப் பொருத்தமாக, அதற்கொரு வரையறையைப் பின்பற்றுபவர்களில் ஒருவர்.

தனது அழகுப் பொலிவைத் தக்க வைப்பதற்கான விலையாக உணவு, உடை, தூக்கம், மனநிலை, ஒப்பனை என்று பல விஷயங்களில் அவர் தீவிரக் கவனம் காட்டுவதையோ, விருப்பமான பலவற்றைத் தியாகம் செய்வதையோ, உடல் மற்றும் மன அளவில் கடின உழைப்பைக் கொட்டுவதையோ நம்மால் மறுதலிக்க முடியாது.

இன்னும் சில ஆண்டுகள் கழித்து, பூஜாவின் அழகு வெவ்வேறு படிநிலைகளை அடையலாம். இப்போதைய இளமையும் பொலிவும் மாறலாம்.

அப்போது, ரசிகர்கள் கொண்டாடும் அவரது இன்றைய திரைப்பட ஸ்டில்களும், பிரத்யேகப் புகைப்படங்களும், சமூகவலைதளப் பதிவுகளும், அவருக்கே உற்சாகமூட்டுவதாக அமையலாம். அழகு செய்யும் மாயாஜாலங்களில் அதுவும் ஒன்று!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment