”கிளர்ச்சி என்பது புரட்சி அல்ல,
அது புரட்சியை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று…”
”கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதற்கு
உரத்த குரல் தேவைப்படுகிறது…”
இந்திய இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன், கிளர்ச்சிக்காரன், போராளி, பொதுவுடைமைவாதி, சுதந்திரப் போராட்ட வீரர் என்ற பல அடைமொழிகளுக்குள் அடக்கப்படும் மாமனிதன்தான், பகத்சிங்.
விடுதலைப் போராட்ட வீரர்களை கொண்ட சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர் பகத்சிங். இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் தன்னை கரைத்துக் கொண்டார். புரட்சி இயக்கங்களுடனான தொடர்புகளில் தன்னை புதைத்துக் கொண்டார். ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததால், 63 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். அப்போது, அங்கிருந்த இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரிட்டீஷ் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு என்ற அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டார். இளைஞர் பகத்சிங்கின் செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது.
முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத்சிங் 24வது வயதில் தூக்கு கயிற்றை முத்தமிட்டார். பகத்சிங்கின் வீரம், தியாகம், தேசப்பற்று, கொள்கை பிடிப்பு ஏராளமான இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட உந்து சக்தியாக அமைத்தது.
சோஷலிசக் கொள்கைகள் இந்தியாவில் பயணப்பட பகத்சிங் பாதையாக இருந்தார். பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன், தன் தந்தைக்கு, நான் ஏன் கடவுள் மறுப்பு கொண்டவனாக மாறினேன் என்பதை கடிதம் மூலம் தெரிவித்தார். அது பின் நாளில், why am i atheist என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. தமிழில் அப்புத்தகத்தை ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ என்ற பெயரில் தோழர் ப.ஜீவானந்தம் மொழி பெயர்த்தார்.
”சாகப்போகிறோம் என்றாகி விட்டது,
இந்த நேரத்தில் புத்தகம் எதற்கு? என்று பகத்சிங்கிடம் கேட்டதற்கு,
“சாகும்போது முட்டாளாக சாக எனக்கு விருப்பமில்லை, எதையோ கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்” என்று பதில் அளித்தார் பகத்சிங்.
புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. பகத்சிங் என்ற நெஞ்சுரமிக்க விதையிலிருந்து பல வீரஞ்செறிந்த விருட்சங்கள் இந்தியாவைக் காக்கும் இமைகளாக வளர்ந்து நிற்கின்றன.
✍️ லாரன்ஸ் விஜயன்