தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ். தங்கராஜ் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரும், இயக்குநர் சிவி குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற வெற்றிப்பட இயக்குநர் சீனு ராமசாமி இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார்.
முதல் காட்சியை சிவி குமார் இயக்க இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இனிதே தொடங்கியது. எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தும் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகிறது.
இப்படத்தின் கதாநாயகனாக அருண் நடிக்க அவரது ஜோடியாக நிரஞ்சனா நடிக்கிறார். இவர்களுடன் யூடியூப் புகழ் விஜய் டியூக், ஷிமோர் ரூஸ்வெல்ட் மற்றும் பலர் நடிக்கின்றனர். நடிகராக அறிமுகமாகும் சீனு ராமசாமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
புதிய சமுதாய மாற்றத்திற்கான வழிகாட்டியாக இப்படம் அமையும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் இயக்குநர் விஜய் கார்த்திக். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே சமூகநீதி என்ற கருத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் இத்திரைப்படம் பதிவு செய்யும் என்று அவர் மேலும் கூறினார்.
சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கான துணை நடிகர் நடிகைகள் பங்கு பெற்ற நிலையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. தொடர்ந்து விழுப்புரம், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
– தேஜேஷ்