விஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே, ‘டைட்டில் புதுசா இருக்குமே’ என்ற எண்ணம் எழுவது இயல்பு.
சலீம், இந்தியா – பாகிஸ்தான், சைத்தான், பிச்சைக்காரன் தொடங்கி சமீபத்தில் வெளியான ‘கொலை’ வரை அந்த வழக்கம் தொடர்கிறது. அந்த வரிசையில் இன்னொன்றாகச் சேர்ந்துள்ளது ‘ரத்தம்’.
நம்மை கிச்சுகிச்சு மூட்டிய ‘ஸ்பூஃப்’ வகையறா படங்களான தமிழ்படம், தமிழ்படம் 2 தந்த இயக்குனர் சி.எஸ்.அமுதன் இதனை இயக்கியுள்ளார். சரி, ‘ரத்தம்’ சீரியசான படமா? இது தரும் அனுபவம் எப்படிப்பட்டது?
தெறிக்கும் ரத்தம்!
முதல் காட்சியே அப்படித்தான் தொடங்குகிறது. நல்லவேளையாக அது தொடர்கதையாக மாறவில்லை.
வானம் ஊடகத்தை நடத்திவரும் செழியன் என்பவர், அவரது அலுவலகத்திலேயே கொல்லப்படுகிறார்.
தான் நேசிக்கும் கட்சித் தலைவர் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட்ட காரணத்தால், செழியனைக் குத்திக் கொன்றதாகச் சொல்கிறார் கொலையாளி.
சாட்சிகள், காரணம் என்று எல்லாமே சரியாக அமைந்துவிட்ட காரணத்தால், அந்த வழக்கில் காவல் துறை மேற்கொண்டு விசாரிக்க எதுவுமில்லை என்றாகிறது.
அந்தக் கொலைக்குப் பிறகு, செழியனின் காதலி (ரம்யா நம்பீசன்) தனியாக வாழ்கிறார். வெறுமையில் தவிக்கும் செழியனின் தந்தை (நிழல்கள் ரவி), கொல்கத்தாவுக்குச் சென்று ரஞ்சித் குமாரைச் (விஜய் ஆண்டனி) சந்திக்கிறார்.
செழியனின் நெருங்கிய நண்பர் ரஞ்சித். ஒருகாலத்தில் புகழ்பெற்ற புலனாய்வுப் பத்திரிகையாளராகத் திகழ்ந்தவர், தனது மனைவியின் இறப்புக்குப் பிறகு மகளுடன் கொல்கத்தாவில் தனியாக வாழ்கிறார்.
மகளைப் பள்ளியில் விட்டபிறகு, எந்நேரமும் மதுவில் திளைப்பதுதான் அவரது வாழ்க்கையாக இருந்து வருகிறது.
ரஞ்சித்தையும் அவரது மகளையும் எப்படியோ கண்டறிகிறார் செழியனின் தந்தை. அவர்களைத் தன்னோடு சென்னைக்கு வந்துவிடுமாறு அழைக்கிறார். அவரிடம் மறுப்பு தெரிவித்தாலும், சில நாட்களுக்குப் பிறகு கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு இடம்பெயர்கிறார் ரஞ்சித்.
வானம் அலுவலகத்தில், ஒரு சாதாரண நிருபராக வேலைக்குச் சேர்கிறார் ரஞ்சித். அப்போது, செழியன் கொலை செய்யப்பட்டது போல மேலும் இரு கொலைகள் நிகழ்ந்ததை அவர் கண்டறிகிறார்.
கொலை செய்த நபர்களின் மனநிலை, கொல்லப்பட்டவர்கள் மீது வெறுப்பைக் கக்குவதாக இருந்ததையும் உணர்கிறார். நிச்சயமாக அது திட்டமிடப்பட்ட சதி என்று நம்புகிறார்.
நடந்த கொலைகளுக்குப் பின்னிருக்கும் உண்மைகள் என்ன? யார் அதனைத் திட்டமிட்டு அரங்கேற்றியது? கொலையாளிகளுக்கும் அவர்களுக்குமான தொடர்புக் கண்ணி என்ன என்று சொல்கிறது ‘ரத்தம்’ படத்தின் மீதி.
வித்தியாசமான காட்சியாக்கம்!
விஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே ஆக்ஷன் அதிகம் என்றாகிவிட்டது. என்னதான் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு நடித்தாலும், அதற்கேற்ற கதைகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் நம்மைக் கவர்கிறார். இதுவும் அந்த வகையறாதான்.
ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதாவுக்குப் பெரிதாக முக்கியத்துவம் இல்லை. ஆனால், அந்தந்த கதாபாத்திரங்களாகத் திரையில் தெரிவது பாராட்டத்தக்க அம்சம்.
மஹிமா நம்பியார், மிஷா கோஷல், அமேயா மூவரும் இதில் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அவர்கள் திரையில் காட்டப்பட்டிருக்கும் விதம் பாராட்டுகளைப் பெறலாம்; அதேநேரத்தில், ‘லாஜிக்கா யோசிச்சு பாருங்க’ என்று திட்டுகளையும் பெற்றுத் தரலாம்.
நிழல்கள் ரவி, உதய் மகேஷ், ஓஏகே சுந்தர், பிகில் சிவா, கலைராணி, ஜான் மகேந்திரன் என்று பலர் இதில் நடித்துள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் சில காட்சிகள் அல்லது சில ஷாட்கள் என்று பகுத்துப் பிரித்து திரையில் காட்டியுள்ளார் இயக்குனர் அமுதன்.
கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்குக் குளுமையாக அமைந்துள்ளன. ஒரு விளம்பரப் படம் போல, பிரேம்கள் அழகுறத் தெரியுமாறு கலை வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் செந்தில் ராகவன்.
இயக்குனர் சொன்ன சொல்லுக்கு ஏற்ப, திரையில் சுருக்கமாகக் கதை சொல்ல உதவியிருக்கிறது டி.எஸ்.சுரேஷின் படத்தொகுப்பு.
‘கத்திரி’ போட்டிருக்கும் அளவு ரொம்பவே அதிகமிருப்பது, சில இடங்களில் ‘அது எப்படி., இது எப்படி’ என்ற கேள்விகள் எழக் காரணமாகியிருக்கிறது.
காட்சிகளுக்கு இடையிலான இடைவெளியை நிரப்பவும், திரைக்கதையில் வேகம் கூட்டவும் உதவியிருக்கிறது கண்ணன் நாராயணனின் பின்னணி இசை.
அவரது இசையில் ‘ரத்தம் ரத்தம்’, ‘ஒருநாள்’ பாடல்கள் உடனடியாக நம்மை ஈர்க்கின்றன.
இந்த படத்தில் சில காட்சிகள் வித்தியாசமாக எழுதப்பட்டு, கொஞ்சம் வேறுபட்ட ட்ரீட்மெண்டில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அதற்கேற்ப அதிஷா, கார்கி பவா, தோழர் ஆதி மற்றும் இயக்குனர் சி.எஸ்.அமுதனின் எழுத்தாக்கம் அமைந்துள்ளது. ஆனால், படம் முடிந்தபிறகு பல யோசனைகள் நம் மண்டையைக் குடைகின்றன. அவற்றில் பல லாஜிக் மீறல்களுக்குப் பதில்களே இல்லை என்பதுதான் ‘ரத்தம்’ படத்தின் பலவீனம்.
லாஜிக் எங்கே?
வானம் என்பது வார இதழா, தினசரியா, தொலைக்காட்சியா அல்லது இணைய ஊடகமா என்பதற்குத் திரைக்கதையில் பதிலே இல்லை.
படத்தின் இறுதியில், வில்லன் தரப்பினர் வைத்திருக்கும் தரவுகளை கமிஷனர் அலுவலகத்திற்கே சென்று நாயகன் திருடுவதாக ஒரு காட்சி உண்டு. நிச்சயமாக, அது சமூகவலைதளங்களில் ‘ஸ்பூஃப்’ செய்யப்படும்.
விஜய் ஆண்டனி, நந்திதா, மஹிமா மற்றும் உதய் மகேஷ் கதாபாத்திரங்களுக்கான உள்ளடக்கத்தை வடிவமைத்ததிலும் சில முரண்கள் தலை நீட்டுகின்றன.
சமூக ஊடகங்களில் ‘வெறித்தனம்’ காட்டும் வில்லங்கக் குஞ்சுகளையே இப்படம் பூதாகரப்படுத்திக் காட்டுகிறது.
அவர்களை வில்லன் தரப்பு தேர்ந்தெடுப்பதும், உளவியல் ரீதியாகப் பயன்படுத்துவதும் இன்னும் கொஞ்சம் விலாவாரியாகச் சொல்லப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
வில், அம்புகளைக் காட்டிவிட்டு, சிறிய அளவில் அம்பெய்தச் சொன்னவர்களை அடையாளப்படுத்திவிட்டு நின்றுவிடுகிறது ‘ரத்தம்’ திரைக்கதை.
அதற்கப்பால் இருக்கும் எல்லைகளையும் தாண்டியிருந்தால், இப்படத்தின் அளவு இன்னும் பெரிதாகியிருக்கும்.
கொஞ்சம் ‘தனி ஒருவன்’, கொஞ்சம் ‘பேப்ரிகேட்டட் சிட்டி’ போன்ற கொரிய திரைப்படங்களை நினைவூட்டினாலும், சின்னச் சின்ன திருப்பங்களால் நம்மை சுவாரஸ்யப்படுத்துகிறது ‘ரத்தம்’.
ஒரு சிம்பிளான ஆக்ஷன் த்ரில்லர் பார்க்க வேண்டுமென்று விரும்புபவர்களை இப்படம் திருப்திப்படுத்தலாம். ஆனால், முழுக்கப் படம் பார்த்துவிட்டு ‘என்னப்பா கொஞ்சம் கூட லாஜிக்கே இல்ல’ என்று மட்டும் சொல்லக் கூடாது!
- உதய் பாடகலிங்கம்