உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கும் தோழர்!

– சேகுவேரா எனும் தலைவர் உருவான வரலாறு!

நாடு, மொழி, இனம், மதம், கண்டம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல், எங்கெல்லாம் அநீதிகள் இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் என்று பயணத்தை துவங்கியவர் சேகுவேரா.

மருத்துவ மாணவராக இருந்த சேவுக்கு மோட்டார் சைக்கிள் பயணத்தின் மீது அலாதி பிரியம். விடுமுறை நாட்களில் பைக்கில் ஊர் ஊராக பயணம் போவதுதான் அவரது பொழுதுபோக்கு.

அந்த பொழுதுபோக்குதான் பெரும் புரட்சிக்கான விதையும் கூட. தன்னுடைய மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு விடுமுறையில் லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கு மோட்டார் சைக்கிள் பயணம் சென்ற சேகுவேரா அங்கு எப்படி மக்கள் அமெரிக்காவால் சுரண்டப்படுகின்றனர் என்பதை கண்டு மனம் வெந்து புரட்சிகர பாதையை தேர்வு செய்தார்.

இது குறித்து மோட்டார் சைக்கிள் டைரிஸ் என்ற பெயரில் புத்தகமே உள்ளது.

உலக நாயகன் சே!

1959ம் ஆண்டு கியூப விடுதலைக்கு பிறகு கியூப நாட்டு வங்கியின் தலைவராகவும், தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் சே.

அன்றிலிருந்து கியூபாவை விட்டு வெளியேறும் 1965 வரை அந்த பதவியில் இருந்த சேகுவேரா உலக நாடுகளுக்கு சென்று கியூபாவுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர்.

குறிப்பாக இன்று கியூப மருத்துவர்கள் உலகின் தலைசிறந்த மருத்துவர்களாக இருப்பதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவரே அவர்தான்.

வளர்ந்த நாடுகளில் கூட இல்லாத அளவுக்கு மக்கள்தொகைக்கு ஏற்ப அதிக மருத்துவர்களை கொண்ட நாடக கியூபா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மானுடப் புரட்சியாளர் சே!

உலக விடுதலை குறித்து கனவு காண்பவருக்கு, உள்ளூர் விடுதலை எல்லாம் யானை பசிக்கு சோளப்பொறி போன்றதல்லவோ? எனவே, பெரும் விடுதலை கனவுகளை தாங்கி கொண்டு கியூபாவை விட்டு புறப்பட ஆயத்தமானார் சே.

அவர் சொல்லியிருந்தால் ஒட்டு மொத்த கியூபாவும் கூட அவர் பின்னால் அணிதிரண்டு சென்றிருக்கும்.

ஆனால், அத்தனை நாள் சுரண்டப்பட்ட மக்கள் இனிமேலும் துன்பப்படக்கூடாது என்று நினைத்திருப்பார் போல, யாரிடமும் சொல்லாமல் தன்னுடைய நண்பன் மற்றும் கியூப அதிபர் பிடலுக்கு உணர்வு பூர்வமான கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி விட்டு சில கொரில்லா படை வீரர்களோடு காங்கோ நோக்கி விரைந்தார்.

பிடலுக்குக் கடிதம்.

தன்னுடைய கடிதத்தில் முதல்நாள் பிடலை சந்தித்த நினைவில் துவங்கி, எந்த வித தயக்கமும் இல்லாமல் இந்த புரட்சி பயணத்தில் உன்னை பின்பற்றியதற்காக நான் எப்போதும் பெருமையாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தான் கியூபாவின் குடியுரிமை உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாகவும், என்னை இந்த மக்களின் சொந்தமாகவே கருத இது ஏதும் தேவை இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

உலகத்தின் மற்ற நாடுகள் என்னுடைய சேவையை வேண்டி நிற்கின்றன. கியூபாவின் தலைவர் என்பதால் உன்னால் அதை செய்யமுடியாது.

எனவே நான் போகிறேன் என்றும், நான் எங்கு சென்றாலும் கியூபாவின் குடிமகனை போல் நடந்து கொண்டு, தன் சேவைகளை செய்து கொண்டே இருப்பேன் என்றும் குறிப்பிட்டிருந்தார் சே.

இறுதியாக என் காதல் குடும்பத்தை, மனைவியை, குழந்தைகளை இங்கு எந்த சொத்துக்களும் இல்லாமல் விட்டு செல்வதற்காக நான் மன்னிப்பு கேட்க போவதில்லை.

காரணம், கியூபா அவர்கள் வாழ்வதற்கு தேவையான அடிப்படை தேவைகளை உருவாக்கி கொடுக்கும் மக்களுக்கான நாடாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

சேவின் குழந்தைகளுக்கு கடிதம்!

தன் குழந்தைகளுக்கு எழுதியிருந்த கடிதத்தில், அவர்கள் தொழிற்கல்வியை எடுத்து படிக்க வேண்டும் என்றும், அநீதிகள் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் கேள்வி கேட்க வேண்டும் என்றும், சமூகத்திற்கு பயனான வாழ்வை வாழ வேண்டும், உங்கள் தந்தையும் அப்படியான ஒரு நபர்தான் என்பதற்காக பெருமை படுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

உலக விடுதலைக்கான பயணம்!

காங்கோவிற்கு சென்று அங்கிருக்கும் புரட்சிகர குழுக்களுக்கு பயிற்சி அளிக்க முயற்சித்த சேவுக்கு அது தோல்வியாக அமைய, மீண்டும் கியூபா வந்துவிட்டு பொலிவியா சென்றார்.

கியூபாவுடனான தொலைதொடர்பில் சிக்கல், பொலிவிய காடுகளில் ஏற்பட்ட தடங்கல் கொரில்லா படையை கொஞ்சம் கொஞ்சமாக நோயாலும், சண்டையாலும் குறைக்க இறுதியில் ஒரு சில வீரர்களுடன் லா ஹிஹேரா என்ற கிராமத்தை வந்தடைந்தனர்.

அங்கு வந்த அமெரிக்க ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலில் சே சரணடையும் நிலை ஏற்பட்டது. சேவை கைது செய்த எதிர் தரப்பினர் அவரை ஒரு பள்ளியில் வைத்திருந்தனர்.

அதே பள்ளி அறையில் தான் அவர் சுட்டு கொள்ளவும் பட்டார். அவரின் இறந்த உடல் கூட யாருக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டது.

மிக நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு கியூபா அந்த இடத்தை கண்டும்பிடித்து தற்போது பல்வேறு புரட்சியாளர்களுக்கும் அந்த இடம் புனித தளமாக இருந்து வருகிறது.

சே உயிர்த்தெழுகிறார்!

உண்மையில் சே இன்னுமும் உலகின் பல்வேறு மக்களுக்கு புனிதர் சேவாகவே தெரிகிறார்.

அந்த அழுக்கு நிறைந்த முகங்களில் அவர்கள் இயேசுவின் வெளிச்சத்தை கண்டுள்ளனர்.

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் வழியாகவும் மீண்டும் சே உயிர்த்தெழுவார் என நம்பிக்கையோடும், பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் நீ சேகுவேராவை போல் வர வேண்டும் எனவும் சொல்லி உலகின் பல மக்களும் சேகுவேராவை மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்து கொண்டே இருக்கின்றனர்.

14 ஜூன் 1928ம் ஆண்டு பிறந்த எர்னஸ்டோ 9 அக்டோபர் 1967ம் ஆண்டு இறந்தும் சேவாக இன்றும் நம்மில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

– நன்றி: சமயம் இதழ்

Comments (0)
Add Comment