தமிழின் மிக முக்கியமான இலக்கிய இதழான ‘எழுத்து’வை ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி, நாவல், சிறுகதை, விமர்சனம் என்று வாழ்நாள் இறுதிவரை இயங்கிய எழுத்தாளரான சி.சு.செல்லப்பாவைப் பற்றி 2007 ஜூலையில் வந்த ‘புதிய பார்வை’ இதழில் ‘நினைவில் நிற்கும் இதழ்கள்’ பகுதியில் இப்படி எழுதியிருக்கிறார் கல்பனா தாசன்.
“எழுத்து வேறு, வாழ்க்கை வேறு என சி.சு.செல்லப்பா வாழவில்லை. வறுமை வாட்டியபோதும் அவரது மன உறுதி தளர்ந்ததில்லை. நேர்மை, பிடிவாதம், முன்கோபம் என்றே வாழ்ந்து முடித்துவிட்டார்.
தமிழக அரசு இலக்கியத்திற்கான ராஜராஜன் பரிசை செல்லப்பா, கோவி.மணிசேகரன் இருவருக்கும் வழங்கத் தீர்மானித்தபோது, அதை நிராகரித்துவிட்டார் செல்லப்பா.
பரிசுகளுக்காக அலையும் படைப்பாளிகளுக்கு மத்தியில் இப்படி ஒருவர் வாழ்ந்தார் என்பது பதிவு செய்யப்பட வேண்டிய செய்தி.
செல்லப்பாவும் சரி, அவரது துணைவியாரும் சரி, இதே மனப்பக்குவத்துடன் வாழ்ந்தவர்கள்.
ஒருமுறை லலிதா ஜூவல்லரி நிறுவனத்தினர் இவர்கள் இருவரையும் வீடு தேடி வந்து, அழைத்துக் கொண்டு போய் நகைகள் அடங்கிய பரிசுப் பொருட்களை வழங்க முற்பட்டபோது, வெறும் பட்டு வேட்டி, புடவையை மட்டும் எடுத்துக் கொண்டு, நகைகள் வேண்டாம் என மறுத்துவிட்டார்கள் என்பதும் அரிய செய்தி.
நகை வேண்டாம் என்று சொல்லும் பெண்குலத் திலகத்தை வாழ்க்கைத் துணையாக அடைவது எத்தனை பெரிய பேறு.
ஆக, இருவரும் இலக்கிய வாழ்க்கை வாழ்ந்த தம்பதிகள் என நெகிழ்கிறார் இவ்விரு நிகழ்வுகளையும் நினைவுகூரும் செல்லப்பாவின் நண்பர் ஏ.என்.எஸ்.மணியன்.