இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட், சினிமா இரண்டுமே பெரும் பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்து வருகின்றன. அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தைக் கூட இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.
ஆனால், சினிமா நட்சத்திரங்கள் கிரிக்கெட் ஆடுவதோ அல்லது திரைப்படங்களில் கிரிக்கெட் வீரர்கள் இடம்பெறுவதோ பெரிய அளவுக்கு வரவேற்பைப் பெற்றதில்லை.
அந்த எண்ணங்களைப் பொய்யாக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை அனுபவங்கள் திரைப்படங்களாகி வெற்றியைச் சுவைத்து வருகின்றன. அந்த வரிசையில் இன்னொன்றாக இடம்பெற்றிருக்கிறது ‘800’.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை இதில் சொல்லப்பட்டுள்ளது.
சரியான இடைவேளை!
பள்ளி, கல்லூரிப் படிப்பின்போது, அதுவே அவரது மூச்சாக உள்ளது. அப்போது, அவர் செய்த சாதனைகளே இலங்கை அணியில் இடம்பெற வைக்கிறது.
ஆனாலும், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட முரளிதரனால் (மிட்டல் மாத்தூர்) ஒரு ஆட்டத்தில் கூட ஆட இயலவில்லை. அதன்பிறகு, தேசிய அணிக்குத் தேர்வு செய்யப்படவும் இல்லை.
அந்த நேரத்தில், தந்தை நடத்தி வந்த பிஸ்கட் கம்பெனியை நடத்துவதற்காக வெளிநாட்டுக்குச் சென்று உணவு பதப்படுத்துதல் நுட்பத்தைக் கற்க முடிவு செய்கிறார் முரளிதரன்.
ஆனாலும், ஒரு கிரிக்கெட் ரசிகையின் பேச்சு அம்முடிவை நீர்த்துப் போகச் செய்கிறது.
அதன்பிறகு, முன்பை விடவும் உக்கிரமாக கிரிக்கெட் ஆட ஆரம்பிக்கிறார் முரளிதரன்.
தமிழ் யூனியன் கிரிக்கெட் கிளப்புக்காக ஆடும்போது, இலங்கை அணியின் கேப்டனாக இருந்த அர்ஜுன ரணதுங்காவின் அழைப்பின் பேரில் மீண்டும் தேசிய அணியில் ஆடும் வாய்ப்பைப் பெறுகிறார். அதனைச் சொல்கிறது இப்படத்தின் முதல் பாதி.
அந்தப் போட்டியில் முரளிதரன் வீழ்த்திய முதல் விக்கெட் தொடங்கி சர்வதேச டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தது வரையிலான பகுதியை விவரிக்கிறது இரண்டாம் பாதி.
அந்த வகையில், இந்தப் படத்தில் இடைவேளை வருமிடம் மிகச்சரியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதுவே படத்தின் பின்னடைவுக்கும் காரணமாக இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் முரளிதரன் பந்தை எறிகிறார் என்று குற்றம்சாட்டப்பட்டது தான் அவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை.
அதிலிருந்து மீண்டு வந்தாரா இல்லையா என்ற கேள்வியோடு இடைவேளை வரப்பட்டிருந்தால் ‘க்ளிஷே’வாகி விடும் என்று அதனைத் தவிர்த்திருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி. அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால், அதனை ஈடு செய்யும் விதமாக இரண்டாம் பாதி காட்சிகள் அமையவில்லை.
வழமையான காட்சியமைப்பு!
முரளிதரன் ஆக மாத்தூர் மிட்டல் நடித்துள்ளார். இந்தப் பாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டு, பின்னர் ஏற்பட்ட சர்ச்சைகளால் அவர் நடிக்காமல் போனது தெரிந்த விஷயம். அதனை மறக்கடிக்கும்விதமாக இப்படத்தில் மாத்தூர் மிட்டலின் நடிப்பு அமைந்துள்ளது.
மதிமலராக வரும் மஹிமாவுக்கு இரண்டொரு காட்சிகள் தான். அதனால், இந்தப் படத்தில் அவருக்குப் பெரிதாக முக்கியத்துவம் இல்லை.
இதில் முத்தையாவாக வேல.ராமமூர்த்தி, லட்சுமியாக ஜானகி சுரேஷ், பாட்டி அங்கம்மாளாக வடிவுக்கரசி ஆகியோர் நடித்துள்ளனர். அவர்களது இருப்பே, சாதாரண ரசிகர்களை ஈர்க்கக் காரணமாக உள்ளது.
இரண்டு பத்திரிகையாளர்களுக்கு நடுவே நிகழும் விவாதத்திற்கு இடையே கதை விரிவதாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நாசர், ஹரிகிருஷ்ணன் அப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராக ஹரி நடித்திருப்பதும், அவர் பேசும் வசனங்களும் சர்ச்சையை ஏற்படுத்தும்விதமாக உள்ளன. இருவரது நடிப்பும் இயல்பாக அமைந்தபோதும், அப்பாத்திரங்கள் திணிக்கப்பட்டதாகத் தோன்றுகின்றன.
ரித்விகா, திலீபன், சரத் லோகித்சவா, வினோத் சாகர், குழந்தை ரித்விக் உட்படப் பலர் நடித்துள்ளனர். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனாக நரேன் தோன்றியுள்ளார். படத்தில் அவரது பெயர் ‘மாஸ்டர்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர்த்து இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் ரணதுங்கா உட்படப் பல பாத்திரங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்தவர்கள், நடுவர்கள் என்று சிலர் தலைகாட்டுகின்றனர். அரவிந்த டி சில்வா, ஜெயசூர்யா பாத்திரங்களில் நடித்தவர்களை இன்னும் தெளிவாகத் திரையில் காட்டியிருக்கலாம்.
கடைசி போட்டியில் முரளிதரன் எதிர்கொண்ட இந்திய அணியை மட்டும் திரையில் காட்டாமல் தவிர்த்திருக்கிறார் இயக்குனர். அதனால், அந்த வேடங்களில் யார் நடித்திருப்பார்கள் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போயிருக்கிறது.
ஆர்.டி.ராஜசேகரின் சினிமா அனுபவம், முரளிதரன் சுயசரிதையை ஒரு கிளாசிக் திரைப்படமாக மாற்ற உதவியிருக்கிறது இப்படத்தின் பட்ஜெட் பற்றிய யோசனை நம் மனதில் உதிக்காமல் இருப்பது, ஒவ்வொரு காட்சியும் அற்புதமாகப் படம்பிடிக்கப்பட்டிருப்பதை உணர்த்துகிறது.
முதல் பாதியை அற்புதமாக கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல். இரண்டாம் பாதியை அவ்வாறே கைக்கொள்வதற்குத் தகுந்த வாய்ப்புகள் அமையவில்லை என்றே சொல்ல வேண்டும்.
கிப்ரான் தந்திருக்கும் பின்னணி இசை, ஒரு நல்ல திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை நமக்குத் தருகிறது.
கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கு முந்தைய தலைமுறையினரின் வாழ்வைத் திரையில் காட்ட தயாரிப்பு வடிவமைப்பாளர் விதேஷின் பணி உதவியிருக்கிறது.
முரளிதரன் போன்றே வாழ்வனுபவம் கொண்ட இலங்கைத் தமிழர்களுக்கு இதில் மாற்றுக்கருத்துகள் இருக்கக் கூடும்.
தொழில்நுட்பப் பணிகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்திருக்கும் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி, இப்படத்தின் திரைக்கதை வசனங்களை ஷெகன் கருணதிலகா உடன் இணைந்து எழுதியிருக்கிறார்.
வெளிநாட்டு அணிகள் உடன் முரளிதரன் விளையாடியதைக் காட்டினால் பட்ஜெட் எகிறும் என்று இயக்குனர் சாமர்த்தியாகக் காட்சிகளை வடிவமைத்திருப்பதை நாம் பாராட்டத்தான் வேண்டும்.
அதற்குப் பதிலாக, முரளிதரன் எதிர்கொண்ட முக்கியமான நிகழ்வுகளை மட்டுமே திரையில் காட்டியிருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.
மிகப்பெரிய சவால்!
மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ படத்தில், நம்பி நாராயணன் வாழ்வு முழுவதுமாகச் சொல்லப்படவில்லை.
மாறாக, அவர் கைது செய்யப்பட்ட தருணத்தில் தொடங்கி மிக முக்கியமான வாழ்க்கை சம்பவங்கள் மட்டுமே பூதாகரப்படுத்தப்பட்டிருந்தன.
‘800’ படம் அதே பாணியில் தொடங்கினாலும், பின்னர் வேறு பாதைக்கு மாறிவிடுகிறது.
முரளிதரன் கதையைச் சொல்லும் வகையில், இதில் நாசர் பாத்திரம் காட்டப்பட்டுள்ளது.
ஆனாலும், திரையில் அவ்வப்போது ‘சில வாக்கியங்கள்’ மௌனத் திரைப்படப் பாணியில் இடம்பெறுகின்றன. அதற்குப் பதிலாக, நாசரின் வாய்ஸ் ஓவரிலேயே அவற்றை விவரித்திருக்கலாம்.
முரளிதரனின் குழந்தைப் பருவம் முதல் பதின் பருவம் வரை இயல்பாக நகர்கிறது திரைக்கதை.
அதன்பிறகு, அவர் எவ்வாறு இலங்கை அணியில் இடம்பிடித்தார் என்பதைச் சொல்கின்றன சில காட்சிகள். நூல் பிடித்தாற்போல அவற்றில் இருந்த நேர்த்தி அதன்பிறகு சுத்தமாக இல்லை.
முரளிதரன் தனது கிரிக்கெட் வாழ்வில் எதிர்கொண்ட சிக்கல்கள், அவமானங்கள், அவரது மனக்குமுறல்களில் இன்னும் அழுத்தம் கூட்டி திரையில் காட்டியிருந்தால் ஈர்ப்பு கூடியிருக்கும்.
அதனைத் தவறவிட்ட காரணத்தால், பின்பாதி ‘சவசவ’ என்றிருக்கிறது.
மிட்டல் மாத்தூரின் தோற்ற மாற்றங்களும், அவரது நடிப்பும் முரளிதரனை எளிதாக நினைவூட்டுகின்றன.
அதேநேரத்தில், சாதாரண ரசிகர்களுக்கு அவரது முகம் பரிச்சயமில்லை என்ற காரணமே இப்படம் பெரிய வரவேற்பைப் பெறுவதில் மிகப்பெரிய சவாலாக அமையும் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
மொத்தப்படமும் ‘முரளிதரன் யார்’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கும்விதமாக உள்ளது.
அதையும் தாண்டி அவரது வாழ்வில் நிகழ்ந்த, யாருக்கும் தெரியாத விஷயங்களைத் திரையில் காண விரும்பியவர்களுக்கு இப்படம் தருவது விருந்தல்ல; சோளப்பொரிதான்!
– உதய் பாடகலிங்கம்