எஸ்.ஜே.சூர்யா அடைந்திருக்கும் உயரம்!

‘மார்க் ஆண்டனி’ படத்துல விஷாலை விட எஸ்.ஜே.சூர்யாதான் விசில் அள்ளுறாரு’ என்ற பேச்சு, அந்தப் படம் வந்தபோது சினிமா ரசிகர்கள் மத்தியில் உருண்டோடிக் கொண்டிந்தது.

அந்தப் பட புரோமோஷனுக்காக எஸ்.ஜே.சூர்யா அளித்த வீடியோ பேட்டியொன்றில், ‘அன்பே ஆருயிரே’ படம் சில ஏரியாக்கள்ல ஒரு கோடி ரூபாய்க்கும் மேலே விற்பனையாச்சு. அதுக்கப்புறம் நான் எப்படியொரு நிலைமையில இருந்திருக்கணும்’ என்ற வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதாவது, தான் இயக்கி நாயகனாக நடித்த நியூ, அன்பே ஆருயிரே படங்களின் வழியே தானே உருவாக்கிக் கொண்ட ‘நட்சத்திர அந்தஸ்தை’ தொலைத்தது பற்றிப் பகிர்ந்திருந்தார்.

மீம்ஸ் கிரியேட்டர்கள் பாணியில் யோசித்தால், ‘இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா, எங்க, எப்படி இருக்க வேண்டியவன் தெரியுமா’ என்று கவுண்டமணி பேசும் ‘டயலாக்’ தொனியில் அது தெரியும்.

இன்னொரு வகையில் பார்த்தால், மிகத்திறமையான மாணவன் ஒருவன் இடைப்பட்ட காலத்தில் பள்ளிக்கு வர இயலாமல் பரீட்சைகள் எழுதாமல் தட்டுத்தடுமாறி மீண்டும் படித்து தேறி ஒரு நல்ல மாணவன் என்ற பாராட்டைப் பெறுவதற்கு ஒப்பானது அது.

அந்த வகையில், இலக்கைத் தவறவிட்ட விரக்தியுடன் மீண்டும் அதனைத் துரத்திக் கொண்டிருக்கும் வேட்கையே எஸ்.ஜே.சூர்யாவிடம் தற்போதிருக்கிறது.

யார் இந்த எஸ்.ஜே.சூர்யா?

நெத்தியடி, கிழக்குச் சீமையிலே படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் எஸ்.ஜே.சூர்யா. அதுவே அவரது ஆரம்பகால இலக்கு என்னவாக இருந்தது என்பதைச் சொல்லிவிடும்.

நாயகன் ஆகும் ஆசையில் சென்னைக்கு வந்து, கல்லூரிப் படிப்பை முடித்து, ஹோட்டல் சர்வர் உட்படச் சிறு சிறு வேலைகள் செய்து, இடைவெளியில் கோடம்பாக்கத்து கதவுகளைப் பலமாகத் தட்டி, ஜி.எம்.குமார் போன்ற இயக்குனர்களிடம் உதவியாளராகச் சேர்ந்து, மெல்ல சினிமாவுக்குள் நுழைந்தவர்.

ஆசை படத்தில் பணியாற்றியபோது, வசந்தின் உதவி இயக்குனர்களில் மிக இளையவராக இருந்திருக்கிறார். தொடர்ந்து எஸ்.டி.சபா, ஜேடி- ஜெர்ரி என்று பல இயக்குனர்களிடம் வேலை செய்திருக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா அடைந்த வெற்றிகளைப் பார்க்கையில், உதவி இயக்குனராக இருந்தபோதே அடுத்தடுத்துப் பல படங்களில் வேலை செய்தாக வேண்டுமென்ற வேகத்துடன் அவர் இருந்தது தெரிகிறது.

ஒருவேளை இயக்குனர் ஆகாமல் போயிருந்தால், அந்தக் குணம் அவரது பொறுமையின்மையாக, பொறுப்பின்மையாகவே கருதப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், இப்படிப்பட்ட விமர்சனங்கள் வருவதை முன்கூட்டியே உணர்ந்து, அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் மனோபாவம் எஸ்.ஜே.சூர்யாவிடம் அப்போதும் உண்டு; இப்போதும் உண்டு.

அதுதான், முன்பின் தெரியாத ஒரு மைதானத்தில் கண்களைக் கட்டிக்கொண்டு வேகமாக ஓடச் சொன்னாலும் ‘தயார்’ என்று பதிலளிக்கும் உத்வேகத்தை அவரிடத்தில் உற்பத்தி செய்கிறது.

2000களில் மிகவேகமாக வளர்ந்து வந்த அஜித், விஜய் என்று இரு நாயகர்களைக் கொண்டு அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் தந்த ஒரு இயக்குனர், அதற்கடுத்த இடங்களில் இருக்கும் நாயகர்களைத் தேடிச் செல்வதே இயல்பு.

இல்லையென்றால் தெலுங்கு, இந்தி மொழிகளில் இன்னும் பிரமாண்டமான படங்களைத் தர விரும்புவார்கள். மாறாக, தன்னை நாயகன் ஆக்கி அழகு பார்க்க வேண்டும் என்ற எண்ணமே எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்தது.

அன்றைய சூழலில், அது ‘கரணம் தப்பினால் மரணம்’ எனும் நிலைக்கு ஒப்பானது. ’இருந்தாலும் பரவாயில்லை’ என்று அந்த சவாலை ஏற்கத் தயாராக இருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

என்னதான் தன்னம்பிக்கை நிறைய உள்ளவர்களாக இருந்தாலும், எல்லோருக்கும் அந்த மனோபாவம் வாய்க்காது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

விட்டதைப் பிடிக்க..?!

திரையில் கதை சொல்வதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இருந்த லாவகம், அதில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், டி.ராஜேந்தர், விசு போன்றவர்களையே அசரடித்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஏனென்றால், ஒரு இயக்குனர் தான் நடிப்பதற்கு ஏற்றாற் போலக் கதைகளையும் பாத்திரங்களையும் செதுக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் அவர்கள் தான்.

ஆனால், அவர்கள் செய்த அதே தவறை எஸ்.ஜே.சூர்யாவும் அடியொற்றினார். பிற இயக்குனர்களின் படங்களில் நடித்தார்.

அந்த இயக்குனர்களில் பலர், எஸ்.ஜே.சூர்யாவைத் திரையில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற யோசனைகளுக்கே வேலை வைக்கவில்லை. மாறாக நியூ, அன்பே ஆருயிரே படங்களின் வழியே எஸ்.ஜே.சூர்யா திரையில் உருவாக்கி வைத்திருந்த பிம்பத்தை ஊதிப் பெரிதாக்கவே முயன்றனர். ஒரு பலூனை விட அது மெலிதானது என்பதை மறந்துவிட்டனர்.

தமிழ்வாணன் இயக்கத்தில் நயன்தாராவோடு எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘கள்வனின் காதலி’ இளம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஆனால், குடும்பப் பாங்கான படங்களில் அவரை நடிக்க வைக்க முடியாது எனும் முத்திரையைச் சூடிக்கொண்டது.

அதனை உடைக்க, மீண்டும் தனது இயக்கத்தில் ஒரு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்க வேண்டும். அதனைச் செய்யாமல் விட்டது பெருந்தவறாகிப் போனது.

தொடர்ந்து வந்த வியாபாரி, திருமகன், நியூட்டனின் மூன்றாம் விதி எல்லாம் பெருந்தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு ‘நண்பன்’ படத்தில் ஒரு காட்சியில் தோன்றியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

’பீட்சா 2’வில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த காலகட்டம் தான், தன்னிடம் இருந்து எப்படிப்பட்ட நடிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதனை அவருக்குப் புரிய வைத்தது.

அப்போதும், விடாப்பிடியாக ‘இசை’ எனும் படத்தை இயக்கி நடித்தார். அதற்காக, ஒரு இசையமைப்பாளராகவும் மாறினார். நடிகை ரேணு தேசாய் இயக்கிய ஒரு மராத்தி படத்திற்கு இசையமைத்தார். ’காட்பாதர்’ எனும் ஒரிய மொழிப் படத்தில் வில்லனாக நடித்தார்.

2016இல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘இறைவி’ படம், எஸ்.ஜே.சூர்யாவை எப்படிப்பட்ட பாத்திரங்களிலும் நடிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்தது.

இடைப்பட்ட காலத்தில், நடிப்பில் தான் தவறவிட்ட இடத்தை மீண்டும் அடைவதற்கான பயிற்சிகளை தனக்குத்தானே அவர் மேற்கொண்டு வந்தார் என்பதுதான் உண்மை.

ரஜினி, சத்யராஜ் வழியில்..!

எழுபதுகளின் இறுதியில் வில்லன் வேடங்களில் நடித்த ரஜினிக்கு மாபெரும் வரவேற்பைத் தந்தனர் ரசிகர்கள். ஆடு புலி ஆட்டம், பதினாறு வயதினிலே உள்ளிட்ட பல படங்களில் அவரது இருப்புக்கு அபாரமான வரவேற்பு கிடைத்தது.

எண்பதுகளில் அந்த பாணியை எளிதாகப் பின்பற்றினார் சத்யராஜ். நூறாவது நாள், 24 மணி நேரம், காக்கி சட்டை போன்ற படங்களில் அமர்க்களப்படுத்தியிருந்தார்.

நம்பியார், வீரப்பா காலத்தில் வில்லத்தனமான காட்சிகளுக்கு வரவேற்பு கிடைத்ததே இல்லை; அதனைக் கண்டு இழிவைக் கொட்டியவர்களும் பயந்து நடுங்கியவர்களும் தான் அதிகம்.

ஆனால், அடுத்த தலைமுறை ரசிகர்கள் மாறியிருந்ததைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு ரஜினியும் சத்யராஜும் நாயகர்களாக உருமாறினார்கள். தொண்ணூறுகளில் சரத்குமார், ஆனந்தராஜ், நெப்போலியன் போன்றவர்கள் அதனைப் பின்பற்றினர்.

தற்போது அதே வழியில் பயணித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. ஸ்பைடர், மெர்சல் படங்கள் அதற்குப் பாதை அமைத்துத் தந்தன. மாநாடு அவரது வில்லத்தனமான நடிப்பில் புதிய பரிமாணம் காட்டியது என்றால், மார்க் ஆண்டனி அதனை வேறொரு உயரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

இவற்றுக்கு இடையே தனது நகைச்சுவை, காதல், சென்டிமெண்ட் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை, பொம்மை படங்களையும் எஸ்.ஜே.சூர்யா தவிர்க்கவில்லை.

டான், வாரிசு படங்களில் அவருக்கான காட்சிகள் குறைவென்றபோதும், அவற்றுக்கு ரசிகர்களிடம் கிடைத்த ஆரவாரம் மிக அதிகம்.

அதனாலேயே, தான் நடிக்கும் படங்களின் கதை, நாயக பாத்திரம், பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல அவர் சம்பளம் வாங்குவதாகவும் ஒரு தகவல் சினிமா செய்தியாளர்கள் மத்தியில் உலவுகிறது.

இந்த அணுகுமுறை, ஒரு டெம்ப்ளேட்டுக்குள் சிக்கிக் கொள்கிற அபாயத்தைச் சுக்குநூறாக்குவது நிச்சயம். அது வரவேற்கத்தக்கதும் கூட.

இவையெல்லாம் சேர்ந்துதான், அடுத்து வரும் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், கேம் சேஞ்சர், இந்தியன் 2 படங்களில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பு எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு இளைய தலைமுறையை, குறிப்பாக பதின்பருவத்தினரால் அதிகம் ரசிக்கப்படுகிறது. அதற்கேற்றாற்போல, திரையில் நஞ்சான அம்சங்களை வெளிப்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. அதற்கான மெனக்கெடல்களில் அவர் இறங்க வேண்டும்.

குறிப்பாக, ‘உள்ளே வெளியே’ படத்திற்குப் பிறகு ‘புள்ளகுட்டிக்காரன்’, ‘ஹவுஸ்ஃபுல்’ படங்கள் வழியே தன்னைக் குறித்து ரசிகர்கள் மத்தியில் இருந்த பிம்பத்தை மெல்ல மாற்றினார் பார்த்திபன்.

அதற்கு ‘பாரதி கண்ணம்மா’, ‘சொர்ணமுகி’ போன்ற படங்களும் ஒருவகையில் காரணமாக அமைந்தன.

ஆதலால், பிற இயக்குனர்கள் படங்களில் நடிப்பதோடு, தன்னைத்தானே புடம் போட்டுக்கொள்ளும் வகையில் சில படங்களை எஸ்.ஜே.சூர்யா இயக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட பாத்திர வடிவமைப்புக்குள் சிக்கிவிடாதவாறு, தனக்கான பாணியைத் தொடர வேண்டும். அது நிகழும்போது நியூ, அன்பே ஆருயிரே படங்களுக்குப் பிறகு அடைந்திருக்க வேண்டிய உயரத்தைக் காட்டிலும் பெரிய சிகரங்களை எஸ்.ஜே.சூர்யா எட்டுவது நிச்சயம். அதற்கான காலம் தற்போது செழுமையாகக் கனிந்திருக்கிறது..!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment