பாவேந்தரும் கதை மன்னனும்!

{முன் குறிப்பு: 1980-களின் பிற்பகுதியில் வார இதழ் ஒன்றில் இந்தக் கட்டுரை வந்தபோது இந்தப் புகைப்படம் வெளியாகவில்லை}

படத்தின் பிரதி கூட தன்னிடம் இல்லை என்றும் அவசியம் என்றால் திருவல்லிக்கேணி பாண்டியன் ஸ்டூடியோவில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்றும் கட்டுரையின் இறுதியில் ஜெயகாந்தன் குறிப்பிட்டிருப்பார்.

பின்னர் பாண்டியன் ஸ்டூடியோவில் இருந்து பெறப்பட்ட படம் அதற்கு அடுத்த வாரம் ஜே.கே.யின் வேறொரு கட்டுரையுடன் வார இதழ் ஒன்றில் வெளியானது.

அந்தப் படம் பாரதிதாசன் – ஜெயகாந்தன் இருவர் மட்டும் அருகருகே இணைந்திருக்கும் படம். அது இப்போது கிடைக்கவில்லை.

திருவல்லிக்கேணியில் அந்த பாண்டியன் ஸ்டூடியோவும் இப்போது இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

இனி `அந்த இனிய அனுபவங்கள்’ என்ற தலைப்பில் ஜெயகாந்தன் எழுதியிருக்கும் கட்டுரையைப் பார்ப்போம். 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் பற்றி ஜெயகாந்தன் மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதில் இது ஒன்று.

கோவை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான இன்று பாவேந்தர் பாரதிதாசனையும், கதை மன்னர் ஜெயகாந்தனையும் நினைவில் ஏந்தி, புத்தகத் திருவிழாவுக்கான இந்த தொடர் பதிவுகளையும் நிறைவு செய்கிறேன். நண்பர்களுக்கு அன்புடன் நடராஜன். ஆர்.

“என் காலத்தில் வாழ்ந்திருந்த தமிழகத்துக் கவிஞர்கள், தேசபக்தர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலரோடு பரிச்சயம் கொள்ளவும் நெருக்கமான நட்பு கொண்டு பழகவும் எனக்கு நேர்ந்த வாய்ப்புகள் அனைவருக்கும் நேர்ந்திராது.

எனினும் இதிலுள்ள விசேஷ முக்கியத்துவத்தை நான் யோசித்துப் பார்ப்பதுண்டு.
மகாகவி பாரதியாரோடு பரிச்சயம் கொண்டிருந்த பலர் எனக்கும் பரிச்சயமாகியிருந்தனர் – அதற்கான எந்த முன்முயற்சியும் நான் எடுக்காமலேயே!

“நான்தான் பரலி. சு. நெல்லையப்பப் பிள்ளை” என்று சுய அறிமுகம் செய்துகொண்டு எளியர்க்கும் எளிய தோற்றத்தோடு என் எதிரில் வந்து நின்றவரைக் கண்டு நான் பாரதியைப் போல் பரவசம் எய்தினேனே அந்தக் கணம் ஏழேழ் பிறவிக்கும் நிலைக்கும் ஓர் அனுபவம் ஆகும்.

அதேபோல, பாரதியார் பிரம்மோபதேசம் செய்து வைத்த அந்த ஹரிஜன்  ‘நான்தான் கனகலிங்கம்’ என்று சொல்லியவாறு ஒரு நாள் எதிரில் நின்ற ஒருவரைப் பற்றிய எண்ணம்தான் நான் எழுதிய ‘பிரம்மோபதேசத்’துக்கு வித்து.

இவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தற்போன்ற அனுபவம் எனக்கும் பாரதிதாசனுக்கும் நேர்ந்தது.

பொதுவாகத் தலைவர்கள், பெரிய மனிதர்கள், பிரமுகர்களோடு சேர்ந்து போட்டோ பிடித்துக் கொள்கிற குணம் எனக்கு உகக்காத ஒன்று.

கூடியவரை தவிர்க்க முயல்வேன்… சரியோ, தப்போ? ஒரு காலத்தில் போட்டோ பிடித்துக் கொள்ள என்னை இணங்க வைப்பது நண்பர்களுக்கு மிகவும் சிரமம்.

உல்லாசமாக உட்கார்ந்து நான், பாரதிதாசன், புதுவை நண்பர் சிவமணி ஆகியோர் உரையாடிக் கொண்டிருந்தபோது, திடீரெனப் பாரதிதாசன் எழுந்து நின்று, “என்ன ஜெயகாந்தன், நாம் இன்றைக்கு ஒரு படம் பிடித்துக் கொள்வோமா?’’ என்று கேட்டார்.

அன்றைக்குப் பார்த்து நான் ஒரு கிழிந்த ஜிப்பாவும் அந்தக் கிழிசலை மறைக்க மேலே ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு வந்திருந்தேன்.

இந்த விஷயத்தை அவரிடம் நான் சொன்னதும், “இந்தச் சால்வையைப் பார்த்ததும்தானே போட்டோ பிடித்துக் கொள்ளலாம் என்று ஆசை வந்தது எனக்கு‘’ என்றார் பாரதிதாசன்.

“எனக்குத் தெரிந்த நல்ல போட்டோகிராபர் ஒருவர் இருக்கிறார். நாளைக்கு அவரை வரச் சொல்கிறேன்’’ என்று கூறி நழுவப் பார்த்தேன்.

“அந்த போட்டோகிராபர் எங்கே இருக்கிறார்? அங்கேயே நாம் போகலாம்‘’ என்று ராஜ கம்பீரத்தோடு புறப்பட்டுவிட்டார்.

ஒரு டாக்ஸி பிடித்து திருவல்லிக்கேணியில் உள்ள சுப்பையா என்கிற அந்த போட்டோகிராபரைத் தேடிக் கொண்டு மூவரும் போய்ச் சேர்ந்தோம்.

அந்த ஸ்டூடியோவின் பெயர் ‘பாண்டியன் ஸ்டூடியோ’ என்று இருந்ததில் பாரதிதாசனுக்கு ஒரு தனி மகிழ்ச்சி. அந்த போட்டோகிராபரை `பாண்டியா’ என்றே கூப்பிட ஆரம்பித்துவிட்டார்.

அவரை நான் அழைத்துக் கொண்டு வந்ததால் அந்தப் ‘பாண்டியனுக்கும்’ பெருமை. இருவரும் சால்வை போர்த்திக் கொண்டு அருகருகே நின்று படமெடுத்துக் கொண்டோம்.

படத்தைப் பார்த்தபோது தாத்தாவும் பேரனும்போல் எனக்குத் தோன்றியது.

“பாவேந்தரும் கதை மன்னனும்‘’ என்று கூறிப் பரவசப்பட்டார் அந்தப் ’பாண்டியன்‘. அதன் பிரதி கூட தற்போது என்னிடம் இல்லை. அது என்ன அவ்வளவு முக்கியமா? அவசியமென்றால் பாண்டியன் ஸ்டூடியோவில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

ஆனால் அவரோடு பழகிய அந்த இனிய அனுபவங்களை எங்கிருந்து திரும்பப் பெறுவது? ’’ – ஜெயகாந்தன்.

( ‘சிந்தையில் ஆயிரம்’ ஜெயகாந்தன் கட்டுரைகள் தொகுப்பு நூல் 2-ம் பாகத்தில்,  ‘அந்த இனிய அனுபவங்கள்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரை.

வெளியீடு: செண்பகா பதிப்பகம்,
328, கிருஷ்ணா தெரு,
பாண்டி பஜார்,
சென்னை -600 017.
போன்: 044-2433 6310. )

– நடராஜன். ஆர்.

– நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment