செட்டிநாட்டு மொழி சின்ன வயசிலிருந்து என் ஞாபகத்தில் ஊறிப் போய்விட்டது.
சில வார்த்தைகளை “வாங்க… எப்படி இருக்கீக.?’’ என்று இழுத்துப் பேசுவார்கள். கொஞ்சம் ஆச்சர்யப்பட்டால் “ஆத்தாத்தோ” என்று சொல்வார்கள்.
“என்ன ராசா.. சோறு உண்ண வாங்க’’ என்று கரிசனத்துடன் சாப்பிடக் கூப்பிடுவார்கள். கேட்கும்போது அவ்வளவு அழகாக இருக்கும், “அடி ஆத்தி’’ என்பார்கள்.
அண்ணன் மனைவியை “ய அண்ண மண்டி’’ என்பார்கள்.
அக்காவை “ஆச்சி’’ என்பார்கள்.
ஒரு மாதிரி அந்நியோன்யமான மொழி அவர்களுடையது.
‘காட்டுப்பட்டிச் சத்திரம்’ என்று அப்போது வெளியான ரேடியோ நாடகத்தில் பனையூர்ப் பாட்டி என்று ஒரு கதாபாத்திரத்தில் செட்டி நாட்டுமொழியைப் பேசி நடித்திருந்தேன்..
63 வாரங்கள் வரைக்கும் ஒலிபரப்பான அந்தத் தொடர் என்னை பிரபலப் படுத்திவிட்டது. அப்போதே செட்டி நாட்டில் என்னை “ஆச்சி’’ என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.
பின்னாடி ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் ஜில் ஜில் ரமாமணியாக செட்டிநாட்டு பாஷையைப் பேசி நடித்தபிறகு மேலும் பிரபலமாயிட்டேன்.
அந்த அளவுக்கு என்னை முன்னேற்றிவிட்டது செட்டிநாட்டு மொழி தான். இன்று வரை என்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கிற “ஆச்சி’’ உருவானதும் அங்கே தான்’’
– மணா எழுதித் தொகுத்த ‘ஊர் மணம்’ தொகுப்பில் காரைக்குடியைப் பற்றிய நடிகை மனோரமா தன்னுடைய பசுமையான பால்ய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட பதிவிலிருந்து ஒரு பகுதி.