மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தான் எப்போதும் வழிகாட்டி!

நூல் அறிமுகம்:

கனவு ஆசிரியர் என்பவர் யார் என்ற கேள்வியும், எவ்வாறு இருக்க வேண்டும் என்ற எண்ணமும் சிந்திக்கத் தூண்டும்.

”கனவு ஆசிரியர்” இந்த வார்த்தையை கேட்டவுடன் பலருக்கு தாங்கள் பெருமதிப்பும், மரியாதையும் வைத்திருக்கக்கூடிய சில ஆசிரிய முகங்கள் மனதில் மேலெழும்பி மகிழ்ச்சி அளிக்கும்.

ஒரு சிலருக்கோ ஞாபகப்படுத்த விரும்பாத சில ஆசிரிய முகங்கள் கண்முன் தோன்றி அவஸ்தை, வேண்டா வெறுப்பைக் கொடுக்கும்.

இன்னும் சிலருக்கோ அப்படி யாரும் எனக்கு இல்லையே என கையை விரித்து அடுத்த வேலையை செய்ய நேரிடும்.

மேற்சொன்னதைப்போன்று தமிழகத்தில் ஆசிரியர் பணியை சிறப்பாய் செய்து கற்பித்த 19 ஆளுமைமிக்க ஆசிரியர்கள், தங்கள் ஆசிரியர்களைப் பற்றியும், ஆசிரியர் பணியைப் பற்றியும் கூறிய கருத்துக்கள் மற்றும் ஆபிரஹாம் லிங்கன் தன் குழந்தையின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் என மொத்தம் 20 கட்டுரைகளின் தொகுப்புகளே  இந்த ‘கனவு ஆசிரியர்’ புத்தகம்.

குறிப்பாக சமூகம் எதிர்பார்ப்பது, ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும். மாணவர்கள் விரும்பும் வகையில்
அவர்களின் ரோல்மாடலாக இருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் எந்த விஷயத்திலும் சற்று நிதானமாக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் ஆளுமையை வளர்க்கும் வகையில் தொடர்ச்சியாக கற்றுக் கொள்பவராக இருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் வகுப்பறையிலும், பொது இடங்களிலும் மாணவர்களிடம் அதிகாரமின்றி, அதட்டலின்றி அன்பாக பழக வேண்டும்.

ஒழுக்கத்தின் மறு பிறப்பாக இருக்கவேண்டும். ஒழுக்கத்தை போதிப்பவராக,
சாதி, மத உணர்வற்றவராக இருக்க வேண்டும். இவ்வகைக் கருத்துகளே பெரும்பாலான ஆளுமைகள் முன்வைக்கும் பொதுவான கருத்துக்கள்.

எங்களை எங்களுக்கு அடையாளப்படுத்தியவர்கள் எங்கள் ஆசிரியர்கள் என்று பெருமிதம் கொள்கின்றனர் சில சாதித்த ஆளுமைகள்.

“நீ ஏன்டா படிக்க வர்ற; கள் விற்று பிழைக்கலாமே” வீட்டுப்பாடம் செய்யாமல் வகுப்பறை வந்ததற்காக ஆசிரியர் பயன்படுத்திய இவ்வார்த்தைகள் 55 வருடங்களை கடந்த பின்பும் வலி ஏற்படுத்துவதாக கூறுகிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

“நீ எல்லாம் ஏன்டா படிக்க வர்ற” என்ற வார்த்தைகளைக் கேட்காத வகுப்பறை சுவர்கள் பாக்கியம் செய்தவை. ஆம் இன்னும் நாம் பயன்படுத்தும் வார்த்தை.

விமர்சனம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அவ்வகை விமர்சனம் கேட்பவர் தன் தவறை உணர்ந்து கொண்டு தன்னை திருத்திக் கொள்வதற்காக அமைய வேண்டுமே தவிர, அவருக்கு தீராத காயத்தை உண்டு பண்ணுவதாக இருக்கக் கூடாது.

ஆசிரியர் மாணவர்களிடத்தில் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும் அவர்களை ஊக்கப்படுத்துவதாக, நம்பிக்கை ஊட்டுவதாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு போதும் காயப்படுத்துவதாக இருந்துவிடக்கூடாது. மாணவர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை வளர்க்கும் விதமாகவும் இருந்திடக் கூடாது.

ஆசிரியர் என்பவர் அனைத்தும் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை,
இன்னும் தெரிந்துகொள்ள நிறைய இருக்கிறது என்பதை புரிந்தவராக இருக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

ஆசிரியர் பணி என்பது விரும்பிச் செய்வது, விரும்புபவர்கள் மட்டுமே செய்ய வேண்டியது என்று கூறுகிறார் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்க வழி செய்வது மட்டுமல்ல ஆசிரியர் பணி, வகுப்பறையை எளிய திறமைகளின் சந்திப்பாக மாற்றுபவர்தான் என் கனவு ஆசிரியர் என்கிறார் பேராசிரியர் ச.மாடசாமி

‘டோட்டோஜான்-ஜன்னலில் ஒரு சிறுமி’ என்ற நூலைப் படிக்காதவர்கள் கனவு ஆசிரியராக மட்டுமல்ல, நல்லாசிரியராகக் கூட இருக்க முடியாது என்கிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

அறிவியல் ஆசிரியரின் பணி பாடங்களை வெறுமனே நடத்துவது அல்ல, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விடைதேடும் மனம் ஒன்றை மாணவர்களுக்கு விதைக்க வேண்டும் என்கிறார் ஆயிஷா இரா.நடராஜன்

ஆளுமைகள் எல்லோரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணி குறித்து பேசிக்கொண்டிருக்கையில், “அப்பாதான் என் கனவு ஆசிரியர்” என்று சொல்லி அதற்கான காரணங்களை அடுக்குகிறார் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.

கல்வியும், மருத்துவமும் மனிதனை மேம்படுத்தும் சேவைகள். கற்பித்தலில் கற்பனை அவசியம். கற்பனை இல்லாத கற்பித்தல் வகுப்பறையை அலுப்பூட்டும் என்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

எரியும் மெழுகுவர்த்தி தான் மற்ற மெழுகுவர்த்தியை பற்ற வைக்க முடியும். என்ற தாகூரின் வரிகளைக் கூறி கற்பித்தலுக்கு தொடர்ச்சியான கற்றலின் அவசியத்தை விளக்குகிறார் த.வி. வெங்கடேஸ்வரன்.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக கல்வி பொதுப்புத்தியில் மாற்றத்தை உண்டு பண்ண வேண்டும் என்கிறார் எழுத்தாளர் பிரளயன்.

இப்படியாக தங்கள் கனவு ஆசிரியர்களைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்தைக் கொண்டிருந்தாலும்,

நல்ல ஆசிரியருக்கான அடிப்படை நல்ல மனிதராக இருப்பதுதான் என்பதே அனைவரின் மையக் கருத்தாக இருக்கின்றது. ஆசிரியர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நல்ல நூல்.

நூல் : கனவு ஆசிரியர்
ஆசிரியர் : க.துளசிதாசன்
விலை : ரூ.₹90
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

  • தி. தாஜ்தீன்

நன்றி : புக் டே வெப்சைட்

Comments (0)
Add Comment