இறைவன் – உங்களை (ஏ)மாற்றும் ஒரு படம்!

ஜெயம் ரவி படங்கள் என்றால் குடும்பத்தோடு பார்க்கலாம் என்ற நம்பிக்கை எப்போதும் சாதாரண ரசிகர்கள் மத்தியில் உண்டு.

இதற்கு முன்னர் ‘ஆதி பகவன்’, ‘சகலகலா வல்லவன்’ போன்ற ஓரிரு படங்கள் அந்த நியதியை மீறியிருந்தன. அவை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெறாமல் போயின.

தற்போது அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அழகம்பெருமாள், நரேன், விஜயலட்சுமி, ராகுல் போஸ், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘இறைவன்’ படமும் ‘சைக்கோ த்ரில்லர்’ வகைமையில் அமைந்து ‘ஏ’ சான்றிதழைப் பெற்றுள்ளது.

இந்தப் படம் எப்படியிருக்கிறது? ஜெயம் ரவி கேரியரில் முக்கியமான படமாக இது அமைந்திருக்கிறதா?

தொடர் கொலைகள்!

சென்னையில் அடுத்தடுத்து இளம்பெண்கள் கொல்லப்படுகின்றனர்.

அவர்கள் கொல்லப்பட்ட விதமும், பிணம் கிடைக்கும் முறையும் காவல் துறையினரை உலுக்குகின்றன.

அது மட்டுமல்லாமல், அந்தக் கொலையாளி தன்னுடைய பெயரை பிரம்மா (ராகுல் போஸ்) என்ற ஸ்மைலி கில்லர் என்றும் வெளிப்படையாகத் தெரிவிக்கிறார்.

அதையடுத்து, அந்தக் கொலையாளியைப் பிடிக்க போலீஸ் அதிகாரிகள் ஆண்ட்ரூ (நரேன்), அர்ஜுன் (ஜெயம் ரவி) தலைமையில் ஒரு சிறப்புப் படை அமைக்கப்படுகிறது.

தொடர் கண்காணிப்புகளுக்குப் பிறகு, ஒருநாள் ஆண்ட்ருவும் அவரது குழுவினரும் பிரம்மாவைச் சுற்றி வளைக்கின்றனர்.

அந்த இடத்திற்கு அர்ஜுன் செல்லும்போது, ஆண்ட்ரூ தவிர்த்து அனைவரும் கொல்லப்பட்டிருக்கின்றனர். அப்போது, பிரம்மா உடன் நேருக்கு நேர் மோதுகிறார் அர்ஜுன். சில நிமிடங்களில் அந்த இடத்தைச் சுற்றி வளைக்கின்றனர் போலீசார்.

சிறையில் அடைக்கப்பட்டும் பிரம்மா, மருத்துவப் பரிசோதனைக்காக மனநல மருத்துவர்களின் முன்னால் ஆஜர்படுத்தப்படுகிறார்.

எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாத நிலையில், பிரம்மாவைச் சிறையில் அடைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

அந்த நிலையில், பிரம்மா சிறையில் இருந்து தப்புகிறார். அதையடுத்து, அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவரும் அவரது மகளும் கொலை செய்யப்படுகின்றனர்.

அந்த நேரத்தில், அர்ஜுனுக்கும் அந்த கொலையாளி மிரட்டல் விடுக்கிறார். அவரை நேரில் சந்திக்க வருவதாகச் சொல்கிறார்.

பயமும் மிரட்சியும் இல்லாமல் இருந்தாலும், ஆண்ட்ரூ குடும்பத்தினரைக் காப்பாற்றுவதற்காகத் தனது வேலையைத் துறந்து நிற்கிறார் அர்ஜுன்.

அதனால், தன்னால் ஆண்ட்ரூ குடும்பத்தினருக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்று அவர்களை விட்டு விலகுகிறார். அதேநேரத்தில், அந்த கொலையாளியைத் தேடிச் செல்லும் வேலைகளில் இறங்குகிறார்.

அதன்பிறகு என்னவானது? பிரம்மாவை அர்ஜுன் கண்டுபிடித்தாரா? கொலைகளுக்குக் காரணம் அவர்தான் என்பதை உறுதி செய்தாரா என்று சொல்கிறது ‘இறைவன்’.

இந்தக் கதையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்கத் தனக்கு தகுதி உண்டு என்று கருதுகிறார் நாயகன்.

தன்னிடம் மாட்டிக்கொள்ளும் இளம்பெண்களின் கதறலைக் கேட்டு ரசிக்கிறார் வில்லன்.

இருவருமே இறைவன் என்ற பதத்திற்கு தகுதியானவர்கள் இல்லை என்றபோதும், அந்த தலைப்பை படத்திற்குத் தந்திருக்கிறார் இயக்குனர் அகமத்.

கவனம் வேண்டும் ரவி!

ஒருகாலத்தில் ஸ்கிரிப்ட் தேர்ந்தெடுப்பதில் மன்னனாகத் திகழ்ந்தவர் ஜெயம் ரவி. விதவிதமான படங்களைத் தருவதில் சூரர். அதேநேரத்தில், அவை அனைத்தும் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கத்தக்கதாகவும் இருக்கும்.

இந்த படத்தில் அந்த நம்பிக்கைகளைக் காற்றில் பறக்க விட்டிருக்கிறார். சரி, அதற்கேற்றாற் போல படத்தில் கனமான கதை இருக்கிறதா என்று பார்த்தால், அதையும் காணவில்லை. அடுத்த படத்திலாவது, உங்கள் ரசிகர்கள் மீது அக்கறை கொண்டு கதைகளைக் கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நயன்தாரா இதில் ஒரு திருமணமாகாத இளம்பெண்ணாக வருகிறார். நாயகன் மீது காதல் கொள்கிறார்.

அதனால், அவரது பாத்திரத்தை நாயகி என்று சொல்ல வேண்டுமா? நயன்தாரா அப்படி நினைத்தால் நமக்கு ஏதும் ஆட்சேபணை இல்லை. அப்படிச் சொல்லும் அளவுக்கே, இந்த படத்தில் அவருக்கு இடம் தரப்பட்டுள்ளது.

நரேனுக்கு இதில் வித்தியாசமான வேடமில்லை. ஆனால், இன்னும் கொஞ்சம் நேரம் திரையில் இடம்பிடித்திருக்கலாம் என்று எண்ண வைக்கிறார்.

அவரது மனைவியாக வரும் விஜயலட்சுமியின் நடிப்பும் அளவெடுத்தாற்போல அமைந்துள்ளது. அவரது மகளாக வரும் ஆலியாவுக்குப் பெரிதாக வேலைகள் இல்லை.

விஸ்வரூபம் படத்தில் கலக்கிய ராகுல் போஸுக்கு இதிலும் அப்படியொரு விறைப்புடனே உலா வருகிறார்.

அவருக்குத் திரையில் பெரிதாக வேலையில்லை. ’நான் மகான் அல்ல’ வினோத் கிஷனுக்கு இதில் நல்லதொரு வாய்ப்பு. ஆனால், வழக்கம்போல நடிக்கவைத்து அதையும் வீணாக்கியிருக்கிறது படக்குழு.

இவர்கள் தவிர்த்து ஆசிஷ் வித்யார்த்தி, பக்ஸ், உதயபானு மகேஸ்வரன், அஸ்வின் குமார், பக்ஸ் என்று பலர் இதில் தோன்றியிருக்கின்றனர்.

டிஐக்கு இடம் தந்து சிறப்பான பங்களிப்பை நல்கியிருக்கிறது ஹரி கே.வேதாந்தத்தின் ஒளிப்பதிவு. பல்வேறு லொகேஷன்களில் படமாக்கப்பட்டிருப்பது பார்ப்பவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

மணிகண்ட பாலாஜியின் படத்தொகுப்பு, அனைத்து காட்சிகளையும் ஒன்றாகக் கோர்த்து பார்வையாளர்கள் இருக்கையில் அமர்வதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க வைக்கிறது. சீராகக் கதை திரையில் விரிகிறதா என்று அவர் ஏன் கவனிக்கத் தவறினார் என்பது தெரியவில்லை.

கலை இயக்குனர் ஜாக்கியின் குழு, இது ஒரு பிரமாண்டமான பட்ஜெட் படம் என்பதை உணர்த்த முயன்றிருக்கிறது.

படம் முழுக்கவே தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. நடிப்புக்கலைஞர்களும் சிறப்பான முறையில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

எல்லாம் சரிதான். ஆனால், படம் தான் பார்க்கும்படியாக இல்லை. அதற்கு இப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய இயக்குனர் அகமது மற்றும் அவரது குழுவினர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

போதும்பா.. போதும்..!

இப்போது உலகம் முழுக்கப் பல வெப்சீரிஸ்கள், படங்களில் சைக்கோ கொலைகாரர் பாத்திரங்கள் காட்டப்படுகின்றன. ஏன், சமீபத்தில் வெற்றி பெற்ற ‘போர்தொழில்’ கூட அப்படியொரு பின்னணியைக் கொண்டதுதான்.

அந்த படங்களில் எல்லாம், கொலையாளி மீது பார்வையாளர்களான நமக்குக் கோபமும் கொந்தளிப்பும் அருவெருப்பும் ஒருசேர உண்டாகின. அவரிடம் சிக்கிக்கொள்பவர்கள் மீது அனுதாபம் எழுந்தது. இதில் இரண்டுமே உண்டாகவில்லை.

அதற்கு, திரைக்கதையில் இருக்கும் நேர்த்தியின்மையே காரணம். கொஞ்சம் முயன்றிருந்தால், இதே கதையை ரசிக்கும்விதமாகக் காட்சியாக்கம் செய்திருக்க முடியும். ஆனால், நாயகனுக்கு அதீத பில்டப் கொடுக்க முயன்று அனைத்தையும் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர்.

த்ரில்லர் படமென்றால் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அசைவும் பேசும் வசனமும் காட்சியாக்கத்தில் வெளிப்படும் நுணுக்கமான விவரணையும் மிக முக்கியம். அவை அமையும்போது, வழக்கமான கமர்ஷியல் சினிமாவுக்குரிய அம்சங்கள் இல்லாதபோதும் ரசிக்கப்படும். இந்த படத்தில், அது நிகழவே இல்லை.

ஆண்ட்ரூ எப்படி கொலையாளி பிரம்மா இருப்பிடத்தைக் கண்டறிகிறார் என்பது திரையில் விலாவாரியாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அந்த இடத்தை ‘ஜஸ்ட் லைக் தட்’ தாண்டிச் செல்லும் இயக்குனர், வேண்டாத விஷயங்களை எல்லாம் புடம் போட்டு விளக்கியிருக்கிறார்.

ஒரு கதையில் கடவுளின் இருப்பைக் காட்ட வேண்டுமா வேண்டாமா என்பது அதன் இயக்குனரைப் பொறுத்தது.

ஆனால், இறைவன் என்று பெயர் வைத்துவிட்டு கடவுள்தன்மையான செயல்பாடுகளைக் காட்டியாக வேண்டிய கட்டாயம் இதன் இயக்குனர் அகமதுவுக்கு உள்ளது.

அவரோ, உயிரை எடுக்கத் துணியும் நாயகனையும் வில்லனையும் அந்த வார்த்தையோடு பிணைக்க முயன்றிருக்கிறார். அதுவே, இப்படம் ரசிகர்களை அசூயைக்குள் தள்ளுகிறது.

யாரோ சொன்ன கதையை அரைகுறையாகக் கேட்டுவிட்டு, அதற்குத் திரைக்கதை அமைத்தால் என்ன பலன் கிடைக்கும்? அதுவே இப்படத்தில் நமக்குக் காணக் கிடைக்கிறது.

இதற்கு ’பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்’ எனும் எண்ணமே நமக்குள் மேலோங்குகிறது. எப்படிப்பட்ட படம் தந்தாலும் பார்ப்போம் என்ற ஒரு சில ரசிகர்களின் மனநிலையை இப்படம் அறவே மாற்றும்.

படம் சம்பந்தப்பட்ட பேட்டிகளில், தனக்கு ‘சைக்கோ த்ரில்லர்’ வகைமை படங்கள் பிடித்தமானதல்ல என்றே இயக்குனர் அகமது சொல்லி வருகிறார். அப்படியொருவர், ஏன் இப்படியொரு படத்தைத் தர வேண்டும்? அதற்கான கட்டாயம் என்ன? தெரியவில்லை.

இந்த படத்தில் சைக்கோ கொலையாளியாக வரும் ராகுல் போஸ், வினோத் கிஷனிடம் கொசுக்களை கொல்லும் பேட்டை கொடுக்கும் காட்சி உண்டு.

அதனைத் தந்து கொசுக்களை கொல்லச் சொல்வார். அவரும் அவ்வாறே செய்வார்.

‘இந்த கொசுக்களை கொன்றபோது என்ன தோன்றியது’ என்று ராகுல் போஸ் கேட்க, வினோத் கிஷன் முழிப்பார்.

அந்த இடத்தில், கொசுக்களை ஒரு உயிராக மதிக்காத மனிதர்கள் அனைவருமே ‘சைக்கோ கில்லர்’ தான் என்று சொல்ல முனைந்திருக்கிறார் இயக்குனர். ஆனால், அது அப்படியே உல்டாவாகி ஒவ்வொருவரும் கொசு பேட் வாங்க கடைக்குச் செல்லும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

ஒரு காட்சிக்கே இந்த விளைவு என்றால், மொத்தப்படமும் பார்ப்பவர்களின் கதியை நினைத்துப் பாருங்கள்.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment