நம்முடைய வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் எவரோ ஒருவர் எப்போதோ பாராட்டிய வார்த்தைகள்தான் நமக்கு உந்து சக்தியாக இருந்து ‘இன்னும் பொறுப்புடன் வாழ்’ என்கிறது. ஊக்கமூட்டுகிறது.
இதே நேரத்தில் எவரோ ஒருவர் எப்போதோ சொன்ன சுடு சொற்கள் சிலவும் நம்மை வருத்தமடையச் செய்கின்றன. ‘இப்படிச் சொல்லி விட்டானே’ என்று மனதை நோகடிக்கிறது.
இப்படி மனதை வருத்தும் வார்த்தைகளை சவாலாகவோ அல்லது மறந்தோ விடுவது நல்லது.
பாராட்டி, ஊக்குவித்துச் சொன்ன சொற்களை மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு உற்சாகமாக வாழ வேண்டும்.
‘வாள் முனையை விடப் பேனா முனை உயர்ந்தது’ என்றான் நெப்போலியன் போனபார்ட். எனவே நாமும் மற்றவர்களுடன் அன்பாகவும் ஆறுதலாகவும் தன்னம்பிக்கையைப் புதுப்பிக்கும் விதத்தில் நம்முடைய வார்த்தைகள் இருக்க வேண்டும்.
எழுதினாலும், பேசினாலும் வார்த்தைகள் படைக்கும் சக்தியை உருவாக்குகின்றன. நம்முடைய வெற்றிகளில் பாதி நம்முடைய வார்த்தைகளில்தான் இருக்கின்றன என்று எழுதினார் நார்மன் வின்சென்ட்பீல்.
நாம் பேசும்போதும் எழுதும்போதும் நாம் ஏற்கெனவே சிந்தித்த, நம் எண்ணங்களைத்தான் வெளிப்படுத்துகிறோம்.
இவை வார்த்தைகளாக எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படும்போது அவை பலரையும் ஊக்கமூட்டித் தட்டிக் கொடுத்து உற்சாகமாக வாழ வைக்கின்றன.
ஆப்ரஹாம்லிங்கனின் உரையை இன்றும் அமெரிக்காவும் பிறநாடுகளும் நினைவுபடுத்திக் கொண்டு மக்களுக்காக அரசு என்ற கொள்கைக்கு ஏற்பத் திட்டமிடுகின்றன.
வெளியூருக்குச் சென்றாலும் சரி, வெளிநாடுகளுக்குச் சென்றாலும் சரி முகம் தெரியாதவரிடம் ‘இந்த முகவரி எங்கே இருக்கிறது?’ என்று கேட்டால் சிலர் பதில் சொல்வார்கள். இதே நேரத்தில் ‘ஹலோ’ காலை வணக்கம்!
இந்த முகவரிக்கு எப்படிச் செல்ல வேண்டும்?’ என்று கேட்டால், சம்பந்தப்பட்டவர் மகிழ்ச்சியடைந்து பதில் வணக்கம் சொல்லி புன்முறுவலுடன் பதில் சொல்லி நமக்கு வழிகாட்டுவார்.
இதிலும் நாம் ஹலோ… என்று சொல்லிய வார்த்தைகள்தான் வெற்றி பெற்றன.
எனவே, எப்போதும் நன்மை தரும் சொற்களை மட்டுமே பேசுங்கள், நடிகர் கே.ஏ.தங்கவேலு திட்டி நடிக்க மாட்டார்.
இப்படி காட்சி வைத்தால் நான் நடிக்கமாட்டேன் என்று கூறிவிடுவார். எப்போதும் ‘நீங்கள் வாழ்க’ என்று தன்னைச் சந்திக்கும் அனைவரையும் வாழ்த்தி மகிழ்ந்தவர் இவர்.
வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன் என்று உங்களைச் சந்திப்பவர்களை வாழ்த்தி மகிழுங்கள். நீங்கள் மனப்பூர்வமாக வாழ்த்தினாலே போதும். உங்களது வார்த்தைகள் அவரது இதயத்தை மலரச் செய்து விடும்.
குடும்ப உறுப்பினர்களுடன் அக்கறையுடன் பேசுங்கள். எப்போதும் ஆக்கபூர்வமான வார்த்தைகளையே பேசுங்கள்.
வேதாத்ரி மகரிஷியின் ‘வாழ்க வளமுடன்’ என்ற வார்த்தைகளை தொலைபேசியில் பேச ஆரம்பிக்கும்போது பேசி வந்த இளம்பெண் ஒருவர் தனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை உணர்ந்து பரவசமடைந்தார்.
இதனால் எப்போதும் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து நல்ல நல்ல வார்த்தைகளையே மனப்பூர்வமாகப் பேச என்னைத் தயார்படுத்திக் கொண்டேன்.
இதனால் என் பேச்சு, செயல் என இரண்டிலும் நேர்மறையான மனோபாவம் அதிகரித்துள்ளதை உணர்ந்து கொண்டேன் என்கிறார்.
எமிலிகூட் என்ற நர்ஸ், நோயாளிகள் விரைந்து குணமாக ‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழிமுறையிலும் மேலும் மேலும் நான் நன்கு குணம் பெறுகிறேன்’ என்ற வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப நம்பிக்கையுடன் சொல்லச் சொல்லி குணம் பெறச் செய்தார்.
இந்த நல்ல வார்த்தைகளின் சக்தி அனைவருக்கும் உதவ வேண்டும் என்பதற்காக குணம் பெறுகிறேன் என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக நான் முன்னேறுகிறேன் என்று மாற்றி உலகிற்கு இந்த மந்திர வார்த்தைகளை அளித்தார்.
இதனால் நோயாளிகள் மட்டுமல்ல பிரச்னைகள் உள்ளவர்களும், உற்சாகத்துடன் வாழ்பவர்களும் மேற்கண்ட வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப தினமும் சொல்லி முன்னேற்றத்திற்கும் மன அமைதிக்கும் தங்களை எளிதில் தயார்படுத்திக் கொள்கிறார்கள்.
எனவே, நாமும் நல்ல வார்த்தைகளையே பேசுவோம். இதன் மூலம் நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் சண்டை சச்சரவின்றி சமாதானத்துடனும் உதவும் மனப்பான்மையுடனும் வாழ்வது உறுதி.
நன்றி : முகநூல் பதிவு