பெரியாரின் இதயத்துக்குள் ரகசிய அறைகள் கிடையவே கிடையாது!

பெரியார் ஒரு சகாப்தம் – நூல் விமர்சனம்:

★ மனிதப்பற்று, அறிவுப்பற்று, வளர்ச்சிப்பற்று தவிர எந்தப் பற்றும் எனக்கில்லை. எனவே எனது அறிவை தாராளமாக விட்டு சிந்தித்து செயல்படுகிறேன் – என தனது கொள்கையை ஒளிவு மறைவின்றி, பயமின்றி, எதிர்வினைப் பற்றிய அக்கறையின்றி, உண்மையை மட்டுமே நம்பி உண்மையை பேசிய ஒரே தலைவர் – தந்தை பெரியார்!

அவரைப்பற்றி அறிஞர்கள் தெரிவித்த கருத்துக்களையும், ஊடகங்கள் தெரிவித்த கருத்துக்களையும், அவரது சிந்தனைகள் பற்றியும் ஒரு கையேடாக வெளியிடப்பட்ட சிறிய மற்றும் சீரிய நூல் இது.

************

பெரியாரைப் பற்றி பெரியார்:

★ ஈ.வெ.ராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தை திருத்தி உலகிலுள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு, அதே பணியில் இருப்பவன்.

அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, அந்த பணி செய்ய யாரும் வராததினால் நான், அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.
– (நூல் – பெரியார் புரட்சி மொழிகள்)

★ கடவுளாகட்டும் மதமாகட்டும் பக்தியாகட்டும் மோட்சமாகட்டும் வைத்துக் கொள்! எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொது சொத்தல்ல.

ஒழுக்கம், நாணயம் பொதுச்சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்கு போகிறேன் என்றால் உங்களுக்கென்ன? நான் போய்விட்டுப் போகிறேன்.

உங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. எனக்கு பக்தி இல்லை என்பதால் உங்களுக்கென்ன நஷ்டம்?

ஆனால் ஒழுக்கமில்லை என்றால் என்னாகும் பாருங்கள் ! நாணயமில்லை என்றால் என்னவாகும்? உண்மை உணர்வில்லை என்றால் என்னவாகும்? இது மூன்றும் இல்லாதது இன்னோரு மனிதனுக்கு செய்கிற கெடுதி தானே?


(பச்சையப்பன் கல்லூரி பேருரை. 24.11.1964)

*************

பெரியாரைப் பற்றி அறிஞர்கள்:

★ உலகத்திலேயே ஒரே ஒரு சாக்ரடீஸ்; ஒரே ஒரு புத்தர்; ஒரே ஒரு மார்ட்டின் லூதர்; ஒரே ஒரு ராமசாமி பெரியார்தான் தோன்றுவார்கள் ! தோன்ற முடியும் ! (சிந்தனையாளர் சாமி. சிதம்பரனார் – 1939)

★ சீன தேசத்து சன் – யாட் – சென்னின் குருவானவர் கன்பூசியஸ். அந்த பேரறிஞர் மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். பெரியார் ராமசாமியை அவருக்கு ஒப்பிடலாம். (மலேசியாவின் சீனப் பேராசிரியர் சி.எஸ்.ஸீ – 1939)

★ பெரியார் இயற்கையின் அருமைப் புதல்வர். ஆதலால்தான் காந்தியையும் மிஞ்சிய அளவுக்கு அகிம்சாவாதியாகவும், சாக்ரடீஸையும் மிஞ்சிய அளவுக்கு சமுதாய சீர்திருத்தக்காரராகவும் விளங்குகிறார்.
(தமிழறிஞர் திரு.வி.க. குடிஅரசு. 27.11.1948)

★ நாயக்கரிடத்திலுள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனதிற்படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தம குணம்தான். அவர் தமிழ்நாட்டின் எல்லா தலைவர்களையும் விட பெரிய தியாகி என்று தான் சொல்ல வேண்டும் ! (கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் – 1928)

★ பெரியார் மறதியாக கூட பொய் சொன்னதில்லை. நான் யாருக்கு அஞ்ச வேண்டும்? ஏன் மறைத்து பேசவேண்டும் என்ற தன்மான உணர்வுகள், அவர் வாயிலிருந்து பொய்யை வர விடுவதில்லை. பெரியாரின் இதயத்துக்குள் இரகசிய அறைகள் கிடையவே கிடையாது. (கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன்)

★ நான் அறிந்த வரையில், மேற்கோள் காட்டிப் பேசாமல், தனது அறிவையே முன்வைத்து பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர் தான் !
(நீதிபதி ஏ.எஸ்.பி. அய்யர்)

★ இந்து தர்மத்தை காப்பாற்றியதாக சொல்லப்படுகின்ற முனிவர்களும் ரிஷிகளும் பெண்களை எவ்வளவு கேவலப் படுத்தியவர்கள் என்பதை, முதலில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் பெரியார் தான் !
(எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்)

★ இந்த தலைமுறை மட்டுமல்ல அடுத்து வரவிருக்கும் தலைமுறைக்கும் பெரியாரிசம் தேவைப்படுகிறது.
(முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு – 1972)

★ உண்மையிலேயே தமிழ் நாட்டில் இன்றைக்குள்ள அரசியல், சமுதாய விழிப்புக்கு முக்கிய காரணம் பெரியார் அவர்களின் தொண்டேயாகும். அவருடைய சேவையை அடிப்படையாக கொண்டதுதான் இன்றைய தினம் நாம் அனுபவித்து கொண்டிருக்கும் சுதந்திர நாட்டின் வாழ்க்கையாகும்.
(கர்மவீரர் காமராஜர்)

★ பெரியாருடன் நான் பணியாற்றிருக்கிறேன். அந்த நாட்கள்தான், நான் என் வசந்தம் என்று கூறுவேன்.
(பேரறிஞர் அண்ணா)

★ பகுத்தறிவைப் பயன்படுத்தி, பாரினில் மனிதனாக நடமாட செய்தவர் தந்தை பெரியார். அவரில்லாமல் தமிழனே இல்லை! மனிதனும் இல்லை! ஏன் அண்ணாவே இல்லை ! புரட்சி கவிஞர் இல்லை ! கலைஞரோ, நானோ, திமுகவோ இல்லை என்று கூற வேண்டும் !
(பேராசிரியர் அன்பழகன்)

★ எந்த பணியாயினும், ஓய்வு கொள்ளாமல், உறக்கம் கொள்ளாமல், உணவு கூட அருந்தாமல், உழைப்பதற்கு பயிற்சி பெற்றிருப்பது – குடிஅரசு அலுவலகத்திலும், ஈரோடு இல்லத்திலும் அந்த கொள்கை குன்றம், பகுத்தறிவுப் பகவலனிடத்திருந்துதான் என்பதை எண்ணியெண்ணி இப்போதும் இன்பம் காணுகிறேன். (முத்தமிழறிஞர் கலைஞர்)

பெரியார் ஒரு சகாப்தம் ஏன் ? எப்படி? 
தொகுப்பாசிரியர் கி. வீரமணி
திராவிடர் கழக வெளியீடு
பக்கங்கள் – 160
விலை: ரூ. 100/

********
– பொ. நாகராஜன்.

Comments (0)
Add Comment