பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், தலித்துகள், பழங்குடியினரை தவிர மீதி உள்ள சமூகத்தினர் பற்றி கணக்கெடுப்பை நடத்த வாய்ப்பு இல்லை என ஒன்றிய அரசு நிராகரித்தது.
இதையடுத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த முதலமைச்சர் நிதிஷ் குமார் கடந்த ஆண்டு உத்தரவிட்டார். இதற்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் ஜாதி வாரி கணக்கெடுப்பு விவரங்களை பீகார் அரசின் மேம்பாட்டு ஆணையர் விவேக் சிங் நேற்று வெளியிட்டார்.
அதன்படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13.07 கோடி என்றும் அதில், 36 % உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மிக பெரிய சமூகப் பிரிவாக உள்ளனர் என்றும் அவர்களுக்கு அடுத்த படியாக பிற்படுத்தப்பட்டோர் 27.13 % உள்ளனர் என்றும் ஒட்டுமொத்தமாக பிற்படுத்தப்பட்டோர் 63 % இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதோடு, பொது பிரிவினர் 15.52 %, பிற்படுத்தப்பட்டோரில் அதிகளவாக யாதவ சமுதாயத்தினர் 14.27 % உள்ளதும், தலித்துகள் 19 %, பழங்குடியினர் 1.68 %, பிராமணர் 3.66 %, குர்மி 2.87 %, முசாஹர் 3 % என்பதும் தெரியவந்துள்ளது.
மொத்த மக்கள் தொகையில், இந்துக்கள் 81.99 %, முஸ்லிம்கள் 17.70 %, கிறிஸ்தவர்கள், சீக்கியர், ஜெயின் உள்ளிட்ட மதங்களை சார்ந்தவர்கள் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளதும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பீகார் சட்டபேரவையில் இடம் பெற்றுள்ள 9 அரசியல் கட்சிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பீகாரைப் போல தமிழ்நாட்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் சமூகநீதியைக் காப்பாற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலாந்தி ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியுள்ளார்.