சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை. சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான். மனதின் கன்ட்ரோல் நம்மிடம்தான். எனவே, ஆனந்தமாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நாம் மட்டுமே.
வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள். கொஞ்சம் லகுவாக, நகைச்சுவையாக அணுகுங்கள்.
அருகில் இருப்பவர்கள் நகைச்சுவை சொன்னால் சிரியுங்கள். தினமும் இரண்டு, மூன்று நபர்களையாவது சிரிக்க வையுங்கள். சிரிப்பு ஒரு தொற்று நோய். இடம் விட்டு இடம் பெயர்ந்து ஆரோக்கியமாகப் பரவும்.
உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும்; உடலின் சக்தி தேவையை நிறைவேற்றும். உற்சாகமாக உணர்வீர்கள்.
உடற்பயிற்சியின்போது உடலில் சுரக்கும் ‘எண்டோர்பின்’களால் (endorphins) மனது புத்துணர்வு பெறும் என்கிறது மருத்துவ உலகம்.
வேலை, கடமை இத்யாதிகளுக்கு மத்தியில் புத்தகம் படிப்பது, நன்றாக ஒரு குளியல் போடுவது, இசை கேட்பது இப்படி ஏதாவது உங்கள் மனதுக்குப் பிடித்த ஒரு செயலுக்கு தினமும் சில நிமிடங்கள் ஒதுக்குங்கள்.
அதேபோல், தினமும் கொஞ்ச நேரம் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும் பசுமையான நினைவுகளை அசைபோடுங்கள்.
ஆனந்தம் என்பது ‘லக்’ அல்ல, நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவுதான் என்பதில் தெளிவாக இருங்கள்.
அன்னப் பறவையாக மாறி நல்லவற்றையும், ஆனந்தம் தருபவற்றையும் அதிகம் கவனியுங்கள். உங்களைக் கடந்து போகும் சம்பவங்களில், சந்தோஷமான விஷயங்களை அதிகம் உள்வாங்குங்கள்.
தாழ்வு மனப்பான்மையைத் தூக்கிக் கடலில் போடுங்கள். ஏதேனும் தவறு, தோல்வி நடந்தால் அதற்குரிய காரணத்தை ஆராய வேண்டுமே தவிர… நத்தை ஓட்டுக்குள் முடங்கிவிடக் கூடாது.
உங்கள் மனதை நீங்கள்தான் உற்சாகப்படுத்த வேண்டும். குழந்தைகளுடன் செலவிடும் சந்தோஷ தருணங்கள், நல்ல காமெடி திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை உங்களை ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
திருத்தமாக உடையணிந்து நேர்த்தியாக இருக்கப் பழகுங்கள். மனோரீதியாக அது உங்களை தன்னம்பிக்கையாகவும், ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வைக்கும்.
புது இடங்களைப் பார்ப்பது, புது மனிதர்களுடன் பழகுவதெல்லாம் உற்சாகமான வாழ்க்கையின் வழித்தடங்கள். எனவே, அவ்வப்போது ‘அவுட்டிங்’ செல்லுங்கள். பரிசுத்தமான இயற்கையின் இருப்பிடங்கள் இதற்கு பெட்டர் சாய்ஸ்.
ஆன்மிகவாதியாக இருங்கள். ஆனால், மதவாதியாக மாறிவிடாதீர்கள். உங்களுக்கு ஆனந்தமும் நிம்மதியும் தரும் நூல்களை வாசியுங்கள்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும், இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றிப் படிகளில் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்!
- திருநாவுக்கரசு