விச்சுவுக்கு இசையைத் தவிர வேறு உலகம் தெரியாது!

– கவியரசர் கண்ணதாசன்

கண்ணதாசனும் விஸ்வநாதனும் மறக்க முடியாத பல பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள். ஒருவர் படைத்தார். மற்றொருவர் இசைத்தார்.

கவியரசர் 1927 ஆம் ஆண்டும், மெல்லிசை மன்னர் 1928 ஆம் ஆண்டும் பிறந்தவர்கள். இருவருக்குமிடையே இருந்த அன்பு அலாதியானது.

எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி கண்ணதாசன் அவர்கள் பகிர்ந்து கொண்டது குறித்த ஒரு பதிவு.

“இது நன்றாக இல்லை” என்று என்னிடம் சொல்லக் கூடிய ஒரே இசையமைப்பாளர் என் தம்பி விஸ்வநாதன்.

கடுமையான உழைப்பாளி, தூங்குகிற நேரம் குறைவு, நாள் முழுவதும் உழைப்பு உழைப்பு உழைப்பு, இசையைத் தவிர வேறு உலகம் தெரியாது.

அவனோடு பாட்டெழுத உட்கார்ந்து விட்டால் நேரம் போவதே தெரியாது.

முப்பது வருடங்கள்!

தொழில் தளர்ச்சியில்லாமல் தம்பியும் நானும் கண்ட எல்லையை வேறு யாரும் காணமுடியாது.

இசைக்குப் பாட்டா? பாட்டுக்கு இசையா?

இரண்டும் பாதிப் பாதி.

ஆகாயப் பந்தலிலே இசைக்கு எழுதப்பட்ட பாட்டு..
சோதனை மேல் சோதனை பாட்டுக்குப் போடப்பட்ட இசை!

நானும் தம்பியும் பத்தே நிமிடங்களில் போட்டு முடித்த பாட்டு, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் வரும் “முத்தான முத்தல்லவோ…”

நான்கு மாதங்கள் உயிரைவிட்ட பாட்டு ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் வரும் “நெஞ்சம் மறப்பதில்லை…” பாடல்.

எந்த இரவிலும் நான் போட்டுக் கேட்பது, நான் எழுதி தம்பி இசையமைத்த ஸ்ரீகிருஷ்ண கானமே, இதுவரை அது போல் பக்திப் பாடல் வந்ததாகவும் எனக்கு ஞாபகம் இல்லை.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment